Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 11

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 11

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 11

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 11

ADDED : ஜன 01, 2025 01:08 PM


Google News
Latest Tamil News
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

ஒடிசா மாநிலம், கட்டாக்கில் ஜன. 23, 1897ல் பிறந்தவர் சுபாஷ் சந்திர போஸ். அவரின் தாயார் பிரபாவதி தேவி சனாதன தர்மத்தை குடும்ப சம்பிரதாயப்படி நேர்த்தியாகக் பின்பற்றியவர். தாயின் போதனையால் மகன் சுபாஷும் ஞானிகளின் போதனைகளை உள்வாங்கிக் கொண்டு பிறருக்கு உபதேசிக்கும் ஆற்றல் கொண்டவராக இருந்தார். குறிப்பாக ஆன்மிகம், தேசியத்தை குறிக்கோளாகக் கொண்ட வீரத் துறவி விவேகானந்தர் மீது மதிப்பு கொண்டிருந்தார்.

துறவு வாழ்வை ஏற்க விரும்பினார். அதற்காக 16வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஞானத்தேடலில் ஈடுபட்டார். காசியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி பிரம்மானந்தரை சந்தித்தார். சுபாஷின் குடும்பத்தை சுவாமிக்குத் நன்றாகத் தெரியும்.

சுபாஷ் குடும்பத்தினர் 27 தலைமுறையாக வங்காள மன்னர்களின் படைத்தளபதிகளாகவும், நிதி, போர் அமைச்சர்களாகவும் பணியாற்றியவர்கள் என்பதும் அவர் அறிவார். ஞான மார்க்கத்தை நாடும் சுபாஷ், நாட்டின் விடுதலைக்கு அவசியம் தேவைப்படும் மாபெரும் சக்தி என்பதை உணர்ந்தார். அதனால் அவருடைய ஆற்றலை தேசியத்திற்காக செலவிடுமாறு வேண்டிக் கொண்டார். இதை, ' சுவாமி பிரம்மானந்தரின் அருள் நம் வாழ்வையே மாற்றி விடும்; எனக்கும் அவர் அருளில் ஒரு துளி கிட்டியது. அது என்னை தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துாண்டியது' எனக் குறிப்பிட்டுள்ளார் சுபாஷ் சந்திர போஸ்.

தன் தேடலின் நோக்கம் திசை மாறியதால் மீண்டும் வீட்டிற்குத் திரும்பினார் சுபாஷ். தந்தையான ஜானகிநாத் போஸின் யோசனைக்கு இணங்கி 1915ல் கல்கத்தா மாநிலக் கல்லுாரியில் சேர்ந்தார். அங்கு வரலாறு பாடம் நடத்திய ஸி. எப். ஓட்டன் என்ற ஆங்கிலேயன் மூச்சுக்கு முன்னுாறு முறை இந்தியர்களை இழிவாகப் பேசி வந்தான். அவனை வன்மையாக சுபாஷ் எதிர்க்கவே கல்லுாரியை விட்டு வெளியேற்றப்பட்டார். இரண்டு ஆண்டுக்கு வேறெந்த கல்லுாரியிலும் சேர முடியாதபடி தடை ஏற்பட்டது. இந்த 'தண்டனை' காலத்துக்குப் பிறகு வேறொரு கல்லுாரியில் சேர்ந்து இளங்கலை பட்டப் படிப்பில் தேறினார். ஆனால் இவருடைய தேசிய விடுதலை வேட்கையை

அறிந்த தந்தையார், அவருடைய கவனத்தைத் திருப்ப லண்டனில் இந்தியக் குடிமைப்பணி தொடர்பான பட்டப் படிப்பை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்தார்.

அதன்படியே சுபாஷ், அங்கு படித்த இந்திய மாணவர்களிலேயே நான்காவது நபராகத் தேர்ச்சி பெற்றாலும், இதன் மூலம் தாய்நாட்டு மக்களை அடக்கி, ஆங்கிலேயருக்காக சேவை செய்ய வேண்டியிருக்கும் என்பதால் அந்த பதவியைக் கைகழுவினார்.

இந்த சமயத்தில் தான், மாத வருமானமாக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் கிடைத்தாலும், சுதந்திர போராட்டத்திற்காக தன்னுடைய வழக்கறிஞர் தொழிலைத் தியாகம் செய்த சித்தரஞ்சன் தாஸ் மீது பெரும் மதிப்பு கொண்டார்.

லண்டனில் இருந்தபடியே அவருக்கு ஒரு கடிதம் எழுதி இந்திய விடுதலை வேள்வியில் ஈடுபட விரும்பும் தனக்கு யோசனை வழங்க வேண்டினார். சித்தரஞ்சன் தாஸும் அவரைப் பாராட்டி, இந்தியாவுக்கு வரவேற்று பதில் கடிதம் ஒன்றை எழுதினார்.

