Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 19

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 19

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 19

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 19

ADDED : பிப் 28, 2025 07:59 AM


Google News
Latest Tamil News
'ஜெய்ஹிந்த்' செண்பகராமன்

சுதந்திர உணர்வைப் பொங்கச் செய்யும், 'ஜெய்ஹிந்த்' என்ற மந்திரச் சொல்லை முதன் முதலில் உச்சரித்தவர் செண்பகராமன் பிள்ளை. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புத்தன் சந்தை என்ற ஊரில் சின்னசாமி பிள்ளை, நாகம்மாள் தம்பதிக்கு 1891, செப்.15 ல் பிறந்தார்.

இவரது தந்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சுதேச அரசு சேவையில் தலைமைக் காவலராகப் பணியாற்றினார். இளம் வயதிலேயே செண்பகராமன் சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றார். ஆறாம் வகுப்பு படித்த போது, தன் வீட்டருகே குடியிருந்த கிருஷ்ணசாமி ஐயர் என்னும் தேச பக்தரின் வீட்டுக்கு அடிக்கடி செல்வார். அங்கு இந்திய விடுதலைப் போராளிகளான வீர மங்கை ஜான்சி ராணி, வீர சிவாஜி, ராஜாராம் மோகன்ராய், கோபால கிருஷ்ண கோகலே, திலகர் ஆகியோரின் படங்களைப் பார்த்து வியந்தார்.

அவர்களைப் பற்றி அறிந்தவுடன் மனதில் நாட்டுப்பற்று வளர ஆரம்பித்தது. அந்த வயதிலேயே சக மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு 'ஸ்ரீபாரதமாதா வாலிபர் சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கி 'வந்தே மாதரம்' என முழக்கம் செய்தார். இந்த உறுப்பினர்கள் சந்திக்கும் போது ஒருவருக்கொருவர் 'வந்தே மாதரம்' எனச் சொல்லிக் கொள்வர்.

கல்லுாரியில் படித்த போது ஒருமுறை மரத்தடியில் குளிரில் நடுங்கியபடி ஒருவர் படுத்திருந்ததைக் கண்டார் செண்பகராமன். அவர் வெள்ளைக்காரராக இருந்தாலும், அவருக்கு உதவ வேண்டும் என்ற மனிதநேயத்துடன் கைத்தாங்கலாக வீட்டிற்கு அழைத்துச் சென்றார். குளிரில் நடுங்கியதால் மூலிகைக் கஷாயம், கஞ்சி தயாரித்து கொடுத்தார். செண்பகராமனின் அன்பைப் பெற்ற அந்த வெள்ளைக்காரர், தான் ஆங்கிலேயர் அல்ல என்றும், அவர்களுக்கு எதிரான ஜெர்மானியர் என்றும் தெரிவித்தார்.

அதைக் கேட்டு செண்பகராமன் வியந்தார். ஆமாம், அவர் பெயர் வால்டர் வில்லியம், தாவர உயிரியல் நிபுணர். இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக உளவு பார்க்க, ஜெர்மனியில் இருந்து வந்ததாகச் சொன்னார்.

மகிழ்ச்சியடைந்த செண்பகராமன், தன் நோக்கம் நிறைவேறுவதற்காகவே இந்த நண்பரை அறிமுகப்படுத்திய கடவுளின் அருளுக்கு நன்றி சொன்னார். ஆங்கிலேயரின் கொடுங்கோல் ஆட்சியை விரட்ட, இருவரும் இணைந்து ஆலோசிப்பார்கள். அப்போது வால்டர், ''நாம் இங்கிருந்து எதிர்ப்பதை விட, ஜெர்மனிக்குச் சென்று அங்கிருந்து திட்டங்கள் தீட்டுவோம்; உன் உயர்கல்வி செலவுகளை நானே ஏற்கிறேன்'' என வாக்களித்தார் அவர். உடனே பெற்றோரின் அனுமதியுடன் இலங்கை வழியாக இத்தாலிக்குச் சென்றார். வால்டரின் உதவியால் இத்தாலி, பிரெஞ்சு, ஆங்கில மொழிகளைக் கற்றார். சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் எலக்ட்ரானிக் இன்ஜினியர் பட்டம் பெற்றார். அதோடு ஜெர்மன் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றார்.

