PUBLISHED ON : ஜூன் 16, 2024 12:00 AM

'இருந்தாலும், இவரது குடும்பத்துக்கு இவ்வளவு அவமானம் நேர்ந்திருக்கக் கூடாது...' என ஹிமாச்சல் பிரதேச அமைச்சர் விக்ராமாதித்யா சிங்கை பற்றி கவலைப்படுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
ஹிமாச்சலில் முதல்வர் சுக்வீந்தர் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்துக்கு முன், இங்குள்ள பஷார் பகுதியை ஆட்சி செய்த ராஜபுத்திர மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான், விக்ரமாதித்யா சிங்.
இவரது தந்தை, ஹிமாச்சலில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமைக்குரிய வீர்பத்ர சிங். இவர், 21 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். வீர்பத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங்கும், தீவிரமாக அரசியலில் இயங்கி வருகிறார்.
இவர்கள் காங்கிரஸ் மேலிடத்துக்கு மிகவும் விசுவாசமானவர்கள். இந்த குடும்பத்துக்கு பாரம்பரியமான லோக்சபா தொகுதி, ஹிமாச்சலின் மண்டி. இங்கு வீர்பத்ர சிங் இரண்டு முறையும், பிரதிபா சிங் இரண்டு முறையும் எம்.பி.,க்களாக இருந்துள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விக்ரமாதித்யா சிங்கும், பா.ஜ., சார்பில் பிரபல நடிகை கங்கனா ரணாவத்தும் போட்டியிட்டனர்.
அரசியல் செல்வாக்கு காரணமாக விக்ரமாதித்யா எளிதில் வெற்றி பெறுவார் என அனைவரும் நினைத்தனர். ஆனால், ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அவரை, கங்கனா தோற்கடித்து விட்டார்.
'மன்னர் குடும்பம், மன்னர் குடும்பம் எனக் கூறி, இப்படி நடுத்தெருவில் நிறுத்தி விட்டனரே...' என கதறுகிறார், விக்ரமாதித்யா சிங்.