Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 45

பச்சைப்புடவைக்காரி - 45

பச்சைப்புடவைக்காரி - 45

பச்சைப்புடவைக்காரி - 45

ADDED : மார் 27, 2023 09:18 AM


Google News
Latest Tamil News
நடிகரின் கடைசி நாட்கள்

“அந்த பெரிய நடிகர் சாகற நிலைமையில இருக்காரு. நீங்க உடனே வாங்க''

பேசியது நர்ஸ் சந்தியா.

“யாரும்மா”

சந்தியா சொன்ன பெயரைக் கேட்டு அதிர்ந்தேன். தமிழகத்தின் பெரிய நடிகர். நான் என்ன செய்யமுடியும்?

“உங்களால உயிரக் கொடுக்க முடியாது. ஆனா நிம்மதியான சாவக் கொடுக்கலாம்.”

மருத்துவமனைக்கு ஓடினேன்.

வாசலில் பெண் செக்யூரிட்டி வழிமறித்தாள்.

“ஒரு உயிரைக் காப்பாற்ற...”

“நீ என்ன மருத்துவனா...''

நான் விழித்தேன். செக்யூரிட்டி சிரித்தாள்.

“கொஞ்சம் சிக்கலான விஷயம். சாகப்போகும் நடிகனுக்கு உன் மூலம் ஞானம், தெளிவைக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.”

தாயை வணங்கினேன்.

சந்தியா ஓடி வந்தாள்.

“ஐ.சி.யூவலதான் இருக்காரு. யாரும் பாக்க முடியாது. சீப் டாக்டர்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கிருக்கேன்”

தயக்கத்துடன் நடிகரின் அறைக்குள் போனேன்.

“நாலஞ்சு நாளைக்குமேல தாங்கமாட்டேன்னு தெரியும், தம்பி. எனக்கு சாக இஷ்டமே இல்ல. மனுஷனாப் பொறந்தவன் அனுபவிக்க வேண்டிய எல்லாத்தையும் அனுபவிச்சேன். நல்லா சம்பாதிச்சேன். மனசறிஞ்சு யாருக்கும் துரோகம் செஞ்சதில்ல. பெண் பித்தன்னு சொல்வாங்க. ஆனா ஒரு பொண்ணையும் அவ விருப்பம் இல்லாம தொட்டதில்ல. நெனச்சதெல்லாம் நடந்தது. எந்தப் பொண்ணு வேணும்னு தோணுதோ அவளே கெடச்சிருவா. நெறையக் குடிச்சேன். நான் பாக்காத ஊரேயில்ல, தம்பி.

“சில சமயம் மனசுல ஒரு குத்தல்கூட இருக்கு தம்பி. பச்சைப்புடவைக்காரியையே நெனச்சி அவளுக்கு பூஜை பண்ற நல்லவங்க எல்லாம் சாதாரணமா வாழும் போது அவளப் பத்தி கொஞ்சம்கூட நெனைக்காத என்னை ஏன் அவ அமோகமா வாழ வைக்கணும்?”

“அது இருக்கட்டும் இப்போ உங்க பிரச்னை என்ன?”

“இந்த மாதிரி சுகமான வாழ்வை விட்டுட்டு சாகறதுக்கு எனக்கு மனசே வரமாட்டேங்குது, தம்பி. நான் பொழைக்க மாட்டேன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. எனக்கும் 65 வயசாச்சு. போகற வயசுதான். ஆனா இந்த ராஜபோக வாழ்வை விட்டுபோற மனசு வரலையே.. சாகும்போது தவிச்சா அடுத்த பிறப்பு பிரச்னையாப் போயிரும்னு யாரோ சொன்னாங்க. அதுதான் உங்ககிட்ட...'' நடிகருக்காக பிரார்த்தித்தேன். என்ன பேச வேண்டும் என்பது புரிந்தது.

“பெரிய நடிகர்ங்கறதுனால நீங்க இழுத்த இழுப்புக் கெல்லாம் பொண்ணுங்க வந்தாங்க. உங்கமேல யாராவது நெஜமாவே அன்பு வச்சிருந்தாங்களா?”

“ஏன் இல்லாம? என் ஐம்பதாவது படம் வெற்றியடைஞ்ச உடன் கோயம்புத்துார்ல இருக்கற என் ரசிகன் வைரம் பதிச்ச ப்ரேஸ்லெட் கொடுத்தான். நாற்பதாவது வயசுல என்மேல ஆசைப்பட்ட ஒரு பொம்பளை ஒரு வீட்டையே எனக்கு எழுதி வச்சா. என் மனைவி தெய்வம் மாதிரி, தம்பி. நான் அவளுக்கு துரோகம் செய்யறேன்னு தெரிஞ்சிருந்தும் என்மீது அன்பக் கொட்டினா. அவதான் குழந்தைங்கள வளர்த்து ஆளாக்கினா. சக நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் பாசத்தக் கொட்டினாங்க. என் பிறந்தநாளுக்கு லாரி நிறையப் பரிசு வரும்”

“அது போகட்டும். நீங்க யார உண்மையா நேசிச்சீங்க? யார் மீது நெஜமாவே அன்பு காட்டினீங்க? யாருக்கு என்ன கொடுத்தீங்க?” நடிகர் விழித்தார். சில விநாடிகளில் கிளிசரின் இல்லாமல் கண்ணீர் சிந்தினார்.

