Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/யாகத்திற்கு ஈடான திருப்பாவை

யாகத்திற்கு ஈடான திருப்பாவை

யாகத்திற்கு ஈடான திருப்பாவை

யாகத்திற்கு ஈடான திருப்பாவை

ADDED : டிச 17, 2012 03:18 PM


Google News
Latest Tamil News
* பெருமாள் வராக அவதாரம் எடுத்து அசுரர்களை அழித்த பிறகும், பூமிதேவி அழுதாள். வராஹமூர்த்தி தேவியிடம்,'அசுரர்களிடம் இருந்து உன்னைக் காப்பாற்றிய பின்னும் ஏன் அழுகிறாய்?,'' என்று கேட்டார். ''நான் கூக்குரலிட்டபோது ஓடிவந்தீர்கள்! என்னுடைய பிள்ளைகளான எத்தனையோ கோடி உயிர்கள் இங்கு அவஸ்தைப்படுகிறார்கள். என்னைக் காப்பாற்றியது போல அவர்களையும் காப்பாற்ற வேண்டும்,'' என்று பிரார்த்தித்தாள். அப்படிப்பட்ட எல்லையில்லாத அன்பு கொண்ட பூமாதாவே, கோதை என்னும் பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தாள்.

* தாயார்களில் பொறுமை மிக்கவள் பூமிபிராட்டி. நாம் எவ்வளவு தப்பு பண்ணினாலும் அதை பெருமாளிடத்தில் சொல்ல மாட்டாள். ஆனால், நாம் துளி நல்லது செய்து விட்டாலும் அதை பெரிதுபடுத்தி விடுவாள். அவ்வளவு காருண்யம் கொண்ட பிராட்டியே, மனித வடிவெடுத்து ஆண்டாளாக நமக்கு வழிகாட்டி அருள்புரிந்தாள்.

* ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி மூவரும் சூழ்ந்திருந்த போது, பெருமாள் அவர்களிடம், ''பூலோகத்தில் அக்கிரமம் பெருகிவிட்டது. பகவத்கீதையை உபதேசம் செய்தும் கூட யாரும் திருந்தவில்லை. இனி நீங்கள் தான் பூலோகத்தில் அவதரித்து உலகத்தை திருத்தவேண்டும்'' என்று கேட்டார். அப்போது பூமிதேவி, ''அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி,'' என்று முந்திக் கொண்டு நின்றாள்.

* பூலோகத்தில் பூமாதேவி அவதரித்தபோது 'கோதை' எனப்பட்டாள். இதற்கு 'நல்ல வாக்கைக் கொடுப்பவள்' என்று பொருள். திவ்ய மங்களமான கோதையை தியானிப்பவர்க்கு மற்றவர்க்கு நலம் தரும் பேச்சுத்திறனும், ஞானமும் உண்டாகும்.

* கோதை கட்டிய மாலைகள் இரண்டு. பாக்களால் கட்டிய பாமாலையையும், பூக்களால் தொடுத்த பூமாலையையும். அவள் திருமாலின் திருவடிகளிலேயே சமர்ப்பித்தாள். திருமாலைத் தன்னிடத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்ய பூக்களைத் தூதாக அனுப்பினாள். ''என்னுடைய அன்பை எம்பெருமானிடத்தில் தெரியப்படுத்தி அவன் அனுக்கிரஹத்தை எனக்கு உண்டு பண்ணுங்கள்,'' என்று பிரார்த்தித்துக் கொண்டாள்.

* கோதைக்கு என்ன ஏற்றம்! தான் சூடிக்கொடுத்த மாலையால் பகவானுக்கே விலங்கிட்டாள். அவளது திருமேனியில் சாத்திய பொருட்களை நாம் உபயோகிக்கிறோம். ஆனால், அவன் விரும்புவது என்ன? கோதை சூடிய மாலையை அணிந்து கொள்ள விரும்புகிறான். நம்மைப் பூட்டியிருக்கும் விலங்குகள் அனைத்தையும் களைபவனுக்கே, ஆண்டாள் விலங்கிட்டிருக்கிறாள்.

* உய்யக்கொண்டார்,''சூடிக்கொடுத்தாளைச் சொல்லு'' என்று நம்மைப் பார்த்து வேண்டுகிறார். ஆண்டாளின் திருவடிகளை மனதால் நினைத்து, அவள் பெயரைச் சொல்லி சரணாகதி அடைந்து விட்டால் குறைவில்லாத வாழ்வும், இப்பூமியில் பிறப்பெடுக்காத உயர்கதியும் உண்டாகும்.

புகழ்கிறார் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us