Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சொல்லச் சொல்ல இனிக்குதடா - 35

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 35

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 35

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 35

ADDED : பிப் 28, 2025 07:57 AM


Google News
Latest Tamil News
குன்றக்குடி

நேத்து தான் குன்றத்துார் கோயிலுக்கு போன மாதிரி இருக்கு, அதுக்குள்ள ஒரு வாரம் ஓடிப் போயிடுச்சே... என பிரமித்தார் பாட்டி. அவரது முகக் குறிப்பை அறிந்தவனாக “நல்லபடியா குன்றத்துார் போய் வந்தாச்சு. இப்ப எந்த கோயில் பத்தி சொல்லப் போற?” என விளையாட்டாக கேட்டான் யுகன்.

“போன வாரம் போன ஊரோட பாதி பெயர் இந்த ஊருடைய பெயரிலும் பாதி இருக்கு. எந்த ஊர்... சொல்லு பாப்போம்”

யோசித்தான் யுகன். அதற்குள் அறைக்குள் இருந்த தேவந்தி எட்டிப் பார்த்து குன்றக்குடி என்றாள். “ அடிப்பாவி! கண்டுபிடிச்சிட்டியே, பர்ஸ்ட் பால்லேயே சிக்சர்” என தேவந்தியை பார்த்து தம்ஸ் அப் காட்டினான் யுகன்.

“கஷ்டம் தீர்க்கும் குன்றக்குடின்னு தான் மக்கள் மனசுல பதிஞ்சிருக்கே. தேவந்திக்கும் அது தெரியாதா என்ன! அண்ணன் விநாயகர், தம்பி முருகன் பக்கத்து பக்கத்துல இருக்கும் கோயில் தமிழகத்திலேயே இங்கு தான் இருக்கு” தேவந்தியும் யுகனும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு பாட்டியை நெருங்கினர்.

“சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் இருக்கு குன்றக்குடி. புகழ்மிக்க பிள்ளையார்பட்டியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் இருக்கு. இங்கும் குன்றின் மீதே முருகன் இருக்கிறார்”

“குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்னு சொல்வாங்க. வயலின் வித்துவான் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த ஊர் இது. 'எம்டன் மகன்', 'தவமாய் தவமிருந்து' படக் காட்சிகள் இங்கு தான் ஷூட்டிங் நடந்ததுனு கேள்விப்பட்டு இருக்கேன்' என்றான் யுகன்.

“இந்த கோயில் சிறந்த பிரார்த்தனை தலம். குன்றோட சிறப்பே மயில் போன்ற அமைப்பில் இருப்பது தான். மயில் அடை காத்து படுத்திருந்த மாதிரியே கோயில் இருக்கும். முருகனின் வாகனம் மயில் அவருடைய சாபத்தால் இங்கு இப்படி மலையாகி விட்டதாக புராணம் சொல்லுது”

“முருகன் சபித்தாரா... கேள்விப்பட்டதில்லையே” என ஆச்சரியப்பட்டான் யுகன்.

“அசுரர்கள் ஒருமுறை முருகனின் வாகனமான மயிலைச் சந்தித்தனர். அப்போது பிரம்மாவின் வாகனம் அன்னமும், மகாவிஷ்ணுவின் வாகனம் கருடனும் தங்களிடம் வந்ததாகவும், 'நாங்கள் இருவரும் மயிலை விட வேகமாக பறக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என சொன்னதாகவும் பொய் சொன்னார்கள். சூதுவாது அறியாத மயில் இதை நம்பி கண்மூடித்தனமாக கோபித்தது. பிரம்மாண்டமாக வடிவெடுத்து கருடன், அன்னத்தை விழுங்கியது”

“என்னது... கருடன், அன்னத்தை மயில் விழுங்கிடுச்சா! அப்புறம் என்னாச்சு” என ஆர்வமுடன் கேட்டான் யுகன்.

“ஒரு குழந்தை தப்பு பண்ணினா என்ன பண்ணுவோம்? உடனே குழந்தையோட அம்மாவிடம் புகார் சொல்வோம் இல்லையா? அதே போல பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் முருகனிடம் முறையிட்டனர். அவரும் அன்னம், கருடனை மீட்டுக் கொடுத்தார். 'உனக்கு ஏன் கர்வம்' என கோபித்து மயிலை மலையாக கடவது என சபித்தார். தவறை உணர்ந்த மயில் வருந்தியது.

மலையாக இருந்தபடியே தவம் செய்தது. மனமிரங்கிய முருகன் விமோசனம் அளித்தார். அந்த இடமே குன்றக்குடி. மயில் தவமிருந்த இத்தலத்தில் முருகன் எழுந்தருளினார். இங்கு காவடி, பால் குடம், அங்கப்பிரதட்சணம், அடிப்பிரதட்சணம் என எப்பவும் நேர்ச்சைகள் நடந்தபடி இருக்கும்”

''குன்றக்குடிக்கு நாமெல்லாம் ஒன்னா போனதா ஞாபகம். மலைப்படியில் ஏறினது கூட பசுமையா நினைவில் இருக்கு பாட்டி”

“இந்த கோயிலில் இன்னொரு விசேஷம் முருகன் மட்டும் மயில் வாகனத்தில் இல்ல. வள்ளி, தெய்வானையும் மயிலில் இருப்பது தான். இங்கு கல்யாணம் பண்ணினால் வாழ்வு சிறக்கும். இடும்பன் சன்னதியில் உப்பும், மிளகும் இட்டால் தோல் நோய் மறையும். பிரார்த்தனை நிறைவேறியதும் உடல் உறுப்புகள் பொறித்த வெள்ளி தகட்டை காணிக்கை கொடுப்பாங்க. மலைக்கு கீழே சுயம்பு மூர்த்தியான தேனாற்று நாதர் கோயில் இருக்கு. அருள்சக்தி என்ற பெயரில் அம்மன் சன்னதி உள்ளது. அகத்தியர் வழிபட்ட சிவன் இவர். இன்னொரு தகவல் சொல்றேன் கேளு. மருது சகோதரர்கள் கேள்விப்பட்டு இருக்கியா?”

