Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/லட்சுமி தாயாரின் அவதார ஸ்தரம்

லட்சுமி தாயாரின் அவதார ஸ்தரம்

லட்சுமி தாயாரின் அவதார ஸ்தரம்

லட்சுமி தாயாரின் அவதார ஸ்தரம்

ADDED : நவ 06, 2012 05:39 PM


Google News
Latest Tamil News
புண்ணிய தீர்த்தத்தலமான கும்பகோணம், லட்சுமி தாயாரின் அவதார ஸ்தலமாகக் கருதப்படுகிறது. அவளைத் திருமணம் செய்தார் சாரங்கபாணி பெருமாள். கேட்டவர்க்கு கேட்ட வரம் தரும் அவரது கோயிலைத் தரிசிப்போமா!

தல வரலாறு:





வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தைச் சோதிப்பதற்காக அவரது மார்பில் காலால் உதைத்தார். திருமால், அதை அமைதியுடன் ஏற்றுக்கொண்டார். மிதித்த பிருகுவைத் தட்டிக்கேட்காத கணவரை விட்டுப் பிரிந்தாள் லட்சுமி. அதிர்ச்சியடைந்த பிருகு, புண்ணியபூமியான கும்பகோணத்தில் லட்சுமியை நோக்கி தவமிருந்தார். காட்சியளித்த லட்சுமியிடம், ''அம்மா! ஒரு யாகத்தின் பலனை அளிப்பதற்காக தேவர்கள், தெய்வங்களில் சாந்தமானவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தனர். அதற்காகவே, உன் கணவரை எட்டி உதைத்தேன். என்னை மன்னிப்பதோடு, என்னை உன் தந்தையாக ஏற்று, என்மகளாக பிறக்கும் பாக்கியம் வேண்டும்,'' என்று தேவியிடம் வரம்பெற்றார்.

அவரது கோரிக்கையை ஏற்ற லட்சுமி, ஹேமபுஷ்கரிணி தீர்த்தத்தில் மலர்ந்த தாமரையில் அவதரித்தாள். அவளைக் கண்டெடுத்த பிருகு, 'கோமளவல்லி' என பெயரிட்டு வளர்த்தார். திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்த பெருமாள், 'சாரங்கபாணி' எனப்பட்டார். இவ்வூரை லட்சுமி தாயாரின் அவதார ஸ்தலம் என்கிறார்கள்.

பிரபந்தம் தந்த திருமால்:





நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வணங்க வந்தார். அப்போது சிலர் சுவாமியின் பெருமையைப் பாடிக் கொண்டிருந்தனர். மொத்தம் ஆயிரம் பாடல்கள் பாட வேண்டும். ஆனால், அவர்களுக்கு தெரிந்தது பத்துதான். எனவே, ''ஓராயிரத்துள் இப்பத்தும்'' என்ற வரியைப் பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, 'பெருமாளைப் பாடும் பத்து பாடல்கள் தானே கிடைத்துள்ளன! ஆயிரம் பாடல்கள் உள்ளதாக கூறுகிறீர்களே! அவை எங்கே உள்ளன?'' என்றார்.

அதுபற்றி அவர்களுக்கு தெரியவில்லை. அன்றிரவு நாதமுனிகளின் கனவில் தோன்றிய சாரங்கபாணி, ஆழ்வார்திருநகரி (திருச்செந்தூர்அருகிலுள்ள பெருமாள் ஸ்தலம்) சென்று, நம்மாழ்வரை வணங்கினால், மீதி பாடல்கள் கிடைக்கும் என்றார். அங்கு சென்ற போது ஒன்றுக்கு நான்கு மடங்காக, நாலாயிரம் பாடல்களைப் பெற்றார். அவற்றைத் தொகுத்து, 'நாலாயிர திவ்ய பிரபந்தம்' என்று பெயரிட்டார். ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க உதவியர் என்பதால், இத்தலத்து சாரங்கபாணிக்கு, 'ஆராவமுதாழ்வார்' என்ற பெயர் உண்டானது. அந்த நூல் 'நாலாயிர திவ்ய பிரபந்தம்' எனப்பட்டது.

இரண்டு சீனிவாசன்:





லட்சுமியைத் திருமணம் செய்ய வந்த பெருமாள், அவளிடம் வேடிக்கை காட்டுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். மணமகனைக் காணவில்லை என்ற செய்தி கேட்டு, லட்சுமி தவித்தாள். திடீரென அவள் முன்தோன்றி, திருமணம் செய்து கொண்டார். அவர் ஒளிந்த இடத்தை, 'பாதாள சீனிவாசர் சந்நிதி' என்கின்றனர். திருமணத்துக்குப் பிறகு, மேடான இடத்தில் பெருமாள் அருள்புரியும் 'மேட்டு சீனிவாசர் சந்நிதி' இருக்கிறது.

உத்தான சயன பெருமாள்:





சாரங்கபாணியை தரிசிக்க வந்த திருமழிசையாழ்வார், 'ராமாவதாரத் தில் நடந்த கால் வலிக்கிறது என்று பள்ளி கொண்டிருக்கிறாயோ!' என்ற பொருளில் பாடினார். இதைக்கேட்ட சுவாமி எழ முயற்சித்தார். மகிழ்ந்த ஆழ்வார், ''அப்படியே காட்சி கொடு!'' என்று வேண்டவே, முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் சுவாமி காட்சிஅளித்தார். இதை 'உத்தான சயனம்' என்பர்.

சொர்க்கவாசல் இங்கில்லை:





இங்குள்ள உத்ராயண வாசல் வழியாக தை முதல் ஆனி வரையிலும், தட்சிணாயண வாசல் வழியாக ஆடி முதல் மார்கழி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வர். ஒரு வாசல் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். வைகுண்டத்திலிருந்து சுவாமி, நேராக லட்சுமியை திருமணம் செய்ய இங்கு வந்தவர் என்பதால் சொர்க்கவாசல் கிடையாது.

சுவாமியை தரிசித்தாலே பரமபதம் கிடைத்துவிடும். கருவறை தேரின் அமைப்பில் உள்ளது.

சிறப்பம்சம்:





பெருமாள் சங்கு,சக்கரத்தோடு சார்ங்கம் என்னும் வில்லும் கையில் வைத்திருக்கிறார். மூலவர், உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதனாலே இவர், 'சார்ங்கபாணி' என்று அழைக்கப்பட்டு 'சாரங்கபாணி' ஆனார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது. லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் சாரங்கபாணிக்கு சேவை செய்தார். இக்கோயிலின் பிரம்மாண்ட கோபுரத்தை கட்டியவர் இவரே. இவரைத் தன் தந்தையாக ஏற்ற பெருமாள், இவரது மறைவுக்குப் பின் ஒவ்வொரு தீபாவளியன்றும் திதி கொடுக்கிறார். தீபாவளியை ஒட்டி இவரது கோயிலுக்குப் போய் வரலாம்.

இருப்பிடம்:





கும்பகோணம்- தஞ்சாவூர் ரோட்டில் நகரின் மையம்.

திறக்கும்நேரம்:





காலை 7 - பகல்12, மாலை 5 - இரவு 9.

போன்:





0435- 243 0349.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us