Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அசுர வதம் - 13

அசுர வதம் - 13

அசுர வதம் - 13

அசுர வதம் - 13

ADDED : ஜன 19, 2024 01:39 PM


Google News
Latest Tamil News
பஸ்மாசுரன் வதம்

எந்த நிற பொருளாக இருந்தாலும், அதை தீயில் இட்டால் கரியாக மாறும். மேலும் எரியூட்டினால் அது நீற்றுப் போய் வெண்ணிற சாம்பலாக மாறும். அதன்பின் எப்படி எரியூட்டினாலும், அதன் நிலை மாறாது. இதுவே முடிவான நிலை. நீற்றுப் போவதையே நீறு என்கிறோம். இதற்கு 'பஸ்மம்' என்றும் பெயருண்டு. தோன்றிய அனைத்தும் அழிந்த பிறகும் எஞ்சி நிற்கிற அழியாத உண்மை சிவன் மட்டுமே. இதனால் அவருக்கு 'மகா பஸ்பம்' என்று பெயர்.

நாடாளும் மன்னர், பணக்காரர், கற்ற பண்டிதர் என மதிப்பு மிக்கவரானாலும் சரி, சாதாரண வேலைக்காரன், பிச்சைக்காரன், மூடன் என மதிப்பு இல்லாதவராக இருந்தாலும் சரி இறப்பிற்குப் பின்னர் யாருடைய சடலத்தையும் பாதுகாக்க முடியாது. எரியூட்டி சாம்பலாக்க வேண்டும். உயிர்களின் வாழ்வு நிலையானதல்ல. கிடைத்த உடலைக் கொண்டு நல்ல எண்ணம், கடவுள் நம்பிக்கையுடன் நற்பணிகளைச் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டவே நெற்றியில் திருநீறு அணிகிறோம். இதை அறிவுறுத்தவே சிவனும் உடல் முழுக்க சாம்பல் பூசியிருக்கிறார்.

இந்த சாம்பலுக்கும் பஸ்மாசுரனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவனது வரலாறை தெரிந்து கொள்வோமா... சிவனின் உடலில் கசிந்த வியர்வைத் துளியில் இருந்து சாம்பல் நிற உருவம் ஒன்று தோன்றியது. சாம்பல் நிறமும், அசுர குணமும் கொண்டதால் அவன் பஸ்மாசுரன் (சாம்பல் அரக்கன்) என அழைக்கப்பட்டான். அவனது கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. இந்நிலையில் தங்களின் மன்னராகப் பொறுப்பேற்கும்படி அசுரர்கள் அனைவரும் அவனிடம் வேண்டினர். சம்மதித்த அவனும் பதவியேற்றான்.

'சிவனை நோக்கி தவமிருந்து சாகாவரம் பெறுங்கள். அதன் பின் தங்களை எவராலும் அழிக்க முடியாது' என அசுரர்கள் சிலர் ஆலோசனை வழங்கினர். அதை ஏற்ற பஸ்மாசுரனும் தவத்தில் ஈடுபட, சிவன் காட்சியளித்தார். அழியாத வரத்தை வேண்டினான். 'தோன்றிய அனைத்தும் அழிவது உறுதி.வேறு ஏதாவது வரம் கேள்' என்றார். “தன் ஆள்காட்டி விரலால் யாருடைய தலையைத் தொட்டாலும், அவர் பஸ்பமாக (சாம்பலாக) வேண்டும்” எனக் கேட்டான். சிவனும் தந்தார்.

வரத்தைச் சோதித்துப் பார்க்க நினைத்தான். அருகில் சிவன் மட்டுமே இருந்தார். அவருடைய தலையில் கை வைத்துச் சோதிக்கப் போவதாகச் சொன்னான் அசுரன். தன்னிடம் சோதித்தால் வரம் பலனளிக்காது என்பதால் அங்கிருந்து சிவன் மறைந்தார். தேவர்களிடம் சோதிக்கலாம் என எண்ணி தேவலோகம் நோக்கி புறப்பட்டான். அசுரன் வருவதையறிந்த தேவர்கள், வைகுண்டம் சென்று திருமாலைச் சரணடைந்தனர். அவரும் அவர்களைக் காப்பாற்றுவதாக உறுதியளித்தார்.

அழகிய பெண் உருவத்தில் மோகினியாக மாறி, பஸ்மாசுரன் வரும் வழியில் மெல்ல நடந்தார் திருமால். எதிரில் வரும் அழகியைக் கண்ட பஸ்மாசுரன் மயங்கினான். தன் நோக்கத்தை மறந்து திருமணம் செய்ய ஆசைப்பட்டான்.

வலிந்து போய் அறிமுகப்படுத்திக் கொண்டான். அசுரகுல அரசனாக இருக்கும் தன்னிடம் கயிலை நாதரான சிவனும், தேவர்களும் பயந்து ஓடியதைச் சொல்லிப் பெருமைப்பட்டான். தன்னைத் திருமணம் செய்தால் அசுரகுலத்தின் மகாராணியாகும் வாய்ப்பு கிடைக்கும் என ஆசை காட்டினான். 'தங்களைத் திருமணம் செய்யவே ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு முன் ' நடனத்தில் எனக்கு இணையானவர்' என்பதை தாங்கள் நிரூபிக்க வேண்டும் அதற்கு நான் நடனமாடுவதைப் போல தாங்களும் ஆட வேண்டும்'' என்றார். அசுரனும் அதற்கு சம்மதித்தான்.

மோகினி உருவத்தில் இருந்த திருமால் ஆட, அசுரனும் அவரைப் போலவே ஆடினான். ஒரு கட்டத்தில் கையை தலை மீது கொண்டு சென்று ஆட்காட்டி விரலால் தனது உச்சந்தலையைத் தொட்டார் மோகினி. அசுரனும் அப்படியே செய்தான். சிவனிடம் பெற்ற வரத்தின்படி ஒரு நொடியில் எரிந்து சாம்பலானான். அவனது அழிவைக் கண்டு மோகினியான திருமால் சிரித்தார். அசுரனைக் கண்டு சிவனும் மகிழ்ந்தார். தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இதைக் கொண்டாடினர்.

-தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925





      Our Apps Available On




      Dinamalar

      Follow us