PUBLISHED ON : ஜன 31, 2024 12:00 AM

'விளம்பரத்துக்கு ஆசைப்பட்டால் இப்படித் தான் தர்மசங்கடத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்...' என, கேரள சுற்றுலா துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான, முகமது ரியாசை கிண்டலடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.
இங்கு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சுற்றுலா துறை அமைச்சராக உள்ள முகமது ரியாஸ், முதல்வர் பினராயி விஜயனின் மருமகன்.
இளைஞர் என்பதால்,தன் துறைக்கு உட்பட்ட பணிகள் வேகமாக நடக்க வேண்டும் என்பதிலும், அதை மக்களிடம் விளம்பரப்படுத்துவதிலும், இவருக்கு ஆர்வம் அதிகம்.
இதனால், மாநிலம்முழுதும் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று, அங்கு நடக்கும் பணிகளை ஆய்வு செய்து, அது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில், கேரளாவில் சுற்றுலா தலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் தரமாக இருப்பதாக கூறி, அது குறித்த வீடியோவை
வெளியிட்டார், ரியாஸ். இதைப் பார்த்த கேரள மாநில பா.ஜ.,வினர், 'மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, விளம்பரப்படுத்தும் கேரள சுற்றுலா
துறை அமைச்சருக்கு நன்றி...' என, பதிலடி கொடுத்திருந்தனர். முகமது ரியாசோ, 'நமக்கு விளம்பரம் தேடப் போய், அது மத்திய அரசுக்கு சாதகமாக மாறி விட்டதே... இனி, மாற்றித் தான் யோசிக்க வேண்டும்...' என, புலம்புகிறார்.