“தம்பி, இப்போ என் குரல் வளையைப் பிடிச்சிச் நெறிக்கறீங்க. யாரையும் நெஜமா நேசிக்கலேன்னு இப்போதான் புரியுது. என் சந்தோஷம்தான் முக்கியம்னு கண்மூடித்தனமா அலைந்தேன். நான் யாரையுமே நேசிக்கலையே! என் பொண்டாட்டிக்கு பூக்கூட வாங்கிக் தந்ததில்ல. கைநிறையப் பணத்தக் கொடுத்து உனக்கு என்ன வேணும்னோ வாங்கிக்கோன்னு சொல்வேன். அது கொடுக்கறது ஆகாதே! என்னோட ரெண்டு மகள்களுக்கும் பெரிசா ஒண்ணும் கொடுத்ததில்ல. தம்பி!

என்னையே நம்பி வாழ்ந்தவங்களுக்கு, என் டிரைவர், மேக்கப்மேன், டெய்லர். இவங்களுக்கு சம்பளம் மட்டும்தான் கொடுத்தேன். வேற ஒண்ணும் கொடுத்ததா ஞாபகம் இல்ல. என் பொண்டாட்டி எப்பவாவது கேப்பா. “டிரைவர் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்காராம். லட்ச ரூபாய் கொடுத்தா சந்தோஷப்படுவாரு'. “அதெல்லாம் வேண்டாம். ரெண்டாயிரம் ரூபா கொடு, போதும்'னு சொல்லுவேன். நான் ஒருநாள் ராத்திரி குடிக்கறதுக்கே முப்பதாயிரம் ரூபாய்க்குமேல செலவாகும்”

நடிகரைப் பேசவிட்டேன். அழவிட்டேன்.

கடைசியாக கரகரத்த குரலில் கேட்டார்.

“இப்ப என்ன தம்பி செய்றது? சாகற நேரத்துல என்ன செய்ய முடியும்?”

“நிறைய செய்யலாம். நீங்க வாழப்போற ரெண்டு மூணு நாள்ல கொடுத்துக்கிட்டேயிருங்க. உங்க மனைவிக்கும் உங்க மகள்களுக்கும் வசதியா வாழற அளவுக்குச் சொத்த ஒதுக்கிவச்சிட்டு பாக்கிய எல்லாம் கொடுங்க. உங்களையே நம்பி வாழ்ந்த மேக்கப்மேன், வீட்டு வேலைக்காரி, டிரைவருக்கு எல்லாம் நிறையக் கொடுங்க. தங்க நகையோ, ரொக்கமோ, வீட்டுப் பத்திரமோ அவங்கள இங்கேயே வரவழைச்சிக் கொடுங்க. உங்ககிட்ட வாங்கினவுடன் அழுவாங்க. அதப் பாருங்க. உங்களுக்கும் கண்ணீர் வரும். அந்தக் கண்ணீர்ல உங்க தவிப்பெல்லாம் கரைஞ்சி போயிரும்.”

“அப்படியெல்லாம் செஞ்சா பச்சைப்புடவைக்காரி சாவைத் தள்ளி வைப்பாளா?”

“மாட்டா. மரண பயத்தப் போக்கிருவா. உங்க நீண்ட ஆன்மிகப் பயணத்துல வழியில இருக்கற ஒரு மைல்கல்தான் சாவுன்னு புரியவைப்பா. ஐயோ இவ்வளவு பணத்தையும் விட்டுட்டுப் போறேனேங்கற தவிப்பை போக்குவா. அடுத்த பிறப்பு நல்லா இருக்கும்.” அதன்பின் நான் அங்கே அதிக நேரம் இருக்கவில்லை.

மருத்துவமனை வாசலை அடைந்தபோது நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அங்கே நின்றிருந்த பெண் செக்யூரிட்டியின் கால்களில் விழுந்து வணங்கினேன்.

“அருமையாகச் சொன்னாய்”

“அருமையாக வாயசைத்தாய் என்று சொல்லுங்கள். உங்கள் வார்த்தைகள். உங்கள் எண்ணங்கள். அடுத்து என்ன நடக்கும் தாயே”

“அள்ளி அள்ளித் தரப் போகிறான் அந்த நடிகன். அதனால் அவன் கர்மக்கணக்கு நேராகி அடுத்த பிறப்பு நன்றாக இருக்கப் போகிறது”

“அறுபத்தி ஐந்து வருடங்கள் புலனின்பங்கள் இழுத்தபடி வாழ்ந்துவிட்டு கடைசி இரண்டு நாட்களில் அள்ளிக் கொடுத்தால் அதனால் எல்லாம் சரியாகி விடுமா தாயே?”

“அறுபத்தி ஐந்து வருடங்கள் இருட்டாக இருந்த அறையில் விளக்கைக் கொண்டு போனால் இருள் மறைய எத்தனை காலமாகும்?”

“இது என்ன கேள்வி தாயே? விளக்கு உள்ளே வந்தவுடன் இருட்டு வெளியே போய்விடும்..”

“நடிகனின் மனதில் அறுபத்தி ஐந்து வருடங்கள் புலனின்ப இருட்டு இருந்தது. அவன் மனதில் அன்பென்னும் ஒளி நுழைந்தவுடன் அந்த இருட்டு தொலைந்துவிட்டது”

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com




      Our Apps Available On




      Dinamalar

      Follow us