Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 37

பச்சைப்புடவைக்காரி - 37

பச்சைப்புடவைக்காரி - 37

பச்சைப்புடவைக்காரி - 37

ADDED : அக் 24, 2024 03:02 PM


Google News
Latest Tamil News
தவமின்றி பெற்ற வரம்

“ என் விஷயத்துல கடவுளுக்குக் கண் இல்லங்கறது சரியாத்தான் இருக்கு” என வந்தவுடனேயே கோபத்தில் பொங்கிய முப்பது வயதுப் பெண்ணைப் பார்த்தேன். கடவுளின் பார்வையை பற்றி அவள் பேசியது அறியாமையின் உச்சக்கட்டம்.

“நான் பிரியா. எங்கப்பா ராஜசேகர் கல்லுாரிப் பேராசிரியர். கணக்குப் பாடம் சொல்லித் தரதுல புலி. இன்னிக்கு எத்தனையோ பேராசிரியர்கள் தனியா டியூஷன் நடத்தி சம்பாதிக்கிறாங்க. ஆனா எங்கப்பா இலவசமா சொல்லித் தர்றாரு. தினமும் பச்சைப்புடவைக்காரிக்கு பூஜை செய்வாரு. வாரம் தவறாமக் கோயிலுக்குப் போவாரு. அவருக்குப் போய்...''

“என்னாச்சு?”

“56 வயசுதான் ஆகுது. திடீர்னு காய்ச்சல் வந்து பார்வை போயிடுச்சி. ஏதோ புது நோயைக் காரணமாச் சொல்றாங்க''

“பார்வை போனதுனால வேலையும் போயிருச்சி. மாசம் இரண்டு லட்சம் சம்பாதிச்சவரு இப்போ வீட்டுல இருக்காரு. இப்பவும் பூஜை பண்றாரு. இவ்வளவு நல்லவர ஏன் பச்சைப்புடவைக்காரி தண்டிக்கணும்? ஒருவேளை அவளுக்கும் பார்வை இல்லையோ?”

“போஸ்ட்” என்ற குரல் கேட்டது. வெளியே ஓடினேன். காக்கி உடையில் கம்பீரமாக இருந்தாள் அஞ்சலக ஊழியர். யார் என புரிந்தது. விழுந்து வணங்கினேன்.

“அவளைத் திட்டாதே. தந்தையை அழைத்து வரச் சொல். அவனைப் பார்த்ததும் என்ன பேச வேண்டும் என தெரியும்”

பச்சைப்புடவைக்காரியை வணங்கிவிட்டு உள்ளே ஓடினேன்.

''உங்கப்பா எங்க இருக்காரு”

“கார்லதான் இருக்காரு”

“ஜாக்கிரதையா கூட்டிட்டு வாம்மா” கண்ணாடி அணிந்திருந்த ராஜசேகரின் முகத்தில் அறிவின் கம்பீரம் தெரிந்தது.

“நடந்ததை எல்லாம் சொல்லப் போறேன். உங்க மக இருக்கலாமா?”

“இருக்கலாம்” அவரது குரல் பலவீனமாக இருந்தது. பிரியாவுக்குக் காரணமில்லாமல் கோபம் வந்தது. “ஒரு பாவமும் அறியாத எங்கப்பா கண்ணப் பறிச்ச பச்சைப்புடவைக்காரி ராட்சசிதானே”

“வாய மூடு. பச்சைப்புடவைக்காரிய தப்பா பேசினா நடக்கறதே வேற”

“அவள மன்னிச்சிருங்க சார்” ராஜசேகர் மன்றாடினார். பிரியாவும் அமைதியானாள்.

“ராஜசேகர் உங்களோட பலவீனம் என்ன?”

மவுனம் காத்தார் அவர். பின் மெதுவாக “கொஞ்சம் முன்கோபம் ஜாஸ்தி” என்றார்

“எவ்வளவு பெரிய விஷயத்த “முன்கோபம் ஜாஸ்தி”ன்னு லேசா சொல்லிட்டீங்க? உங்க கோபம் எத்தனை பேர நோகடிச்சிது தெரியுமா? உங்க கோபத்தால ஒரு பெண் செத்தே போனதை மறந்துட்டீங்களா?”

பிரியாவின் முகம் வெளிறியது.

“பிரியா... உங்கப்பா கத்தினா எதிரில் இருக்கறவங்களால தாங்க முடியாது. இதுவரைக்கும் எத்தனை பேர உங்கப்பா நோகடிச்சிருப்பாரு தெரியுமா? அதைக்கூட மன்னிச்சிட்டா பச்சைப்புடவைக்காரி.

