PUBLISHED ON : ஜூலை 08, 2024 12:00 AM

'என்ன இருந்தாலும், இப்படி பேசியிருக்க கூடாது...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியை பற்றி வருத்தத்துடன் கூறுகின்றனர், இங்குள்ள உள்ளாட்சி துறை பிரதிநிதிகள்.
சமீபத்தில், மாநிலம் முழுதும் உள்ள உள்ளாட்சி துறை பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம், கோல்கட்டாவில் நடந்தது. இதில் பேசிய மம்தா பானர்ஜி, உள்ளாட்சி துறை பிரதிநிதிகளை, சரியாக வேலை பார்க்கவில்லை என, வறுத்தெடுத்தார்.
'மாநிலம் முழுதும் மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு, உங்களுக்கு உள்ளது. ஆனால், பணிகளை செய்து கொடுக்க லஞ்சம் கேட்கப்படுவதாகவும், முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் வருகின்றன.
'மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஒழுங்காக வேலை செய்யா விட்டால் உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து விடுவேன். துடைப்பத்தை கையில் எடுத்து, வீதிகளை நானே சுத்தம் செய்வேன். அப்புறம் உங்களுக்கு வேலை இருக்காது...' என சீறினார், மம்தா.
எதற்காக மம்தா இவ்வளவு கோபப்படுகிறார் என விசாரித்தபோது, பா.ஜ., பிரமுகர் ஒருவர் இதற்கு பதில் அளித்தார்.
'சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில், கோல்கட்டா உட்பட பல மாநகராட்சிகளில் திரிணமுல் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்த கோபத்தை தான், இப்படி வெளிப்படுத்துகிறார்...' என்றார் அவர்.