Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வத்தாய் பூமா

தெய்வத்தாய் பூமா

தெய்வத்தாய் பூமா

தெய்வத்தாய் பூமா

ADDED : அக் 25, 2024 08:23 AM


Google News
Latest Tamil News
'ப்ராக்ஜ்யோதிஷபுரம்' என்பதற்கு 'ஒளி மிக்க நகரம்' என்று பொருள். இந்த நகரம் தான் அசாம் தலைநகர் கவுகாத்தி. ஊரின் பெயரில் இருக்கும் ஒளி, இந்த நகரை ஆட்சி செய்த மன்னன் நரகாசுரனிடம் இல்லை. இவன் மகாவிஷ்ணுவின் மகன்.

ஒருசமயம் அசுரன் ஒருவன் பிரம்மாவிடம் வேதங்களைப் பறித்து பாதாள லோகத்திற்குள் ஓடினான். இதை மீட்க மகாவிஷ்ணு பாதாளத்திற்குள் வராக அவதாரம் எடுத்து நுழைந்தார். அப்போது அவரது ஸ்பரிசம் பூமாதேவியின் மீது பட்டதால் ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு 'பவுமன்' என பெயரிட்டாள் பூமாதேவி. பவுமன் என்பதற்கு 'பூமியின் பிள்ளை' என்பது பொருள்.

பவுமன் பெரும் தவஆற்றலுடன் வளர்ந்தான். தன் உயிரை தனது தாயைத் தவிர வேறு யாராலும் பறிக்க முடியாது என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றான். இதன் மூலம் பல தலைமுறைகளைக் கடந்து வாழ்ந்தான். அவனது அட்டகாசம் அதிகரித்தது. மகாவிஷ்ணுவின் மகன் என்பதால் அவனைப் பற்றி குறை சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை.

ஆனாலும் ஒரு கட்டத்தில் மகாவிஷ்ணுவின் கவனத்திற்கு விஷயம் போனது. இந்நிலையில் அவர் பூலோகத்தில் கிருஷ்ணாவதாரம் எடுத்திருந்தார். பூமாதேவி அப்போது மானிடப் பெண்ணாக சத்ராஜித் என்ற மன்னனின் மகளாகப் பிறந்திருந்தாள். அப்போது அவளது பெயர் சத்யபாமா. இவளை கிருஷ்ணர் திருமணம் செய்தார்.

பூலோகப் பிறப்பின் காரணமாக, பூமாதேவிக்கு முற்பிறவி நினைவுகள் இல்லை. அவளுக்கு 'பவுமன்' என்றொரு மகன் இருப்பதே மறந்து போனது. இந்த நிலையில் கிருஷ்ணர் பவுமனுடன் போருக்குப் புறப்பட்டார். சத்யபாமா தேரோட்டுவதில் வல்லவள் என்பதால் கணவருக்கு சாரதியாக இருந்து தேரோட்டிச் சென்றாள்.

பவுமன் தோற்றத்தில் நரனாக (மனிதன்) இருந்தாலும் அசுர குணங்களைக் கொண்டிருந்ததால் 'நரகாசுரன்' எனப் பெயர் பெற்றிருந்தான்.

மகன் என்றும் பாராமல், தர்மத்தைக் காக்க நரகாசுரனுடன் மகாவிஷ்ணு போரிட்டார். அவரால் அவனை கொல்ல முடியாது. அது நரகாசுரன் பெற்ற வரத்தின் விளைவு. எனவே, அவனது அம்பு பட்டு மயங்குவது போல நடித்தார். கணவரது உயிருக்கு ஆபத்து நேரும் என்ற நிலையில், தேரில் இருந்த சத்யபாமா வெகுண்டெழுந்தாள். ஒரு அம்பை நரகாசுரன் மீது விட, அவன் மயங்கி விழுந்தான்.

அப்போது தான் தன் மீது அம்பு எய்தவள் தன் தாய் என்பது அவனுக்கு புரிந்தது.

''அம்மா! அடங்காத பிள்ளையாக வளர்ந்து விட்டேன். அதற்காக மன்னித்து விடு. உன் கையால் உயிரை இழப்பது மகிழ்ச்சியே. என் மரணத்தை இந்த உலகமே விளக்கேற்றி கொண்டாட வேண்டும். அந்த வரத்தை எனக்கு தருவாயா?” எனக் கேட்டான்.

அதன் பிறகே, பெற்ற மகனைக் கொல்லும் பாவியாக தான் நிற்பதை உணர்ந்தாள் பூமாதேவி. இருப்பினும் மனதை தேற்றிக் கொண்டாள். ''மகனே! நீ கேட்ட வரத்தை அளிக்கிறேன்'' என்றாள். நரகாசுரனின் உயிர் பிரிந்தது.

அந்த நிலையிலும் மக்களுக்கு கஷ்டம் வரக் கூடாது என்ற நிலையில் மேலும் சில வரங்களை வழங்கினாள். அதில் ஒன்று தான் தீபாவளியன்று அதிகாலையில் வெந்நீரில் குளிப்பது. பொதுவாக, காலையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பது நியதி. ஆனாலும் ஐப்பசி மாதம் அதிகாலை குளிரில் நடுங்கக் கூடாது என்பதால் வெந்நீரில் குளிக்க அனுமதித்தாள். அதையறிந்த கங்காதேவி, தான் அந்த வெந்நீரில் வாசம் செய்வதாக தன் பங்குக்கு வரம் அளித்தாள். அதனால் தீபாவளி குளியலை 'கங்கா ஸ்நானம்' எனச் சொல்கிறோம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us