PUBLISHED ON : ஜூலை 09, 2024 12:00 AM

'சவாலான விஷயம் தான்; எப்படி இதை சமாளிப்பார் என தெரியவில்லை...' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பற்றி பேசுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.
பிரதமர் மோடி தலைமையிலான மூன்று அரசுகளிலுமே அமைச்சர்களாக இருந்த ஒரு சிலரில், தர்மேந்திர பிரதானும் ஒருவர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த முறை ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி அமைத்தால், முதல்வராக பதவியேற்பார் என கூறப்பட்டவர். ஆனால், மீண்டும் மத்திய அமைச்சரவையிலேயே இவருக்கு இடம் கிடைத்தது.
பதவியேற்றதுமே இவருக்கு நெருக்கடி துவங்கி விட்டது. மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடு விவகாரம், இப்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
நீட் தேர்வை நடத்தும், தேசிய தேர்வு முகமையின் தலைவரே, அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு,சி.பி.ஐ., வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பீஹார், உ.பி., போன்ற மாநிலங்களுக்கு சி.பி.ஐ, அதிகாரிகள் சென்று, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
மோடி தலைமையில், இரண்டாவது முறையாக ஆட்சி அமைந்தபோது, கொரோனா தொற்று பரவி, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்த்தனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. கடைசியில், அவரது பதவியே பறிக்கப்பட்டது.
இப்போது, அதுபோன்ற ஒரு நெருக்கடி தர்மேந்திர பிரதானுக்கு ஏற்பட்டுள்ளது. 'என்னதான் திறமையானவர் என்றாலும், அதிர்ஷ்டமும் முக்கியமல்லவா...' என்கின்றனர், சக அரசியல்வாதிகள்.