Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/படிப்பு சிறப்படைய இங்கே வாங்க!

படிப்பு சிறப்படைய இங்கே வாங்க!

படிப்பு சிறப்படைய இங்கே வாங்க!

படிப்பு சிறப்படைய இங்கே வாங்க!

ADDED : நவ 06, 2012 05:40 PM


Google News
Latest Tamil News
படிப்பில் சிறப்பிடம் பெற சிவனும், அம்பிகையும் குருவாக அருளும் தலம் ராமநாதபுரம் மாவட்டம் மேலப்பெருங்கரையில் உள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்துச் செல்லலாம்.

தல வரலாறு:





அறியாமல் தவறு செய்த ஒருவன், தனது அடுத்த பிறப்பில் கரிக்குருவியாகப் பிறந்தான். பிற பறவைகளால் துன்பப்பட்ட கரிக்குருவி, கடம்பவனமாக இருந்த இங்குள்ள ஒரு மரத்தில் தங்கியது. மரத்தடியில் இருந்த சிவனடியார், தன் சீடர்களிடம், ''எவ்வளவு கொடிய பாவம் செய்திருந்தாலும், மதுரை சொக்கநாதரின் அருள் இருந்தால் நொடியில் விலகி புண்ணியம் கிடைத்துவிடும்,'' என்றார். இதைக்கேட்ட கரிக்குருவி மதுரை சென்று சொக்கநாதரை வழிபட்டது. அதற்கு காட்சி தந்த சுவாமி, ''எந்த சூழ்நிலையிலும் பாவம் செய்யக்கூடாது. செய்த பாவத்திற்கு பலன் நிச்சயம் உண்டு,'' என குரு ஸ்தானத்தில் இருந்து உபதேசித்து சுயவடிவம் கொடுத்தருளினார். கரிக்குருவி மதுரையில் விமோசனம் பெறுவதற்கு இத்தலம் காரணமாக இருந்ததன் அடிப்படையில், இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பப் பட்டது. மதுரையைப் போலவே, சுவாமிக்கு சொக்கநாதர் என்றும், அம்பாளுக்கு அங்கயற்கண்ணி என்றும் பெயர் சூட்டப்பட்டது.

குரு தலம்:





மூலஸ்தானத்திலுள்ள சிவலிங்கம் சதுர பீடத்தில் ருத்ராட்சத்தால் உருவாக்கப்பட்டது போன்ற அமைப்பில் உள்ளது. குருபெயர்ச்சியின்போது சிவன், தட்சிணாமூர்த்தி இருவருக்கும் விசேஷ பூஜை நடக்கும். முன்னோர்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள். மனநிம்மதி இல்லாதவர்கள், தேர்வில் தோல்வியடைந்து ஒழுங்காக படிக்கவில்லையே என வருந்துபவர்கள் வியாழக்கிழமைகளில் சொக்கநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.

மதுரை சொக்கநாதர் சந்நிதி போலவே, இங்கும் சுவாமி சந்நிதியை எட்டு யானைகள் (அஷ்டதிக் கஜங்கள்)தாங்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர், 'அட்டாள சொக்கநாதர்' என்று அழைக்கப்படுகிறார். பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுத்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும்.

கல்வி பிரார்த்தனை:





அம்பாள் அங்கயற்கண்ணி சுவாமிக்கு வலப்புறம் இருக்கிறாள். கல்விக்குரிய புதன் கிரகம் தொடர்பான தோஷங்களை நீக்குபவளாக அருளுவதால், விசேஷ நாட்களில் இவளுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து பூஜிக்கின்றனர்.

ஜுரதேவ லிங்கம்:





பிணிகளை நீக்கும் ஜுரதேவர், கோயில்களில் சிலை வடிவில் மட்டும் இருப்பார். மதுரையிலும், இங்கும் மட்டுமே இவரை சிலையாகவும், லிங்க வடிவிலும் (ஜுவரலிங்கம்)தரிசிக்க முடியும். அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷம் வந்தால் ஜுரதேவருக்கு மிளகு ரசம் படைத்தும், லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்தும் வழிபடுகிறார்கள். கோயில் எதிரே பெரிய குளம் உள்ளது. இதன் மேற்கு கரையில் அமைந்ததால் இவ்வூர் 'மேலப்பெருங்கரை' என பெயர் பெற்றது. பிரகாரத்தில் முருகன், நாய் வாகனம் இல்லாத யோக பைரவர், மகாவிஷ்ணு, நாகர், ஆஞ்சநேயர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோயில் முகப்பில் சிவன் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த சிற்பம் உள்ளது.

இருப்பிடம்:





மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் 60 கி.மீ., தூரத்தில் பார்த்திபனூர். இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் மேலப்பெருங்கரை.

திறக்கும் நேரம்:





காலை 7- 12, மாலை 5.30- 7.30.

போன்:





99767 11487.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us