Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/பார்த்தசாரதியின் பாதம் பணிவோம்!

பார்த்தசாரதியின் பாதம் பணிவோம்!

பார்த்தசாரதியின் பாதம் பணிவோம்!

பார்த்தசாரதியின் பாதம் பணிவோம்!

ADDED : டிச 24, 2012 03:55 PM


Google News
Latest Tamil News
வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கும் தலங்கள் ஸ்ரீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை ஏகாதசியை ஒட்டி தரிசிப்போமா!

தல வரலாறு:





சுமதிராஜன் என்ற மன்னன் பெருமாள் பக்தன். இவனுக்கு குரு÷க்ஷத்ர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனின் வடிவத்தைத் தரிசிக்க ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை காட்டும்படி பெருமாளிடம் வேண்டினான். சுவாமியும் தேரோட்டியாக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னர், அதே கோலத்தில் சிலை வடித்தார். பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்த போது, பெருமாள் ஆயுதம் எதையும் எடுப்பதில்லை என்று செய்த சபதத்திற்கு ஏற்ப ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி இருக்கிறார். சக்கரம் இல்லை. இவருக்கு 'வேங்கடகிருஷ்ணர்' என்று திருநாமம். இத்தலத்து உற்சவரே பார்த்தசாரதி ஆவார். பிற்காலத்தில் பார்த்தசாரதி பிரசித்தி பெறவே, இவரது பெயரில் கோயில் அழைக்கப்பட்டது.

ஐந்து மூலவர்:





இக்கோயிலில் ஐந்து மூர்த்திகள் மூலவர் அந்தஸ்தில் வணங்கப்படுகின்றனர். பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திரவரதர் மற்றும் யோகநரசிம்மர் உள்ளனர். எனவே இக்கோயில், 'பஞ்சமூர்த்தி தலம்' எனப்படுகிறது. ரங்கநாதர் சந்நிதியில், சுவாமியின் தலை அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர். இவ்வாறு ஒரே சந்நிதிக்குள் பெருமாளின் மூன்று கோலங்களையும் இங்கு தரிசிக்க முடியும். கிழக்கு நோக்கிய மூலவர் வேங்கட கிருஷ்ணன், மேற்கு நோக்கிய யோக நரசிம்மருக்கு இரண்டு கொடி மரங்களும், தனி வாசல்களும் உள்ளன.

ஒலி எழுப்பாத மணி:





யோக நரசிம்மரே இத்தலத்தின் முதல் மூர்த்தியாவார். காலையில் இவருக்கே முதல் பூஜை நடக்கிறது. அத்திரி மகரிஷிக்கு காட்சி தந்த நரசிம்மர் இவர். இவரது சந்நிதியிலுள்ள மணியில் நாக்கு இருக்காது. அலங்காரத்திற்காக கதவில் இருக்கும் மணிகள்கூட, நாக்கு இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தமும், பேச்சு சப்தமும் கேட்கக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோய்கள் நீங்க உப்பு, மிளகை இவரது சந்நிதிக்கு பின்புறத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

மீசையில்லாத தரிசனம்:





தேரோட்டிக்கு அழகு கம்பீரத்தை உணர்த்தும் மீசை. இதனை உணர்த்தும் விதமாக, இக்கோயிலில் வேங்கடகிருஷ்ணர் மீசையுடன் காட்சிதருகிறார். இதனால் இவருக்கு, 'மீசை பெருமாள்' என்றும் பெயருண்டு. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது, பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம். இங்குள்ள தூதுசெல்லும் கிருஷ்ணர் ஓவியம் கண்கவர்வதாகும்.

உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக்கிழமைகளில் விசேஷ அபிஷேகம் நடக்கும் போது மட்டும், மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர். ஏகாதசியன்று காலையில் பார்த்தசாரதி சொர்க்கவாசல் கடப்பதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பர். கண்ணன் குரு÷க்ஷத்ர போரில் காயம்பட்டவர் என்பதால் சிலையில் வடுக்கள் உள்ளதைக் காணலாம். காயத்தால் எரிச்சல் இருக்கும் என்பதால், இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை.

தாயார் சந்நிதி:





வேதவல்லி தாயார் தனி சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். இவள் கோயிலைவிட்டு வெளியேறுவதில்லை. வெள்ளிக்கிழமை மற்றும் உத்திர நட்சத்திரத்தில் கோயில் வளாகத்திற்குள் புறப்பாடாகி, ஊஞ்சலில் காட்சியளிக்கிறாள்.

சர்க்கரைப் பொங்கல் ஸ்பெஷல்:





திருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோயில் உப்பில்லா சாதம், மதுரை கள்ளழகர் கோயில் தோசை ஆகிய பிரசாதங்கள் பிரசித்தி பெற்றிருப்பதைபோல, இக்கோயிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசித்தி பெற்றது. 2 கிலோ அரிசியில் இந்த பொங்கல் தயாரிக்கப் பட்டால், 1 கிலோ 400 கிராம் முந்திரிப்பருப்பும், 700 கிராம் நெய்யும் சேர்க்கப்பட்டு மிக சுவையாக தயாரிக்கப்படும். இந்த நைவேத்யத்தை கட்டணம் செலுத்தி சுவாமிக்கு படைக்கலாம்.

போன்:





044 2844 2462, 2844 2449.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us