PUBLISHED ON : ஜூன் 14, 2024 12:00 AM

'ஒரு தேர்தலில் வெற்றி பெற்றதற்கே இவ்வளவு ஆர்ப்பாட்டமா...' என, சமாஜ்வாதி கட்சியினரை கிண்டல் அடிக்கின்றனர், உத்தர பிரதேச மாநில பா.ஜ.,வினர்.
இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், இங்கு யாரும் எதிர்பாராத வகையில், காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சிகள் இணைந்த, 'இண்டியா' கூட்டணி 42 தொகுதிகளில் வெற்றி பெற்று, பா.ஜ.,வுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இதில் சமாஜ்வாதி மட்டுமே, 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
சமாஜ்வாதிக்கு கிடைத்த இந்த வெற்றியை, அந்த கட்சி தலைவர்களாலேயே இன்னும் நம்ப முடியவில்லை. லோக்சபாவில் பா.ஜ., பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு, உ.பி.,யில் ஏற்பட்ட தோல்வி தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ், அவரது மனைவி டிம்பிள் ஆகியோர் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் முக்கியமானவர்கள். தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஒரு வாரத்துக்கு மேலாகி விட்ட நிலையிலும், சமாஜ்வாதி கட்சியினர், தங்களின் வெற்றியை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.'உ.பி.,யின் அடுத்த முதல்வர் அகிலேஷ் தான்...' என கூறி வருகின்றனர்.
இதைக் கேட்டு கடுப்பான பா.ஜ.,வினர், 'நாங்களும் இங்கு 33 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இதை மறந்து விட்டு, சமாஜ்வாதி கட்சியினர் ஆட்டம் போடுகின்றனர். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம் என்று பார்ப்போம்...' என்கின்றனர்.