PUBLISHED ON : ஜூன் 15, 2024 12:00 AM

'ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் சோதனை வரலாம்; ஆனால், சோதனையே வாழ்க்கையாகி விடக் கூடாது...' என, தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் பற்றி கவலைப்படுகின்றனர், அவரது கட்சியினர்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, தனி மாநிலம் உருவானதில் இருந்து, தொடர்ந்து, 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த சந்திரசேகர ராவ், மிகப் பெரிய அரசியல் செல்வாக்குடன் வலம் வந்தார்.
'கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எனக்கு எதிரிகளே தென்படவில்லை...' என, பொதுக் கூட்டங்களிலும், பிரசாரங்களிலும் பெருமையாக கூறுவார். ஆனால், கடந்த சட்டசபை தேர்தல், அவரது ஆணவத்துக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டது. காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்ததுடன், மாடிப்படியில் தவறி விழுந்து, சந்திரசேகர ராவின் இடுப்பு எலும்பும் முறிந்து போனது.
இதில் இருந்து தேறி வந்த சில நாட்களிலேயே, அடுத்த சோதனையாக லோக்சபா தேர்தல் வந்தது. இந்த தேர்தலில், ஒரு தொகுதியில் கூட பாரத் ராஷ்ட்ர சமிதி வெற்றி பெறவில்லை. ஆனால், காங்கிரஸ், பா.ஜ., ஆகியவை தலா, எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்று, சந்திரசேகர ராவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தன.
இதனால் கவலை அடைந்துள்ள பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினர், 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விட்டதே; நம் நிலைமை...' என புலம்புகின்றனர்.