PUBLISHED ON : ஜூலை 10, 2024 12:00 AM

'புரளியை கிளப்புவதே இவர்களுக்கு வேலையாக போய் விட்டது...' என புலம்புகிறார், தெலுங்கானா முதல்வரும், காங்கிரசை சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டி.
மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான பியுஷ் கோயல், சமீபத்தில் ஹைதராபாத் வந்திருந்தார். அரசு முறை பயணம் என்பதால், முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேசினார்.
முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வந்த பியுஷ் கோயல், ரேவந்த் ரெட்டியுடன் நீண்ட நேரம் பேசிவிட்டு சென்றார். தெலுங்கானா காங்கிரசில், ரேவந்த் ரெட்டிக்கு எதிர்ப்பாளர்கள் அதிகம் உள்ளனர்.
மூத்த தலைவர்கள் பலர் இருக்கும் போது, இளைஞரான ரேவந்த் ரெட்டி முதல்வரானதை ஜீரணிக்க முடியாத இந்த தலைவர்கள், 'ரேவந்த் ரெட்டி பா.ஜ.,வில் சேரப் போகிறார். அதற்காகத் தான், பியுஷ் கோயலை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்...' என, வதந்தியை பற்ற வைத்தனர்.
இதனால் கடுப்பான ரேவந்த் ரெட்டி, 'மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், எப்போதுமே அரசியல் வேறுபாடுகளை கடந்து நட்புடன் பழகக் கூடியவர்.
'இதற்கு முன் தெலுங்கானா முதல்வராக இருந்த பாரத் ராஷ்ட்ர சமிதியின் சந்திரசேகர ராவுடன் நட்புடன் பழகினார். இப்போது என்னுடன் பழகுகிறார். வீட்டுக்கு வந்தவரை உபசரிக்காமல், திருப்பி அனுப்பவா முடியும். வதந்தியை கிளப்புவதற்கு ஒரு அளவு இல்லாமல் போய் விட்டது...' என, கொந்தளிக்கிறார்.