அச்சமயத்தில்(1921) தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காந்திஜி இந்திய அரசியலில் ஈடுபட்டார். அவரது தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட விரும்பிய சுபாஷ், பம்பாயில் அவரைச் சந்தித்தார். ஒருமணி நேர உரையாடலுக்குப் பிறகு காந்தியின் சாத்வீகக் கொள்கைகளில் உடன்பாடு இல்லாமல் போயிற்று சுபாஷுக்கு. ஆகவே தாஸின் தலைமையில் இயங்க விரும்பினார். தாஸும் அவரை ஏற்றுக் கொண்டு, தான் நிறுவிய தேசியக் கல்லுாரியின் முதல்வராக 25 வயது இளைஞரான சுபாஷை நியமித்தார். இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் முக்கியத்துவத்தை உணர்த்தி ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை முடுக்கி விட்டார்.

தன் கம்பீரமான பேச்சால் மட்டுமன்றி, காங்கிரஸ் ஜனநாயக கட்சியின் சார்பாக வெளிவந்த 'பார்வர்ட்' என்ற ஆங்கில இதழில் தேசிய விடுதலையை துாண்டும் கட்டுரைகளை எழுதி மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தார். அதனால் அவர் பேசும் கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் விடுதலை ஆர்வலர்கள் பங்கேற்றனர். அவர் தலைமையில் பாரத சுதந்திரம் சாத்தியம் என மனஉறுதி கொண்டார்கள்.

அதனாலேயே கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் நிர்வாக அதிகாரியாக அவரை மக்கள் தேர்ந்தெடுத்தனர். மக்களின் தேவையை அறிந்து கல்கத்தாவில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார் சுபாஷ். இதனால் மக்களுடைய நம்பிக்கை மேலும் வேரூன்றியது.

மக்களிடையே பிரபலமாகி வரும் சுபாஷ் சந்திர போஸ், ஆங்கிலேயர்களுக்குப் பெரும் தலைவலியானார். அதனால் ஒரு அவசர சட்டம் இயற்றி, 'சதிகார இயக்கம் ஒன்று தோன்றியிருக்கிறது. அந்த இயக்கத்தாரை கைது செய்ய வேண்டும்' என்ற போர்வையில் சுபாஷைக் கைது செய்து (அக்.25, 1924) கல்கத்தா மத்திய சிறையில் அடைத்தது. ஆனால் சுபாஷுக்கு கிடைத்து வரும் ஆதரவு பிரிட்டிஷ் அரசை உலுக்கியது. அதனால் அவரை மியான்மரில் (பர்மா) உள்ள மாண்டலே சிறைக்கு மாற்றினர். அங்கே சுற்றுச்சூழல் ஒத்து வராமல் போகவே சுபாஷ் நோய்வாய்ப்பட்டார்.

ஆனால் அந்தச் சிறையில் ஏற்கனவே அடைபட்டிருந்த வங்காள கைதிகளுடன் துர்கா பூஜையை நடத்த விரும்பினார் சுபாஷ். அதற்கு சிறை அதிகாரிகள் நிதி உதவி அளிக்காததால், தங்களிடம் இருந்த பணத்தைச் சேர்த்து பூஜையை கட்டாயமாக நடத்தி தீருவோம் என வாதிட்டார் சுபாஷ். இந்தப் போராட்ட விவரம் இந்தியாக்குள் பரவி விடவே, அதிகாரிகள் இறங்கி வந்து, பண உதவி செய்வதாகவும் ஆனால் அந்தப் பணத்தை மாதம் தோறும் கைதிகளுக்குக் கொடுக்கும் பணி ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்வதாகவும் அறிவித்தனர்.

இதற்கெல்லாம் அசராத சுபாஷ் சிறப்பாக மாண்டலே சிறையில் துர்கா பூஜையை நடத்தினார். இதைக் குறிப்பிட்டு தன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில், ''சிறையிலும் துர்கா பூஜை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. துர்கை எங்களை மறக்கவில்லை என்பது புரிந்து நாங்கள் உணர்ச்சி வசப்பட்டோம். வங்காளத்தின் கண் கண்ட தெய்வமான அம்மையை நாங்கள் பர்மாவிலும் கண்டு பரவசம் கொண்டோம். இன்னும் எத்தனை ஆண்டுகள் சிறைப்பட்டிருப்போம் எனத் தெரியவில்லை. நாட்கள் அதிகரிக்க, அதிகரிக்க சிறை வாழ்க்கை எங்களுக்குப் பழகி விடுமோ எனத் தோன்றுகிறது'' எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

-தொடரும்

பிரபு சங்கர்

72999 68695





      Our Apps Available On




      Dinamalar

      Follow us