Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 45

பச்சைப்புடவைக்காரி - 45

பச்சைப்புடவைக்காரி - 45

பச்சைப்புடவைக்காரி - 45

ADDED : ஜன 01, 2025 01:06 PM


Google News
Latest Tamil News
நேர்மையின் விலை

என்முன் அமர்ந்திருந்த பெண்களைப் பார்த்தேன். மனநல மருத்துவர் சத்யா, பள்ளி ஆசிரியை புவனா. இருவருக்கும் நாற்பது வயதிருக்கும். அவர்கள் முகத்தில் கலவரம் தெரிந்தது.

புவனாவிற்கு இரண்டு பெண்கள். அவளின் கணவன் குடிகாரன். கொடுமைக்காரன். அவனிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தாள் புவனா. அவளின் கணவரின் வழக்கறிஞர் அவளை பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தார்.

“மனநல மருத்துவரான உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்?” சத்யாவைக் கேட்டேன்.

“புவனாவுக்கு இயல்பாகவே குற்ற உணர்வு ஜாஸ்தி. அது மனநோயா முத்தினவுடன எங்கிட்ட சிகிச்சைக்கு வந்தாங்க. உங்க மனசுல தோன்றதை எல்லாம் டைரியில் எழுதி வைங்கன்னு சொன்னேன். தப்பான எண்ணம், ஆசை எல்லாத்தையும் எழுதுங்க, பின்னால படிச்சிப் பாத்தா தெளிவு கிடைக்கும், குற்ற உணர்வு குறையும்னு சொன்னேன்.

“ஒருநாள் ராத்திரி கணவன் குடிச்சிட்டு வந்து அடிச்சிருக்கான். அன்னிக்கு டைரியில் காலேஜ்ல கூடப் படிச்ச சுரேஷ் காதலச் சொன்னப்ப சரின்னு சொல்லியிருக்கலாம். அவன விட்டுட்டு இந்த மிருகத்துகிட்ட மாட்டினேனேன்னு எழுதியிருந்தாங்க.

“ஒருமுறை நாக்குல நரம்பில்லாம புருஷன் திட்டின போது, 'எதிர் வீட்டுல குடியிருக்கிற கணவன், மனைவி எப்படி அன்னியோன்யமா இருக்காங்க. அந்தப் பையன் ரொம்ப மென்மையானவனா இருக்கான். எனக்கு ஏன் அப்படி ஒரு ஆள் புருஷனா வரலைன்னு தொடங்கி அவங்க ஆழ்மனசு ஏக்கங்களை எல்லாம் எழுதியிருக்காங்க.

ஒரு நாள் பிரண்டோட ஒரு காதல் படம் பாத்துட்டு வந்தாங்க. அந்த நடிகரோட தனியா உட்கார்ந்து நாள் பூராப் பேசணும்னு ஆசையா இருக்கு. காதல்ல அப்படி ஒரு மென்மைய நான் பாத்ததேயில்லன்னு எழுதியிருக்காங்க.

எல்லாக் கவலையும் மறந்து டான்ஸ் ஆட நெனச்சது, உண்மையா காதலிக்கற ஒருத்தன் தோள்ல சாஞ்சபடி பயணம் போக நெனச்சதுன்னு மனசுல இருந்த அந்தரங்க ஆசைகளை அப்படியே எழுதி வச்சாங்க. அத நான் படிச்சிப் பாத்தேன். அத அடிப்படையா வச்சித்தான் நான் சைக்கோதெரப்பி சிகிச்சை கொடுக்கிறேன்.

“புவனாவின் புருஷன் கையில் அந்த டைரி மாட்டிக்கிச்சி. அத வச்சே கேஸ்ல ஜெயிக்கலாம்னு அவங்க வக்கீல் சொல்றார்” புவனா தொடர்ந்தாள்.

“என் புருஷன் என்னை மிரட்டறான், சார். இந்த டைரிய ஜட்ஜ் படிச்சிப் பாத்தா குழந்தைங்கள வளக்கற பொறுப்ப என்கிட்ட கொடுத்திருவாரு. எனக்குக் குழந்தைங்க மீது பாசம் கிடையாது. ஆனால் குழந்தைகளை பிரிஞ்சு நீ தவிக்கறத் தவிப்பை பார்க்கணும்னு ஆசையா இருக்கு. இதுலருந்து தப்பிக்க ஒரே வழிதான் இருக்கு. எனக்கு ஜீவனாம்சம் வேண்டாம், குழந்தைங்க மட்டும் போதும்னு எழுதிக் கொடுன்னு சொல்றான் சார்”

“என் சம்பளத்த வச்சிக்கிட்டு எப்படி சார் ரெண்டு பொண்களப் படிக்க வச்சிக் கல்யாணம் செய்ய முடியும்? குழந்தைங்க அவன்கிட்ட போனா அவங்க வாழ்க்கையே நாசமாயிரும் சார்” சத்யா சொன்னாள்.

“புவனா ஒரு நல்ல மேடைப் பேச்சாளர் சார். அவங்ககிட்ட வார்த்தை விளையாடும். அபூர்வ திறமை. இந்த மன உளைச்சல்ல அதையும் இழந்திருவாங்களோன்னு பயமா இருக்கு”

பெண்கள் சென்றபின் நான் அலுவலகத்தை விட்டு வெளியேறினேன். கீழ் தளத்தில் கூட்டிக் கொண்டிருந்தவளைப் பார்த்தேன்.

“விளக்கு வைக்கற நேரத்துலயா பெருக்குவாங்க”

“காலத்தைப் படைத்தவளே காலநேரம் பார்த்து வேலை செய்ய முடியுமா என்ன?”

