Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 3

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 3

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 3

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 3

ADDED : அக் 24, 2024 03:04 PM


Google News
Latest Tamil News
தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்

ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் நுால்களை படித்து ஆன்மிக ஈடுபாடு கொண்டவர் சித்தரஞ்சன் தாஸ். இவர் எழுதிய நுால்களில் சில சாகர் சங்கீத், நாராயண் மாலா. சுதந்திரப் போராட்ட வீரரான இவர் தன் 45 வயது முதல் அரசியலில் ஈடுபட்டார். 'இவரே என் அரசியல் குரு' என நேதாஜி தெரிவித்தார் என்றால் தாஸின் புகழுக்கு வேறு என்ன சாட்சி வேண்டும்?

நவ.5, 1870 ல் மேற்கு வங்கம், டாக்கா மாவட்டம் விக்ராம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு பக்தி கதைகளைச் சொல்லி இவரது தாயார் வளர்த்தார். சித்தரஞ்சனின் தந்தை மோகன் தாஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். சகோதரியுடன் தினமும் காளி கோயிலுக்கு செல்வார். அந்தப் பழக்கம் சித்தரஞ்சன் தாஸுக்கு ஆன்மிக பலத்தை அளித்தது. இங்கிலாந்தில் பட்ட மேல் படிப்பு, வழக்கறிஞர் என உயர்நிலையை அடைந்தாலும் இந்தியாவின் அடிமைத் தளையை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் கொழுந்து விட்டு எரிந்தது.

கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய போது ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தார். இவர்களில் ஒருவர் மகான் அரவிந்தர். ஆங்கிலேய அதிகாரி மீது சுதந்திரப் போராட்ட இயக்கமான 'யுகாந்தர்' அமைப்பு குண்டு வீசியது. இந்த சதியில் ஈடுபட்டதாக அரவிந்தர் கைது செய்யப்பட்டார். அவருக்கு விடுதலை பெற்று தந்ததால் சித்தரஞ்சன் தாஸின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது.

1921ல் இங்கிலாந்து இளவரசர் வேல்ஸ் இந்தியாவிற்கு வந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாஸுடன் அவரது மனைவி பசந்திதேவி, மகன் சிராரஞ்சன், சகோதரி ஊர்மிளா என குடும்பமே கைதாயினர். இதைக் கண்டு நாடே வியப்பில் ஆழ்ந்தது.

தன் 55ம் வயதில் ஜூன் 16, 1925 அன்று காளியின் முன்னிலையில் தேசிய போராட்டத் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கும் போது உயிர் நீத்தார். இவரது இறுதி ஊர்வலம் மூன்று கி.மீ., துாரத்திற்கு நீண்டிருந்தது. 'தாஸின் தியாகம், ஆன்மிக சக்தி இந்தியரான நம்மை வழிநடத்தும்' என நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூர் இரங்கல் தெரிவித்தார்.

அவரது இல்லம் 'சித்தரஞ்சன் சேவா சதன்' என்னும் பொது மருத்துவமனையாக தற்போது செயல்படுகிறது.



-தொடரும்

பிரபு சங்கர்

72999 68695





      Our Apps Available On




      Dinamalar

      Follow us