PUBLISHED ON : ஜூலை 13, 2024 12:00 AM

'சரியாக திட்டமிட்டு தான் செய்கின்றனர்; ஆனால், நம்மிடம் பேசும்போது மட்டும் நல்லவர்கள் போல் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்...' என, தன் அரசியல் எதிரிகள் குறித்து பேசுகிறார், கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையா.
கடந்த ஆண்டு மே மாதம், கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததும், முதல்வர் பதவியை பிடிக்க சித்தராமையாவுக்கும், சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக, சோனியா ஆலோசனைப்படி, சித்தராமையா முதல்வராகவும், சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
'இப்போதைக்கு துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம்...' என, சிவகுமாரிடம் சோனியா கூறினார். இதை ஏற்றுக் கொண்டாலும், சிவகுமார் ஆதரவாளர்கள், சித்தராமையா தொடர்ந்து முதல்வராக பதவி வகிப்பது குறித்து, அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீப காலமாக இந்த விவகாரம் தீவிரம் அடைந்து உள்ளது. சித்தராமையாவுக்கு எதிராக கலக குரல்கள் அதிகம் எழுந்துள்ளதால், அவரும் பதிலடி கொடுக்க துவங்கியுள்ளார். 'துணை முதல்வர் பதவியில், இன்னும் இரண்டு பேரை மண்டல வாரியாக, சமுதாய வாரியாக நியமிக்க வேண்டும். சிவகுமார் மட்டும் துணை முதல்வர் பதவியை வகிப்பது நியாயமில்லை...' என, சித்தராமையா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
'சிவகுமாரிடம் பணம் இருக்கலாம்; ஆனால், எங்கள் தலைவரிடம் அரசியல் அனுபவம் உள்ளது...' என, பெருமையுடன் கூறுகின்றனர், சித்தராமையா ஆதரவாளர்கள்.