“என்ன அப்படி சொல்லிட்ட? சுதந்திர போராட்ட வீரர்களை மறக்க முடியுமா...”

“வரலாறு படிச்சி இருப்ப, ஆனா ஆன்மிக தகவல் தெரியாதே. பெரிய மருதுக்கு முதுகில் ராஜபிளவை(கட்டி) வந்துடுச்சு. குன்றக்குடி முருகன் பிரசாதமான திருநீற்றால் குணப்படுத்தினார் பெரியவர் ஒருவர். இந்த தகவல் குன்றக்குடியின் பெருமையை உணர்த்தும். இங்கு வழிபட்டால் நோய்,கடன் தீரும். விவசாயம் செழிக்கும். திருமணம், குழந்தை வரம், ஆயுள், உடல்நலம் உண்டாகும். தீராத சிக்கலும் தீரும்”

“அகத்தியர் வந்தார் சரி, குன்றக்குடிக்கு அருணகிரிநாதர் வந்தாரா பாடினாரா?”

“பழமையான கோயிலான இங்கு ஏழு பாடல்கள் பாடினார் அருணகிரிநாதர். நிறைவான வாழ்வை பெற குன்றக்குடி முருகனைச் சரணடையலாம். அதே போல கந்தர் அனுபூதி படிச்சாலும் மன நிறைவான வாழ்வு அமையும். அதிலும் கடைசி நான்கு வரி இருக்கு இல்லையா... அது ரொம்ப விசேஷம். அந்த நாலு வரிகளை மட்டுமே 108 முறை தினமும் பாராயணம் செய்பவர்கள் இருக்காங்க”

“அந்த கடைசி நாலு வரியில அப்படி என்ன விசேஷம்?”

“ முதல்ல பாடுறேன் கேளு. உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே''

அதாவது உருவம் உள்ளவர், இல்லாதவர், உள்ள பொருள், இல்லாத பொருள், நறுமணம், மணம் மிக்க மலர், ரத்தினம், அதன் ஒளி, உயிர் இடம் பெறும் கரு, உடல், உயிர், நற்கதியான புகலிடம், நற்கதியை நோக்கிச் செலுத்தும் விதியாகவும் விளங்கும் முருகன் என்னும் குருமூர்த்தியே... அடியேனுக்கு அருள் புரிவீராக! என்பது இதற்கான பொருள்.

கந்தர் அனுபூதியை தொடர்ந்து படித்தால் அருள் நிலையில் மேம்பாடு ஏற்படும். இது பற்றி காஞ்சி மஹாபெரியவர் சொன்ன சுவாரஸ்யமான தகவலும் இருக்கு. சங்கீத வித்வான் ஒருவர் சுவாமிகளிடம் தன் ஏழ்மை பற்றி வருந்தினார். அவரிடம் கந்தர் அனுபூதி பாடு; கேட்போம் என்றார். பாடி முடித்ததும் கடைசி வரியை மீண்டும் பாடு என்றார். அவரும், 'குருவாய் வருவாய் வருவாய் குகனே' என ஓரிரு முறை பாடினார்.

வருவாய் (வருமானம்) தரச் சொல்லி முருகனிடம் கேள், அவன் நிச்சயம் தருவான் என்றார் சுவாமிகள். அவரும் அப்படியே வேண்டிப் பாட விரைவில் வறுமை நீங்கியது. அன்றாட பூஜை முடிக்கும் போது மங்கலமாக இதை பாடும் சம்பிரதாயம் உண்டு” என பாட்டி சொன்னதை ஆர்வமுடன் கேட்டனர் யுகனும், தேவந்தியும்.

“இந்த கந்தர் அனுபூதி நிறைவு பாடல் மனசை தொட்டுடுச்சு பாட்டி”

“ஆமா... அருணகிரிநாதர் மூலமா இந்த மந்திரங்களை நமக்கு சொன்னது சாட்சாத் அந்த முருகப்பெருமானே தான். தலையெழுத்து மோசமாக இருந்தாலும் அதை அழிச்சு நன்மை தரக் கூடியதா மாற்றம் செய்வது இது போன்ற மந்திரங்கள் தான்”

“அடுத்த வாரம் எந்த மந்திரம் பாட்டி?”

“என்னடா யுகா, கோயிலை விட்டுட்டு இப்ப எல்லாம் மந்திரத்தை பிடிச்சுக்கிட்ட போல'' என சிரித்த பாட்டி, அமுதனின் அருகில் இருந்த சிலேட்டில் எழுதி காட்டினார். பாட்டியின் அழகான கையெழுத்தில் 'திருமுருகன் பூண்டி' என அழகாகத் தெரிந்தது.

-இன்னும் இனிக்கும்பவித்ரா நந்தகுமார்

94430 06882





      Our Apps Available On




      Dinamalar

      Follow us