Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 51

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 51

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 51

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 51

ADDED : ஜன 19, 2024 01:56 PM


Google News
Latest Tamil News
கீசக வதம்

திரவுபதியின் வருகைக்காக கீசகன் காத்திருந்தான். தயக்கமுடன் திரவுபதி சைந்திரியாக வந்து நின்றாள்.

''வா சைந்தரி... உனக்காக காத்திருக்கிறேன்'' என்றபடி தொட முயன்றான் கீசகன்.

''தொட முயலாதே'' என்றாள்.

''அப்படியானால் இங்கு எதற்கு வந்தாய். இதை சொல்லவா'' என்றான் கோபமாக.

''ஆம். என்னைக் காவல் காக்கும் கந்தர்வர்கள் நீ என்னைத் தீண்டினால் பிரசன்னமாவார்கள். நீ அற்ப மானிடன். அவர்களோ பல வித்தைகள் கற்ற அசகாயர்கள். உன்னைக் கொன்று விடுவர்''

''அதையும்தான் பார்க்கிறேன். என்னை சாமான்யனாக கருதாதே. நான் விசேஷமானவன். ஒரே சமயத்தில் நுாறு யானைகளோடும் மோத வல்லவன் நான்'' என கீசகன் கொக்கரித்தான்.

''இப்போது வேண்டாம். நாளை நான் இருக்கும் இடத்திற்கு வா. உன் விருப்பம் போல் நடக்கலாம்'' என அவனைத் தவிர்த்த திரவுபதி அடுத்து சென்றது தர்மனிடம்...

தர்மனோ புத்திசாலித்தனமாக சமாளித்து காலம் கடத்தச் சொன்னான்.

''தேவி... அவனை நீ உனக்கான ஆத்மசக்தியால் சபிக்காதே. அப்படி

நடந்தால் நீ திரவுபதி என தெரிந்து விடும்'' என்றான். அர்ஜூனனும் அப்படியே தான் கூறினான்.

''சகி... இது சோதனைக் காலம். நாம் பொறுமையாக நடந்தாக வேண்டும். எந்த நிலையிலும் யார் என்பது தெரியக் கூடாது.

எனக்கு ஒரு பாணம் போதும் கீசகனை வீழ்த்த... ஆனால் அதுவே என்னைக் காட்டிக் கொடுத்து விடும்'' என்றான். அடுத்து திரவுபதி நேராக பீமனிடம் தான் சென்றாள்.

பீமனும் முதலில் மறுத்தான். ஆனால் திரவுபதி வற்புறுத்தினாள்.

''மணாளரே... எல்லோரும் என்னை பொறுமையாக இருக்கவே சொல்கிறீர்கள். பொறுமை காத்ததால் தானே துரியோதனன் சபையில் மானபங்கப் படுத்தப்பட்டேன். இப்போதும் ஆபத்து சூழ்ந்துள்ளது. அப்போதாவது நான் நானாக இருந்தேன். இப்போதோ ஒளிந்தவளாக சைத்ரை என்ற பெயருடன் உள்ளேன். எனக்கு முன்பை விட இப்போது ஆபத்து அதிகம். 'பணிப்பெண் தானே... வந்து படு'' என இழிவாக கூறுகிறான் கீசகன். அவனை அழிக்கும் ஆற்றல் இருந்தும் பொறுமையாக இருக்கச் சொன்னால் என்ன செய்வது?

இறுதியில் நான் ஒரு அக்னிபுஷ்பம் என்பதை உணர்த்தினால் தான் பிரச்னை தீரும் என்றால் நான் என் பிறவிச் சக்தியை பயன்படுத்தி கீசகனை எரித்து சாம்பலாக்குவேன். அது என்னை மட்டுமல்ல உங்கள் ஐவரையும் அடையாளம் காட்டி அக்ஞாத வாசத்தை முடிவுக்கு வந்து நாம் இழந்த நாட்டை அடைய முடியாதபடி

செய்து விடும்.

கற்பா...நாடா? என்றால் நான் கற்பின் பக்கமே நிற்பேன். நாடு வேண்டும் என்றால் கீசகனை வதம் புரியும் முன் வாருங்கள்'' என்றாள் திரவுபதி.

பீமனும் அவள் கருத்துக்களை அசை போட்டவனாக, ''சரி... எவரும் அறியாதபடி வதம் செய்கிறேன். கந்தர்வர்கள் ஒன்றாகத் தோன்றி வதம் புரிந்ததாகச் சொல்லி நீயும் தப்பி விடு'' என்றான். திரவுபதியும் அதன் பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

...

மறுநாள்!

கீசகன் மாப்பிள்ளை போல திரவுபதி வரச் சொன்ன ரகசிய இடத்திற்கு புறப்பட்டான். அந்த ரகசிய இடத்தில் பீமன் திரவுபதியை போல புடவை கட்டிக் கொண்டு படுத்திருந்தான். கீசகனும் வந்தான். அறைக்கதவை தாழிட்டான். அணைக்க முற்படவும் தான் பீமனை உணர்ந்தான். பீமனோ தன் பலத்தை எல்லாம் திரட்டி கைகள் கால்களை பிய்த்து வீசினான். அதற்கும் பின் கழுத்தைத் திருகி பறித்தவன் கீசகனின் உடல் உறுப்புகளை எல்லாம் மலை போல குவித்து, ''உன்னைப் போன்ற காமுகர்களுக்கு இப்படித்தான் உடல் அழியும்'' என கூறி வந்த சுவடு தெரியாதபடி சென்று சமையலறைக்குச் சென்று துாங்கினான்.

