Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அரசு உதவியை தவறாகப் பயன்படுத்தினால்...

அரசு உதவியை தவறாகப் பயன்படுத்தினால்...

அரசு உதவியை தவறாகப் பயன்படுத்தினால்...

அரசு உதவியை தவறாகப் பயன்படுத்தினால்...

ADDED : ஜன 26, 2024 07:29 AM


Google News
Latest Tamil News
முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்திய போது காஞ்சி மடத்திலுள்ள பாட்டி ஒருவர் விண்ணப்பிக்க விரும்பினார்.

நீண்ட காலமாக காஞ்சி மடத்தில் இருப்பவர் அவர். மடத்திற்கு வந்த பக்தர்கள் சிலருடன் காஞ்சி மஹாபெரியவர் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த பாட்டி வணங்கியபடி, ''மஹாசுவாமிகளுக்கு ஒரு விண்ணப்பம்'' என்றார். ''உனக்குமா பிரச்னை'' என சுவாமிகள் கேட்க, ''ஒண்ணுமில்ல! சர்க்கார்ல வயசானவாளுக்கு பென்ஷன் தர்றாளாம்'' என்றார்.

''ஆமா... அதுக்கு என்ன இப்போ...''

''மடத்து மூலமா சிபாரிசு பண்ணா.. பென்ஷன் கிடைக்குமே''

''கிடைக்கும்தான்... உனக்கு இங்கு என்ன குறை.?.. வேளா வேளைக்கு சாப்பாடு கிடைச்சிடுது. புடவையும் தர்றா... தங்குவதற்கு மடமும் இருக்கு அப்புறம் எதுக்கு பணம்''

''இல்லை. சும்மா கிடைக்குதே அப்படின்னு...'' இழுத்தார் பாட்டி.

''இதோ பார்! நானும் கூட ஆதரவற்றவன்தான். ஏதோ இந்த மடத்தில ஒரு மூலையில இருக்கேன். நாம இரண்டு பேரும் முதியோர் பென்ஷனுக்கு இப்பவே மனு எழுதலாமா.'' என்று கேட்டு பலமாகச் சிரித்தார்.

இதைக் கேட்ட பாட்டி வாயே திறக்கவில்லை.

அரசு உதவியைத் தவறாகப் பயன்படுத்துவது பாவம் என்பதை விளக்கும் விதமாக பாட்டியிடம், ''நமக்காவது உயிர் வாழ சாப்பாடு கெடைச்சுடறது. மழை, வெயிலுக்கு ஒதுங்க பாதுகாப்பான இடமும், மானத்தை மறைக்கத் துணியும் இருக்கு. இதுக்கெல்லாம் திண்டாடும் ஏழை ஜனங்களுக்குத் தான் சர்க்கார்ல பென்ஷன் திட்டம் கொண்டு வந்திருக்கா... உனக்கு வாங்கிக் கொடுத்தா, ஆதரவு இல்லாத ஒருத்தருக்கு வாய்ப்பு கிடைக்காம போகுமே'' என்றார் காஞ்சி மஹாபெரியவர். உண்மையை உணர்ந்த பாட்டியும் நிம்மதியடைந்தார்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us