PUBLISHED ON : ஜூலை 12, 2024 12:00 AM

'பாவம், அவரை 24 மணி நேரமும் பீதியிலேயே உறைய வைத்திருக்கின்றனர்...' என, ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை பற்றி குறிப்பிடுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள்.
ஆந்திராவில், முதல்வர்சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது ஜெகன்மோகன் முதல்வராக இருந்தபோது, சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தார்; உச்சக்கட்டமாக சந்திரபாபுவை சிறையில் அடைத்தார்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்று, சந்திரபாபு நாயுடு முதல்வரானதும், மாநிலம் முழுதும் ஜெகன் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. ஜெகன் கட்சி அலுவலகங்களில் தாக்குதல், தீ வைப்பு என, வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
'அடுத்ததாக, ஜெகன் மீதும் வழக்கு பாயலாம்; ஏதாவது ஒரு வழக்கில் அவரை சிக்க வைத்து, சிறையில் தள்ள சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்...' என, தகவல்கள் வெளியாகின்றன.
இதனால் கலக்கத்தில் உள்ளார், ஜெகன். 'சிறைக்கு போய்விட்டால், கட்சி நிர்வாகிகளை சந்திரபாபு நாயுடு, தன் பக்கம் இழுத்து விடுவாரே... இதனால், கட்சி காணாமல் போய் விடுமே...' என புலம்புகிறார்.
தெலுங்கு தேசம் கட்சியினரோ, 'ஆட்சியில் இருந்தபோது சற்று அடக்கி வாசித்திருந்தால், இப்போது புலம்ப வேண்டியிருக்காதே...' என, கிண்டலடிக்கின்றனர்.