PUBLISHED ON : ஜூலை 22, 2024 12:00 AM

'எதிர்க்கட்சியினரே தோற்கும் அளவுக்கு இருக்கிறது இவரது செயல்பாடுகள்...' என, கேரள கவனர் ஆரீப் முகமது கான் குறித்து குறிப்பிடுகின்றனர், இம்மாநில மக்கள்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பல ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட விழிஞ்ஞம் துறைமுகத்தின் பணிகள் முடிவடைந்து, சமீபத்தில் திறப்பு விழா நடந்தது.
இதில், முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றார்; ஆனால், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் காங்கிரஸ் மூத்த தலைவரான, மறைந்த உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது தான், இந்த திட்டம் துவங்கப்பட்டது.
இதனால், ஆவேசம் அடைந்த காங்கிரஸ் கட்சியினர், ஆளும் அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். 'அரசு நிகழ்ச்சியில் பிரதான எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுக்காதது ஏன்...' என, ஆவேசமாக குரல் எழுப்பினர்.
இது குறித்து, கேரள கவர்னர் ஆரீப் முகமது கானிடம், சில செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே பல பிரச்னைகளில் கேரள அரசுடன் மோதல் போக்கை பின்பற்றி வரும் ஆரீப் முகமது கான், 'துறைமுகம் திறப்பு விழா நடக்கிறதா; எனக்கு அப்படி எதுவும் தகவல் இல்லையே...' என, கிண்டலாக பதில் அளித்தார்.
'திறப்பு விழாவுக்கு தனக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்பதைத் தான், கவர்னர் இப்படி குத்தி காட்டுகிறார். அவருக்கு இவ்வளவு குசும்பு ஆகாது...' என்கின்றனர், பொதுமக்கள்.