PUBLISHED ON : ஜூலை 14, 2024 12:00 AM

'இப்படி நடக்கும் என அவர்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டர்...' என, கேரள மாநில காங்கிரசின் மூத்த நிர்வாகிகளை கிண்டல் அடிக்கின்றனர், சக அரசியல்வாதிகள்.
இங்கு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று, கடந்த எட்டு ஆண்டுகளாக முதல்வர் பதவியில் உள்ளார், பினராயி விஜயன்.
ஆனாலும், கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களிலும், இங்கு காங்கிரஸ் கூட்டணியே அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல், இங்குள்ள வயநாடு மற்றும் உ.பி.,யில் உள்ள ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார்.
இதில், வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கேரளாவில் உள்ள காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர், தங்களுக்கு வயநாடு தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என்றும், அப்படி கிடைத்தால் எளிதில் எம்.பி.,யாகி விடலாம் என்றும், மனக்கோட்டை கட்டினர்.
ஆனால், 'வயநாடு தொகுதியில், என் சகோதரி பிரியங்கா போட்டியிடுவார்' என, ராகுல் அறிவித்து விட்டார். இதனால், அதிர்ச்சியில் உறைந்துள்ள நிர்வாகிகள், பிரியங்கா போட்டியிடுவதற்காக சந்தோஷப்படுவதா அல்லது தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் துக்கப்படுவதா என தெரியாமல், இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர்.