Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/இந்த யானை... இன்னொரு யானை!

இந்த யானை... இன்னொரு யானை!

இந்த யானை... இன்னொரு யானை!

இந்த யானை... இன்னொரு யானை!

ADDED : அக் 07, 2012 05:38 PM


Google News
Latest Tamil News
கஜேந்திரன் என்ற யானைக்குப் பெருமாள் முக்தி கொடுத்தது போல, மகாசந்தன் என்ற யோகி, யானையாக மாறிய காலத்திலும் முக்தி கொடுத்திருக்கிறார். இவர் ஆதிகேசவப்பெருமாள், அஷ்டபுஜப்பெருமாள் என்ற பெயர்களில் சின்னக்காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கிறார். புரட்டாசி சனியை ஒட்டி இவரது தரிசனம் பெறுவோமா!

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் மகாசந்தன் என்னும் யோகிக்கு இந்த பூவுலக வாழ்க்கையை முடித்து விட்டு இறைவனின் திருவடி சேர விருப்பம் ஏற்பட்டது. இந்திரனுக்கு நிகரான சக்தி பெற்றிருந்த இவர் பெருமாளை நோக்கி நீண்ட காலம் தவமிருந்தார். பயந்து போன இந்திரன் மகாசந்தனின் தவத்தை கலைக்க தேவலோக கன்னிகளை அனுப்பி வைத்தான். இதற்கெல்லாம் அவர்

அசையவில்லை.பின் இந்திரன் ஆண்யானை வடிவமெடுத்து முனிவரின் இருப்பிடம் சேர்ந்தான். இதன் அழகில் மயங்கிய முனிவர் தானும் யானை வடிவெடுத்து காட்டில் திரியும் போது, ஓரிடத்தில் நீராடியது. அப்போது அந்த யானைக்கு தன் யோக வாழ்க்கை ஞாபகத்திற்கு வந்தது. மிகவும் வருந்திய யானை பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளை வழிபட்டு பரிகாரம் தேடியது. மிருகண்டு முனிவர் என்பவர் இதன் நிலை கண்டு வருந்தி, காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை வழிபட்டால் உனது பிரார்த்தனை நிறைவேறும் என்றார். அதன்படியே யானையும் பெருமாளை வழிபட்டு வந்தது. ஒருமுறை கோயிலுக்கு செல்லும் வழியில் அஷ்டபுஜ பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு இதற்கு கிடைத்தது. அவரது அழகில் மயங்கிய யானை அருகிலிருந்த குளத்தில்இருந்து 14 ஆயிரம் மலர்களைபறித்து இறைவனுக்கு சேவை செய்து வந்தது. ஒரு நாள் பூ கிடைக்காமல் போகவே பக்கத்தில்இருந்த குளத்திற்கு சென்று பூ பறித்தது. அப்போது அதிலிருந்த முதலை யானையின் காலை விடாமல் பிடித்து கொண்டது. பயந்து போன யானை அஷ்டபுஜ பெருமாள் தன்னை காப்பாற்றும் படி 'ஆதிமூலமே' என அபயக்குரல் கொடுத்தது.

முன்பொரு முறை கஜேந்திரனை காப்பாற்றிய ஆதிமூலம், இந்த முறையும் கருட வாகனத்தில் ஏறி வந்து தனது சக்கரத்தினால் முதலையை அழித்து யானையைக் காப்பாற்றினார். இங்குள்ள தீர்த்தம் கஜேந்திர புஷ்கரணி எனப்படுகிறது.

எட்டுகைகள் வந்த கதை:

பிரம்மா பூமியில் தனக்கு விக்ரக வழிபாடு இல்லை என்பதற்காக சரஸ்வதியை விட்டுவிட்டு தனியாக யாகம் நடத்தினார். வருந்திய சரஸ்வதி யாகத்தை அழிக்க சரபாஸ்வரன் உள்ளிட்ட அரக்கர்களை அனுப்பி வைத்தாள். தன்னை காக்கும்படி பிரம்மன் பெருமாளை வேண்ட, பெருமாள் 8 திருக்கரங்களுடன் அஷ்டபுஜ பெருமாளாகத் தோன்றி அரக்கர்களை அழித்து யாகம் சிறப்பாக நடைபெறச் செய்தார். 108 திவ்யதேசங்களில் திருமங்கையாழ்வாரும், பேயாழ்வாரும் மங்களாசாசனம் செய்த 44வது திருப்பதி இது. பெருமாள் இங்கு அஷ்டபுஜ பெருமாளாக தோன்றுவதற்கு முன்பே, ஆதிகேசவப்பெருமாளாக அருள் பாலித்து வந்திருக்கிறார். மங்களாசாசனத்திற்கு பின்தான் அஷ்டபுஜபெருமாள் பிரபலமானார். திவ்யதேசங்களில் இங்கு மட்டும் தான் பெருமாள் எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். வலது நான்கு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு ஆகியவையும். இடது நான்கு திருக்கரங்களில் சங்கு, வில், கேடயம், கதை ஆகியவையும் உள்ளன.

சிறப்பம்சம்:

இங்குள்ள தாயார் பத்மாஸனி என்ற அலர்மேல் மங்கையை தனியாகப் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர். பொதுவாக பெருமாள் கோயில்களில் ராஜகோபுர நுழைவு வாயில் ஒரு திசையிலும், சொர்க்க வாசல் ஒரு திசையிலும் இருக்கும். ஆனால், இங்கு சொர்க்கவாசலும், கோயிலின் நுழைவு வாசலும் வடக்கு நோக்கி உள்ளது. பூமாதேவியை அழிக்க வந்த அரக்கனை இத்தல பெருமாள் அழித்து அவளை காப்பாற்றியதால், வீடுகட்ட நிலம் வாங்க இருப்பவர்கள், விளை நிலங்களை வாங்குபவர்கள், கட்டிய வீடுகளில் பிரச்னை உள்ளவர்கள் வழிபட்டு பலனடைகிறார்கள்.

இருப்பிடம்:

காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பிகள் வீதி.

திறக்கும் நேரம்:

காலை 7-பகல் 12, மாலை 4- இரவு 8.

போன்:

98656 98666.

சி.வெங்கடேஸ்வரன்

சிவகங்கை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us