தாயின் கால்களில் விழுந்து வணங்கினேன்.

“புவனா வேலையை ஒழுங்காகச் செய்யட்டும். மற்றதை நான் பார்த்து கொள்கிறேன்.”

மறுநாள் மாலையில் புவனா அழைத்தாள்.

“நல்லதே நடக்கும் கவலைப்படாதீங்க. உங்க வேலைய செஞ்சிக்கிட்டிருங்க போதும்”

“வாழ்வா சாவான்னு துடிச்சிக்கிட்டிருக்கேன். எப்படி சார் கவலைப்படாம இருக்க முடியும்? இப்போ கூட ஒரு முதியோர் இல்லத்துல பேசணும். ஆனா முடியாதுன்னு சொல்லப்போறேன்”

எப்படி எனக்குள் அப்படி ஒரு உத்வேகம் வந்தது எனத் தெரியவில்லை.

“முதியோர் இல்லத்துக்குப் போய்ப் பேசுங்க புவனா. உங்க மனசுல இருக்கற நேர்மை அசாதரணமானது. உங்க மனசுல எந்த தப்பான எண்ணங்களும் வரல. ஒவ்வொரு மனுஷ மனத்துலயும் அப்படிப்பட்ட எண்ணங்கள் நிறைய இருக்கத்தான் செய்யும். ஆனா அத ஒரு டயரில எழுதி வைக்கற தைரியம் லட்சத்துல ஒருத்தர் கிட்டதான் இருக்கும். அது உங்ககிட்ட இருக்கு. முதியோர் இல்லத்துல பேசும்போது உங்க சிக்கலப் பத்திச் சொல்லுங்க. உங்க நேர்மையால நீங்க மாட்டிக்கிட்டதச் சொல்லுங்க. அங்க இருக்கறவங்க பெரிய வாழ்க்கை வாழ்ந்தவங்க. அவங்க வழிகாட்டுவாங்க”

புவனாவிற்காக அன்றிரவு கோயிலுக்கு நடந்தே சென்றேன். செருப்பு வைக்கும் இடத்தில் இருந்த பெண் என்னிடம் ஒரு தொன்னையை நீட்டினாள். அதில் சர்க்கரைப் பொங்கல் இருந்தது. நான் தயங்கினேன்.

“சாப்பிடு. புவனாவிற்கு என்ன நடக்கும் எனச் சொல்கிறேன்”

தாயே என அலறியபடி அவளின் காலில் விழுந்தேன். கண்முன்னே விரிந்த காட்சியில் புவனா முதியோர் இல்லத்தில் தன்னைப் பற்றித்தான் பேசினாள். கொடுமை செய்த கணவன், விவாகரத்து, தான் எழுதிய நாட்குறிப்பு அதனால் வந்த சிக்கல் என அனைத்தையும் சொல்லிவிட்டாள்.

“நான் உண்மையப் பேசி நேர்மையா வாழ்ந்தேன். பச்சைப்புடவைக்காரி என்னைக் கைவிட மாட்டா. நீங்களும் எனக்காகப் பிரார்த்தனை செஞ்சீங்கன்னா எனக்குச் சீக்கிரமே விடுதலை கெடைச்சிரும்.” கைதட்டலுக்கு இடையே பேசி முடித்தாள் புவனா.

“கைதட்டல்களால் என்ன லாபம் தாயே?”

“அவசரப்படாதே! புவனாவின் கணவருக்காக வாதாடும் வழக்கறிஞரின் தாயார் அந்த முதியோர் இல்லத்தில்தான் இருக்கிறாள். புவனா பேசி முடித்ததும் மகனைப் போனில் அழைத்தாள். “அந்தப் பொண்ணுக்கு நல்ல வாழ்வு தரவேண்டியது உன் பொறுப்பு. அந்த வேலைய முடிக்காம என்னைப் பார்க்க வராதே...”

தாயின் மீது உயிரையே வைத்திருந்த வழக்கறிஞர் உடனே புவனாவின் கணவனை அழைத்துப் பேசினார். புவனா எழுதிய டயரியைத் தான் புவனாவிடம் கொடுத்து விடப் போவதாகச் சொன்னார். நியாயமான ஜீவனாம்சம் தர ஒத்துக் கொண்டால் தானே சமரசமாக வழக்கை முடித்துத் தருவதாகச் சொன்னார். புவனாவிற்கு விவாகரத்து கிடைத்தது. குழந்தைகள் அவளிடம் ஒப்படைக்கப்பட்டன. குழந்தைகளின் படிப்புச் செலவிற்காகவும் திருமணச் செலவிற்காகவும் புவனாவின் கணவன் அவனுக்குச் சொந்தமான ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை புவனாவிற்குக் கொடுத்தான்.

“புவனாவை நான் பார்த்துக் கொள்கிறேன். இதில் நீ என்ன கற்றுக் கொண்டாய்? உனக்கு என்ன வேண்டும் எனச் சொல்”

“மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் எழுதி வைக்கும் அளவிற்கு எனக்கு நேர்மையும் இல்லை, துணிச்சலும் இல்லை. என் எண்ணங்கள் அப்படிப்பட்டவை. இனிமேல் என் மனதில் நல்ல எண்ணங்கள் மட்டுமே மலர வேண்டும். அவை சக மனிதர்களின் மீது காட்டும் அன்பாக வெளிப்பட வேண்டும். அந்த வரத்தை மட்டுமே யாசிக்கிறேன்”

“இருந்தாலும் இவ்வளவு பேராசை கூடாது”

நான் பதில் சொல்வதற்குள் சிரித்தபடி காற்றுடன் கலந்தாள் பச்சைப்புடவைக்காரி.

--தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us