Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/வருகிறது மகாளய அமாவாசை கிளம்புவோமா தீர்த்தத்தலத்துக்கு!

வருகிறது மகாளய அமாவாசை கிளம்புவோமா தீர்த்தத்தலத்துக்கு!

வருகிறது மகாளய அமாவாசை கிளம்புவோமா தீர்த்தத்தலத்துக்கு!

வருகிறது மகாளய அமாவாசை கிளம்புவோமா தீர்த்தத்தலத்துக்கு!

ADDED : அக் 07, 2012 05:40 PM


Google News
Latest Tamil News
அமாவாசை நாளில் தீர்த்தக்கரைகளில் அமைந்த கோயில்களுக்குச் சென்று வருவது புண்ணியம் தரும். இங்கு முன்னோருக்கு திதி, தர்ப்பணம் செய்வார்கள். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் காசிபநாதர், தாமிரபரணி நதிக்கரையில் இருக்கிறார். வரும் 15ம் தேதி மகாளய அமாவாசை அன்று இங்கு சென்று வரலாம்.

தல வரலாறு:

காஷ்யப முனிவர் சிவனை வேண்டி யாகம் நடத்தினார். காட்சி தந்த சிவனிடம், தனது ஆத்மார்த்த பூஜைக்காக லிங்க வடிவம் எடுக்கும்படி வேண்டினார். சிவன் ஒரு லிங்கத்தை தோன்றச்செய்து, அதற்குள் ஐக்கியமானார். இந்த லிங்கமே இங்கு இருக்கிறது. முனிவரின் பெயரால், சுவாமிக்கு 'காஷ்யபநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. பேச்சு வழக்கில் 'காசிபநாதர்' என மாறிவிட்டது.

எரித்தாண்டவர்:

இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் தீராத நோயால் பாதிக்கப்பட்டார். நோய் தீர இத்தலத்து சிவனை வேண்டினார். அப்போது அசரீரி ஒலித்தது. ''மன்னா! உன் நோயை ஒரு எள் தானிய பொம்மைக்குள் இடம் மாற்று. அதை ஒரு அந்தணரிடம் கொடு. அவரிடம் அந்த நோயை ஏற்றுக்கொள்ளும்படி சொல்,'' என்றது. ஆனால், இதை ஏற்க பலரும் மறுத்துவிட்டனர். அப்போது அங்கு வந்த, கர்நாடக அந்தணர் ஒருவர், அந்த பொம்மையைப் பெற்றுக் கொண்டார். மன்னனுக்கு நோய் விலகியது. மன்னன், அந்தணருக்கு ரத்தினங்களை பரிசாகக் கொடுத்தான். அப்போது உயிர்பெற்ற பொம்மை, அந்தணரிடம் அவர் கற்ற காயத்ரி மந்திரத்தின் ஒரு பகுதியை தந்தால், அவரை விட்டு விலகுவதாக கூறியது. அந்தணரும் அவ்வாறே செய்து நோயிலிருந்து தப்பினார். மன்னரிடம் பெற்ற பொருளை மக்கள் நன்மைக்கு பயன்படுத்த எண்ணினார் அந்தணர். அதற்காக அகத்தியரிடம் ஆலோசனை கேட்க பொதிகைக்குச் சென்றார். வழியில் இக்கோயில் அர்ச்சகரிடம், ரத்தினங்களை மூடையாகக் கட்டி கொடுத்து விட்டுச் சென்றார்.

அகத்தியரை பார்த்துவிட்டு திரும்பியவரிடம், அர்ச்சகர் ரத்தினத்துக்குப் பதிலாக பருப்பு மூடையைக் கொடுத்தார். அந்தணரிடம் ரத்தினங்கள் எதுவும் பெறவில்லை என சிவன் மீது சத்தியமும் செய்தார். கோபம் கொண்ட சிவன், அர்ச்சகரை எரித்துவிட்டார். ஆனாலும், அர்ச்சகர் மீது பரிதாபம் காட்டிய அந்தணர், அவரை உயிர்ப்பிக்கும்படி சிவனிடம் வேண்டினார். சிவன் அவரை உயிர்ப்பித்தார். பின்பு ரத்தினங்களை மீட்ட அந்தணர், மக்கள் நன்மைக்காக ஒரு கால்வாய் உருவாக்கினார். அவர் கன்னடநாட்டில் இருந்து வந்தவர் என்பதால், அந்தக் கால்வாய் 'கன்னடியன் கால்வாய்' என பெயர் பெற்றது. அந்தணருக்கு அருளிய சிவன் 'எரித்தாட்கொண்டார்' என்ற பெயரில் இருக்கிறார். இவருக்கு பூஜை செய்த பிறகே, காசிபநாதருக்கு பூஜை நடக்கிறது.

சிவன் எதிரில் திருமால்:

இங்குள்ள மரகதாம்பிகை, சமுத்திரம் போல அருளை வாரி வழங்குபவளாக அருளுகிறாள். எனவே இவளது பெயரால் இவ்வூர் 'அம்பாள் சமுத்திரம்' என்று அழைக்கப்பட்டு, 'அம்பாசமுத்திரம்' என மருவியது. பொய் சத்தியம் செய்து ஏமாற்றிய அர்ச்சகரை எரித்த சிவன், உக்கிரமாக இருந்தார். திருமால் அவரை சாந்தப்படுத்தினார். அதற்கேற்ப, இவர் எரித்தாண்ட மூர்த்தி சந்நிதிக்கு எதிரே இருக்கிறார். இங்குள்ள நடராஜர், 'புனுகு சபாபதி' எனப்படுகிறார். வியாழக்கிழமையுடன் சேர்ந்து வரும்தைப்பூசத்தன்று மட்டும் இவருக்கு புனுகு சாத்தி பூஜை செய்யப்படும்.

சிறப்பம்சம்:

கோயிலை ஒட்டி ஓடும் தாமிரபரணியில் தேவி, சாலா, தீப, காசிப, கிருமிகர (புழுமாறி தீர்த்தம்) மற்று கோகிலம் என ஏழு தீர்த்தங்கள், சங்கமித்திருக்கின்றன. அமாவாசையன்று இங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுகிறார்கள்.

இருப்பிடம்:

திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் அம்பாசமுத்திரம். பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோயில்.

திறக்கும் நேரம்:

காலை 6- 11, மாலை 5- 7.30.

போன்:

04634- 253 921.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us