Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தந்திரம்

தந்திரம்

தந்திரம்

தந்திரம்

ADDED : அக் 24, 2024 03:10 PM


Google News
Latest Tamil News
கிருஷ்ணர், பலராமர், அர்ஜுனன் மூவரும் ஒருநாள் காட்டுவழியாக சென்றனர். இருட்டி விட்டதால் ஓரிடத்தில் தங்கி விடிந்ததும் புறப்படலாம் என எண்ணினர். மிருக நடமாட்டம் இருக்கும் என்பதால் ஒரே நேரத்தில் மூவரும் துாங்கக் கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவர் காவல் இருப்பது என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி கிருஷ்ணரும், பலராமரும் துாங்க அர்ஜுனன் மட்டும் விழித்திருந்தான். திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதில் கோர உருவம் ஒன்று வெளிப்பட்டது. அகன்ற நாசியும், துாக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக அது காட்சியளித்தது.

ஆவேசத்துடன் துாங்குவோரின் அருகில் சென்றது. தடுக்க முயன்ற அர்ஜுனனிடம் அவ்வுருவம் துாங்குவோரை கொல்லப்போவதாக கர்ஜித்தது. அர்ஜுனனுக்கு ஆக்ரோஷம் வந்தது. அவனது கோபம் அதிகரிக்க அதிகரிக்க, கோர உருவம் பெரிதாகத் தொடங்கியது. அர்ஜுனனை தாக்கி விட்டு மறைந்தது.

இரண்டாம் ஜாமம் வந்ததும் பலராமரை காவலுக்கு வைத்த அர்ஜூனன் துாங்க ஆரம்பித்தான். அப்போது மீண்டும் கோர உருவம் தோன்றி முன்பு சொன்னதையே பலராமரிடமும் தெரிவித்தது. வெகுண்ட அவருக்கு கோபம் தலைக்கேறியது. அதற்கேற்ப உருவம் பெரிதாகி பலராமரை தாக்கி மறைந்தது.

மூன்றாம் ஜாமம் வந்ததும். கிருஷ்ணரை எழுப்பி விட்டு பலராமர் துாங்க தொடங்கினார். அப்போதும் பொல்லாத உருவம் வெளிப்பட்டது.அதைக் கண்ட கிருஷ்ணர் சிரித்தார்.

''ஏன் சிரிக்கிறாய்?'' எனக் கேட்டது கோர உருவம்.

''துாக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையுமாக இருக்கும் உன்னை பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை'' என்றார் கிருஷ்ணர். ஆக்ரோஷத்துடன் அந்த உருவம் மோத ஆரம்பித்தது. கிருஷ்ணரும் புன்னகை மாறாமல் சண்டையில் ஈடுபட்டார்.

அவர் சிரிக்கச் சிரிக்க உருவத்தின் பலம், அதன் வடிவம் குறைய தொடங்கியது. கடைசியில் அவ்வுருவம் புழுவாக மாறி தரையில் நெளிந்தது. கிருஷ்ணர் அதை ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுது புலர்ந்தது.

பலராமரும், அர்ஜுனனும் கண் விழித்தனர். இரவில் கோர உருவம் தாக்க வந்ததையும், அது பெரிதாக மாறியதையும் பற்றியும் பேசிக் கொண்டனர். அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, ''உங்களுடன் சண்டையிட்ட கோர உருவம் இது தான். இருவரும் கோபத்துடன் சண்டையிட்டீர்கள். உங்களுக்கு கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. சிரித்தபடியே நான் சண்டையிட்டதால் அதன் பலம் குறைந்ததோடு கடைசியில் புழுவாக மாறியது. வம்பு சண்டைக்கு ஒருவன் வரும் போது புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபம் இல்லாதவனே ஞானி'' என்றார்.

கிருஷ்ணரின் இந்த தந்திரம் நம் அனைவருக்கும் அவசியம். இக்கட்டான நேரத்தில் புன்னகையுடன் செயல்பட்டால் பெரிய பிரச்னை கூட சிறிதாகி விடும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us