ADDED : மார் 27, 2023 09:17 AM

ஆண்டாளின் அளப்பரிய ஆளுமை
பக்தி இலக்கியத்தில் ஆண்டாள் செய்த அளப்பரிய புரட்சி என்னவென்றால் கூட்டு வழிபாடு. 'கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்' எனச் சொல்லும் அவளின் பாசுர வரிகளில் இருந்தே உணரலாம். கூட்டு வழிபாட்டின் வலிமையை உணர்ந்த ஆண்டாள் தானே உதாரணமாக இருந்து தலைமை ஏற்று நடத்திக் காட்டினாள். கூட்டு வழிபாட்டு முறையை தொடங்கிய பெருமை ஆழ்வார்களில் ஆண்டாளையே சேரும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா... நோன்பை நல்ல முறையில் நிறைவு செய்யும் 27ம் பாசுரத்தில் உள்ள வார்த்தைகளை கவனியுங்கள்.
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என முடிக்கிறாள். நோன்பால் பெற்ற பாக்கியங்களைக் குறிப்பிட்ட ஆண்டாள் பெண்களுடன் ஒன்றாகக் கூடி இருப்பதில் நிறைவு செய்கிறார். கூட்டத்தோடு இணைந்து இருந்து உண்டு நிறைதல் எனும் நுட்பமான அர்த்தத்தைக் கொண்டதாக விளங்குகிறது. இந்த ஆளுமை வீச்சு எப்படி எல்லாம் பிரதிபலிக்கிறது தெரியுமா? ஆழ்வார்களில் சிறப்பான வழிபாட்டுக்குரிய பெண்ணாக மட்டுமின்றி பெருந்தேவி தாயாருக்கு நிகராக பெருமாள் கோயில்களில் வழிபட பெறுபவர் நம் தலைவி. ஆம், இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே!
திவ்ய தேசங்களில் பெருமாளுக்கு வலப் பக்கத்தில் தாயார் சன்னதி யையும், இடப் பக்கத்தில் ஆண்டாள் சன்னதியையும் தரிசிக்கிறோமே! எங்கெல்லாம் பெருமாள் இருக்கிறாரோ அங்கெல்லாம் ஆண்டாளின் இருப்பு அவளின் ஆளுமையை உணர்வில் ஏற்றுகிறது.
மார்கழியில் திருப்பாவை பாடப் பெறுவது இன்றும் நிகழ்வது அவளது பிறப்பின் சாதனை. சிறப்பு வழிபாடுகளும் உற்ஸவங்களும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடிக்கு உண்டு. இது அவளின் தனிச்சிறப்பு அல்லவா!
திருமலை திருப்பதி பிரமோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து ஆண்டாள் சூடி அழகு பார்த்த மாலையும், கிளி மற்றும் மங்களப் பொருட்களை கூடையில் வைத்து, யானை முன் செல்ல ஊர்வலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு பதில் மரியாதையாக திருப்பதி பெருமாள் ஆண்டாளுக்கு சீர்வரிசைகள், தான் சூடிக்களைந்த ஆடைகளையும் கொடுத்தனுப்புகிறார். பங்குனி உத்திரத்தன்றும் பெருமாள் ஆண்டாளுக்கு மற்றொரு முறை இப்படி அனுப்புகிறார்.
இவற்றையெல்லாம் தாண்டி மகுடம் சூட்டியது போல் உள்ளது ராமானுஜரின் கூற்று. திருப்பாவையின் 30 பாசுரங்களுமே நுட்பமான பொருள் கொண்டவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராமானுஜரே திருப்பாவைக்கு உரை எழுத மறுத்தார் என்றால் நாச்சியாரின் ஆளுமை இதிலிருந்தே நமக்கெல்லாம் விளங்கும். நாமெல்லாம் இப்பொழுது திருப்பாவையை கொண்டாடுவது எம்மாத்திரம்? ஒரு சமயம் ராமானுஜரை சூழ்ந்த அவரது சீடர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு உரை எழுத வேண்டினர். எழுத இயலாது என மறுத்து விட்டார்.
உரை எழுதினால் பாசுரங்களுக்கான அர்த்தம் இவ்வளவுதான் என எல்லை வகுப்பது போலாகும். அட... ராமானுஜரே இப்படி சொல்லிவிட்டாரே, அவருக்கு மேலாக நாம் என்ன விளக்கம் சொல்ல முடியும் என ஆன்மிகப் பெரியோர்கள் என்னுடையதை காட்டிலும் சிறப்பான விளக்கத்தைச் சொல்லாமல் விட்டு விடுவர். ஒவ்வொருவருக்கும் அவர்கள் உணரக்கூடிய திறன் வேறுபடும். அந்த வேறுபாடுகளுக்கு ஏற்ப அவரவர் எண்ணங்களில் பொருள் விரிந்து கொண்டே இருக்கும். அதை நாம் தடுக்க வேண்டாம் என ராமானுஜர் உரை எழுத சம்மதிக்கவில்லை.
சரி, நாலாயிர திவ்ய பிரபந்தத்தை விடுங்கள். திருப்பாவைக்கு உரை எழுதலாமே என வேண்ட, ''திருப்பாவைக்கு உரை எழுதுவது என்பது இன்றைக்கு பொருந்தி நாளைக்கு பொருத்தம் இல்லாததாகக் கூட மாறக்கூடும். அது படிக்கும் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டியது. திருப்பாவையை தினந்தோறும் அனுபவிக்க அனுபவிக்க புதுப்புது பொருளும் உணர்வும் எனக்குத் தோன்றுகிறது. அதனால் தான் மீண்டும் சொல்கிறேன் உரை எழுதி இவ்வளவு தான் அர்த்தம் என வரம்பு கட்ட முடியாது என்றார்.
