PUBLISHED ON : ஜூலை 24, 2024 12:00 AM

'இவருக்கு இந்த ஐடியாவை யார் கொடுத்தது என தெரியவில்லையே...' என, கர்நாடக சட்டசபை சபாநாயகர் யு.டி.காதர் குறித்து, கடுப்புடன் முணுமுணுக்கின்றனர், இங்குள்ள எம்.எல்.ஏ.,க்கள்.
இங்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காதர், சபாநாயகராக பதவி வகிக்கிறார்.
சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களை கட்டுப் படுத்துவது, இவருக்கு பெரிய வேலையாக உள்ளது. அதிலும், பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் சபை நடந்து கொண்டிருக்கும்போதே வெளியில் எழுந்து செல்வது, உள்ளே வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். இவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, சட்டசபையில் அறிமுகப்படுத்த உத்தரவிட்டுள்ளார், காதர்.
இதன்படி, சபை நுழைவாயில் உள்ளே வரும் இடத்திலும், வெளியில் செல்லும் இடத்திலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது; இதனால், எம்.எல். ஏ.க்கள் உள்ளே வரும்போதும், வெளியில் செல்லும்போதும் அவர்களது முகங்கள் பதிவாகி விடும்.
ஒவ்வொருவரும் எத்தனை முறை வெளியில் செல்கின்றனர், எவ்வளவு நேரம் தாமதமாக வருகின்றனர் என்ற தகவல்களை இதன் வாயிலாக துல்லியமாக கணக்கிட முடியும். இந்த விபரங்களை ஒவ்வொரு மாத இறுதியில், சபையில் அறிவிக்கவும் சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.
'இது என்ன புது தொல்லையாக இருக்கிறது. நாம் சபையை, 'கட்' அடிப்பதை மக்களுக்கு தெரியப்படுத்தி விடுவார் போலிருக்கிறதே...' என கட்சி பேதமின்றி எம்.எல்.ஏ.,க்கள் புலம்புகின்றனர்.