Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/குடும்ப ஒற்றுமைக்கு இனி குறைவில்லை

குடும்ப ஒற்றுமைக்கு இனி குறைவில்லை

குடும்ப ஒற்றுமைக்கு இனி குறைவில்லை

குடும்ப ஒற்றுமைக்கு இனி குறைவில்லை

ADDED : அக் 07, 2012 05:41 PM


Google News
Latest Tamil News
கணவன், மனைவி கருத்து வேறுபாடு குடும்பங்களில் சகஜம். ஆனால், சில சமயங்களில் பிரிவினை அளவுக்கு போய் விடுகிறது. அவர்கள் ஒற்றுமையாக வாழ, திருச்செங்கோடு மலையடிவார கைலாசநாதர் கோயிலுக்கு சென்று வரலாம். இங்கு அம்பாளை அணைத்தபடி சிவன் காட்சி தருகிறார்.

தல வரலாறு:

சிவபெருமானின் சக்தி வடிவமான அம்பிகை, தன்னை அவருடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளும்படி வேண்டினாள். இதற்காக ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து 21 ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவன், அம்பிகையை தனது இடப்பாகத்தில் ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். இந்த அமைப்பில் திருச்செங்கோட்டிலுள்ள மலை உச்சியில் கோயில் எழுப்பப்பட்டது. அம்பிகை பூஜித்த லிங்கத்தின் வடிவில் அடிவாரத்தில் குடி கொண்டார். இவர் கைலாசநாதர் எனப் பெயர் பெற்றார். சுகந்தகுந்தளாம்பிகைக்கும் சந்நிதி எழுப்பப்பட்டது.

பிரதோஷமூர்த்தி:

ரிஷபத்தின் மீது காட்சி தரும் பிரதோஷமூர்த்தி, அம்பாள் தோள் மீது கை போட்டிருக்கிறார். அம்பிகை, சிவன் முதுகில் தன் கையை வைத்து அணைத்திருக்கிறார். சிவனும், அம்பிகையும் ஆலிங்கனம் செய்து இணைந்த தலம் என்பதால், புதுமண தம்பதியர் இல்வாழ்க்கை சிறக்கவும், திருமணமாகாதவர்கள் கருத்தொற்றுமை கொண்ட நல்ல வாழ்க்கைத்துணை அமையவும் இவரை வழிபடுகிறார்கள்.

சிறப்பம்சம்:

முன்னோருக்கு முறையாக தர்ப்பணம் செய்யாமல் பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சிவன் சந்நிதிக்கு பின்புறம் நெய் தீபம் (மோட்ச தீபம்) ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள். அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் செல்பவர்கள், முதலில் அடிவாரத்தில் அருவுருவ (சிவலிங்கம்) வடிவில் காட்சி தரும் சிவனையும், பின் மலையில் உருவ வடிவிலான அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது மரபாக உள்ளது. மலைக்கோயிலில் விழா நடக்கும்போது, அர்த்தநாரீஸ்வரர் இங்கு எழுந்தருளுவார். இங்குள்ள நந்திகூப தீர்த்தத்தின் மேலே பெரிய நந்தி சிலை உள்ளது. கல்வி, கலைகளில் சிறக்க கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தியை வழிபடுகிறார்கள். பிரகாரத்தில் ஒரே இடத்தில் மூன்று விநாயகர்கள் உள்ளனர். கல்வி, செல்வம், தைரியம் ஆகிய மூன்று செல்வங்களும் கிடைக்க இவர்களை வணங்கலாம்.

இருப்பிடம்:

திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் தூரம். அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலின் அடிவாரம்.

திறக்கும் நேரம்:

காலை 6- 12, மாலை 4- இரவு 8 .

போன்:

04288 - 255 925.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us