பீமன் சென்றதை உறுதிப்படுத்தி விட்டு திரவுபதியும் அலறினாள். அவளது கூக்குரல் கேட்டு கீசகனின் உடன்பிறந்த ஏனைய இளைய கீசகர்கள் 99 பேரும் ஓடி வந்தனர்.

கீசகன் மாமிச மலையாக கிடப்பதைப் பார்த்த விக்கித்து நின்றனர். திரவுபதியும் எல்லாம் கந்தர்வர்கள் செயல் என்றாள். அவள் சொன்னதை அவர்களால் நம்பமுடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஆனாலும் திரவுபதிக்கு ஏற்பட்ட ஆபத்து விலகியதில் பாண்டவர்கள் மகிழ்ந்தனர்.

ஆனால் அது நீடிக்கவில்லை. கீசகனுடைய சகோதரர்களான இளைய கீசகர்கள் நேராக விராட மன்னனிடம் சென்று கீசகன் கொல்லப்பட்டதை கூற விராடன் அதிர்ச்சி அடைந்தான்.

''கீசகனைக் கொல்லும்படி ஒரு வீரன் இந்த மண்ணில் இருக்கிறானா?'' என்று கேட்டான்.

''எங்கள் வியப்பும் அதுவே. சைந்திரியோ அவளைக் காவல் காக்கும் கந்தர்வர்கள் அவளுக்காக கீசகனைக் கொன்றதாக கூறுகிறாள்''

''கந்தர்வர்கள் அழகானவர்கள். மாயங்கள் கற்றவர்கள். ஆனால் வீரர்கள் அல்லவே''

''அப்படியானால் இதில் சூழ்ச்சி உள்ளது. சைந்திரியை அழைத்து விசாரியுங்கள்'' என இளம் கீசகர்கள் விராடனை வற்புறுத்தினர்.

சைந்திரியாகிய திரவுபதியும் விராடன் முன் அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு ஆளானான்.

''சைந்திரி இது எப்படி நடந்தது''

''நான் எவ்வளவோ சொல்லியும் கீசகர் கேட்கவில்லை. நான் என்ன செய்வேன்''

''யார் அந்த கந்தர்வர்கள்?''

'' எனக்கு துன்பம் நேரும் போது தான் தோன்றுவர்''

''இது என்ன விசித்திரம். கீசகனுக்கு இப்படி ஒரு கொடிய மரணமா''

''நான் எச்சரித்தும் கேட்கவில்லையே''

''நீ மனப்பூர்வமாக சம்மதித்திருந்தால் இப்படி நடந்திருக்காது அல்லவா. எங்கள் சகோதரன் மரணிக்க நீயே காரணம்'' என்றனர்.

திரவுபதி திடுக்கிட்டாள்.

''இது என்ன விந்தை. தவறு செய்தது கீசகன். நான் அழகாக இருப்பது குற்றமா''

''ஆம். குற்றம் தான். உன் அழகு இது போல பலரை மயக்கலாம். அவர்களையும் கந்தர்வர்கள் கொல்லலாம் அல்லவா?''

''பிறன் மனை நோக்கினால் தண்டனை அனுபவித்தாக வேண்டும்''

''என் சகோதரன் ஒரு ராஜகுமாரன். உன்னை மனைவியாக்க விரும்பினான். நீ மறுத்து விட்டாய்''

''ஆம். நான் கந்தர்வர்களை என் கணவர்களாக வரித்து விட்டேன். எப்படி கீசகரை ஏற்க முடியும்?''

''இது அபத்த வாதம். கீசக வதத்திற்கு காரணமான நீயும் கீசகரை எரியூட்டும் போது தீப்பாய்ந்து இறக்க வேண்டும். இதுவே எங்கள் விருப்பம்'' இளம் கீசகர்கள் இவ்வாறு கூறவும் விராடனும் ஆமோதித்தான்.

''அவ்வாறே ஆகட்டும்'' என்று கூறி விட்டுப் போய்விட்டான்.

''வேண்டாம். என்னை தீக்கிரையாக்காதீர்கள். அது உங்களுக்கே ஆபத்தை ஏற்படுத்தும்'' என்றாள் திரவுபதி.

''அதையும் பார்க்கிறோம்'' என்று இளம் கீசகர்கள் அவளை கீசகனை தகனம் செய்யும் மயானத்துக்கு அழைத்துச் சென்றனர். தர்மன் ஏதும் செய்ய இயலாமல் நின்றான். அர்ஜுனனுக்கு இந்த செய்தி தெரியாது.

ஆனால் பீமனுக்கு தெரிந்தது. அடுத்த நொடியே பீமன் இளம்கீசகர்களை அழித்திட தீர்மானித்தான். பனைமரம் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தான். அந்த உருவோடு கந்தர்வ ராட்சஷன் போல மயானத்தை அடைந்தவன் அங்கிருந்த நுாறு இளம் கீசகர்களையும் துவம்சம் செய்யத் தொடங்கினான்.

அவர்கள் நாலாபுறமும் தெறித்து ஓடினர். அவர்களை எல்லாம் பிடித்து கீசகனுக்காக மூட்டிய சிதையை தீயிட்டு எரித்தான். திரவுபதி அமைதியாக நின்றிருந்தான். கீசகர்களும் அழிந்ததோடு அவர்களுக்கு துணை நின்ற விராடனின் வீரர்களும் அழிந்தனர். பீமன் மீண்டும் தன் உருவை மாற்றிக் கொண்டு சமையல்கட்டுக்கு சென்றான். விராடனோ அவ்வளவு கீசகர்களும் அழிந்ததை எண்ணி அதிர்ச்சியும் அச்சமும் கொண்டான்.



-அடுத்த வாரம் முற்றும்

இந்திரா செளந்தர்ராஜன்

98947 23450





      Our Apps Available On




      Dinamalar

      Follow us