இன்றைக்கு தமிழில் நிறைய கதை சொல்லிகள் வந்திருக்கிறார்கள். புத்தகத்தை வாசிப்பதற்கு பதிலாக அவர்களே வாசித்து நமக்கு சாராம்சத்தை பிழிந்து தருகிறார்கள். புத்தக வாசிப்புக்கு நேரம் இல்லாதவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருந்தாலும் வாசிப்பு ரசனையை அவர்களால் உணர முடியாது. ஒரு கரும்பை கடித்து இழுத்து சுவைத்து சாப்பிடுவதற்கும் கரும்புச்சாறை மடமடவென குடித்து முடிப்பதோடு அடுத்த வேலையை பார்க்க கிளம்பி விடுவதற்குமான வித்தியாசம் போல் தான் இதுவும்.
அதுமட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் ராமானுஜர் திருப்பாவை பாசுரங்களை வாசித்து, உணர்ந்து, நெகிழ்ந்து, கண்ணீர் சுரந்து, உடல் நனைந்து அப்பாசுர பொருளாகவே உருமாறி விடுவாராம். ஒரு கட்டத்தில் நாச்சியார் பெற்ற நிறைவு நிலையை அவரும் அடைவாராம். அதனால் தான் உடையவராகிய ராமானுஜருக்கு திருப்பாவை ஜீயர் என பெயர் வந்தது.
புரட்சித் துறவி ராமானுஜர் சூடிக்கொடுத்தவளை உச்சிமேல் வைத்து போற்றியதை உலகம் அறியும். இதன் மூலம் ஆண்டாளின் ஆளுமை எத்தனை சிறப்புப் பெற்றது என்பதை நாம் உணர முடிகிறது.
சரி, ஆண்டாளை ஏன் இப்படி கொண்டாடுகிறோம்? அவள் தெய்வத் தன்மை வாய்ந்த பெண், எம்பெருமானுடன் ஐக்கியமானவள் என்பதால் மட்டுமா? இல்லை. தமிழ் மொழியை வளைத்து வில்லாக்கி அழகு பாசுரங்களை அம்பாக்கித் தொடுத்து நம் நெஞ்சங்களில் எய்து கொள்ளை கொண்டவள்.
“ ஆற்றொழுக்கு அரிமாநோக்கு தவளை
பாய்த்து
பருந்தின் வீழ் அன்ன சூத்திர நிலை”
என்னும் நன்னுால் நுாற்பா ஒரு படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற நான்கு நிலையை சொல்கிறது. இது ஆண்டாளின் படைப்புகளுக்கு அழகாக பொருந்துகிறது. முதல் நிலையில் ஆற்றினுள்ளே மணல் இருக்கிறதா, சங்கு இருக்கிறதா, உள்ளே மீன் ஓடுகிறதா என தெளிந்த நீரோட்டம் போல இருக்கும். அது போல ஆண்டாளின் பாசுரங்களில் தெளிந்த நீரோடை போல கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இரண்டாவது நிலையில் முன்னும் பின்னும் பார்த்தபடி நடக்கும் சிங்கம் போல சொல்லுகின்ற கருத்து முன்னர் சொல்லப்பட்ட பொருளையும் பின்னர் சொல்லவிருக்கும் கருத்தையும் தழுவி நின்று பொருந்தும் வகையில் உள்ளன. தவளையை பார்த்திருக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் அது பாய தயார் நிலையில் இருக்கும். அப்படி அந்தத் தவளை போல அடுத்து சொல்லவிருக்கும் கருத்துடன் துணிந்து நிற்கும் வகையில் பாய்ச்சல் இருக்கிறது அவளது படைப்புகளில்.
இது மூன்றாவது நிலை. நான்காம் நிலைக்குச் செல்ல நாம் மேலே அண்ணாந்து பார்க்க வேண்டும். வானில் உயரத்தில் உலவும் பருந்து இருக்கிறதே, அது தொலைவில் இருந்தாலும் நீருக்கடியில் இருந்தாலும் கீழே இறங்கி தான் விரும்பிய இரையைக் கொண்டு செல்லும். திருப்பாவையிலும் சரி, நாச்சியார் திருமொழியிலும் சரி, ஓரிடத்தில் சொல்லப்பட்ட பொருள் பல கருத்துக்களைக் கடந்துச் சென்ற பின்னரும் பொருளோடு பொருந்துமாறு இருக்கிறது.
இந்த நான்கும் தரமான நுாலுக்கான சூத்திர நிலையாக நன்னுால் சொல்கிறது. இவை ஆண்டாளின் படைப்புகளில் அற்புதமாக இருப்பதால் அவளின் ஆளுமை திறனை நாம் அண்ணாந்து தான் பார்க்கிறோம்! அவள் மதி நிறைந்த பெண்ணாக மட்டுமல்லாமல் செயல்வடிவம் கொடுக்கும் நங்கையாகவும் இருந்ததால் அவளது ஆளுமைத் திறன் உலகப் பிரசித்தி பெற்றுள்ளது. தொடர்ந்து அவளது அற்புதங்களை தரிசிப்போம்... வாருங்கள்!
-தொடரும்
பவித்ரா நந்தகுமார்
82204 78043
arninpavi@gmail.com