மூணு வருஷத்துக்கு முன்னால உங்கப்பாவோட ஸ்டூடண்ட் ஒருத்தி பாடம் நடத்தும்போது ஏதோ நோட்ஸை பாத்துக்கிட்டிருந்தா. அந்தப் பாடம் சம்பந்தப்பட்ட நோட்ஸ்தான். உங்கப்பா சொல்றதும் அந்த நோட்ஸ்ல இருக்கறதும் வித்தியாசமா இருக்கேன்னு ஒரு ஆர்வத்துல அதப் பாத்துக்கிட்டிருந்தா. உங்கப்பாவுக்கு வந்துச்சி பாரு கோபம்! கத்தித் தீத்துட்டாரு. ஆணும், பொண்ணும் சேர்ந்து படிக்கற கிளாஸ்ல வயசுப் பொண்ணு என்ன வார்த்தையெல்லாம் கேட்கக்கூடாதோ அதையெல்லாம் கேட்டா. உங்கப்பா அத உடனே மறந்துட்டாரு. ஆனா அந்தப் பொண்ணால அந்த வலிய மறக்க முடியல. அன்னிக்கே தற்கொலை பண்ணிக்கிட்டா”

“எங்கப்பா முன்கோபக்காரர்தான். அது தெரியும். அதுக்காக அவருக்கு இவ்வளவு பெரிய சாபமா? பச்சைப்புடவைக்காரிக்கு கருணை இல்லையா? அவள எப்படி தாய்னு சொல்றீங்க?”

“உங்கப்பா பார்வையை இழந்தது சாபம் இல்லம்மா. பச்சைப்புடவைக்காரி கொடுத்த வரம். அதுவும் தவமில்லாம கிடைச்ச வரம்”

“என்ன உளறுறீங்க?”

“உங்கப்பா மனசுல இருந்த முன்கோபம் அதிகமாகிக்கிட்டே போச்சுன்னா அது அவரை ஆபத்தில தள்ளிடும். அதை தடுக்கவே பார்வையப் பிடுங்கிட்டா பச்சைப்புடவைக்காரி”

“என்ன சொல்றீங்க?”

“பார்வை இழந்தாச்சுன்னா யாரையாவது சார்ந்தே வாழணும். இந்த நிலையிலதான் உங்கப்பாவுக்கு மனிதர்களின் அருமை தெரியும். உங்கப்பா இன்னும் சில வருடம் வாழ்வாரு. ஆனா அவருக்கு கோபம் வராது. மனசு பக்குவம் ஆயிடும்”

“இருந்தாலும்...''

“ அடிக்கடி அவரைத் தேடி பழைய மாணவர்கள் வருவாங்க. அவங்கள்லாம் இன்னிக்கு வெளி நாடுகளில் உயர்ந்த பதவிகளில் இருக்காங்க. அவங்க எல்லாம் உங்கப்பா கையப் பிடிச்சிக்கிட்டு 'உங்களாலதான் சார் நான் இந்த நிலையில இருக்கேன்'னு சொல்லும்போது உங்கப்பாவுக்கு கண்ணீர் வரும். அது கர்மக் கணக்கை எல்லாம் அழிச்சு சுத்தம் பண்ணும்''

பிரியா மவுனமானாள். ராஜசேகர் கரகரப்பான குரலில் பேசினார்.

“நீங்க சொல்றது சரிதான். என் கோபத்தால எத்தனையோ நட்பு, உறவுகளை இழந்துட்டேன். நான் கோபப்படாம இருந்திருந்தா என் மனைவி அகாலத்தில செத்திருக்க மாட்டா...''

பேச முடியாமல் அவருக்கு அழுகை வந்தது.

“உங்க மக பிரியாவ மறந்துட்டீங்களே! அவ உங்க பொண்ணு இல்ல. உங்களை பெற்ற தாய். இவதான் உங்களப் பாத்துக்கப் போறா. உங்களுக்காகப் பச்சைப்புடவைக்காரியவே பழிச்சிப் பேசினாளே, இவ மனசுல எவ்வளவு அன்பு இருக்கணும்?”

பிரியா அழத் தொடங்கினாள்.

“உங்களுக்குப் பார்வை இல்லயே ஒழிய மூளை நல்ல செயல் திறத்தோட இருக்கு. நீங்க தொடர்ந்து கணக்கு டியூஷன் எடுக்கலாம். உங்களால பலருக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும். பச்சைப்புடவைக்காரி உங்கள என்னிக்கும் கைவிட மாட்டா”

தந்தையும் மகளும் சென்றவுடன் கிளம்பினேன். அஞ்சலக ஊழியர் நின்றிருந்தாள். அவளின் பாதம் தொட்டு வணங்கினேன்.

“உனக்கு என்ன வேண்டும்?”

“கோபத்தால் வாழ்வைத் தொலைத்தவர்களுக்காக உங்களிடம் பிரார்த்திக்கிறேன்”

“என்னவென்று?”

“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்”

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us