தென்னாப்பிரிக்கா, இந்தியாவை ஆங்கிலேயர் பிடியில் இருந்து மீட்க 'அகில உலக ஆதரவுக் குழு'வை உருவாக்கினார். அதன் மூலம் 'ஜெய்ஹிந்த்' என்ற தாரக மந்திரத்தை உலகெங்கும் பரப்பினார். இந்தக்குழுவில் வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, பூபேந்திரதாஸ், சந்திரகாந்த் சக்ரவர்த்தி, எம். பிரபாகர், பிரேந்திர சர்க்கார், ஹேரம்லால் குப்தா ஆகியோரும் இருந்தனர். இந்தக் குழு சார்பில் 'ப்ரோ இந்தியா' என்ற பத்திரிகையை ஆரம்பித்தார் செண்பகராமன். அதில் ஆங்கிலேயர்களின் அராஜக கொடுமைகளை ஐரோப்பியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என செய்திகள் வெளியிட்டார். இதனால் வாசகரிடையே இந்தியா பற்றிய ஆங்கிலேயர் காட்டிய பொய் பிம்பம் தெரிய ஆரம்பித்தது.

அது மட்டுமன்றி, சீனா, தென்னாப்பிரிக்கா, பர்மாவுக்கு பயணம் செய்து ஆதரவு திரட்டினார். மீண்டும் ஜெர்மனிக்குத் திரும்பிய செண்பகராமன், அந்நாட்டின் மன்னர் கெய்சரைச் சந்தித்து, ஆயுதத் தாக்குதல் மூலமாக ஆங்கிலேயரை நிலைகுலைய செய்ய வேண்டும் என உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

அதற்கு உடன்பட்டார் கெய்சர். தன் நாடு ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிராக செயல்படுவதால், செண்பகராமன் மூலமாக கூடுதல் எதிர்ப்பைக் காட்டலாம் என தீர்மானித்தார். அதற்காக பீரங்கிகள் பொருத்தப்பட்ட, வேகமாகச் செல்லத்தக்க, சிறு அளவிலான நீர்மூழ்கிப் போர்க் கப்பல்களைத் தயாரிக்க உத்தரவிட்டார்.

எஸ்.எம்.எஸ்.எம்டன் என பெயரிடப்பட்ட அந்தக் கப்பல் ஒவ்வொன்றும் 3600 டன் எடை கொண்டவை. 25 கடல் மைல் வேகத்தில் செல்லத்தக்கவை. இதில் பொருத்தப்பட்ட 10.5. செ.மீ., அளவு கொண்ட 10 பீரங்கிகள் வெகு தொலைவிலுள்ள இலக்கையும் துல்லியமாகத் தாக்கி அழிக்கும்.

அதே சமயம், 1914ல் உலகப் போர் மூண்டதால், இங்கிலாந்தை நேரடியாக எதிர்த்துப் போரிட்டது ஜெர்மனி. தங்களுக்கு உதவுவதற்காக எம்டன் கப்பலின் பொறியாளராக செண்பகராமனை நியமித்தார் மன்னர். அந்தக் கப்பலில் இருந்து குண்டு மழை பொழிந்து சென்னையில் இருந்த ஆங்கிலேயரின் கோட்டையை தகர்க்கவும், அந்தமான் சிறையை உடைத்தெறிந்து வீரசாவர்க்கர் போன்ற தியாகிகளை மீட்கவும் செண்பகராமன் திட்டம் வகுத்தார்.

அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து 2700 மீ தொலைவில் நிலை கொண்ட எம்டன் கப்பல், இருபது நிமிடத்திற்கு 130 ரவுண்டு குண்டுகளை வீசியது. அவை ஆங்கில அரசுக்குச் சொந்தமான இரண்டு பெரிய எண்ணெய்க் கிடங்குகள் தீக்கிரையாக்கின. சென்னை, திரிகோணமலை (இலங்கை) துறைமுகம், சென்னை கோட்டை, நீதிமன்ற கட்டடத்தையும் குண்டுகள் தாக்கின. இதில் நீதிமன்ற வெளிப்புறச் சுவர் முற்றிலுமாக சேதம் அடைந்தது. ஆனால் கோட்டையை நோக்கி வந்த குண்டு, வெடிக்காமல் கடற்கரை மணலில் புதையுண்டது. இந்த குண்டு சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி அடைந்தது ஆங்கில அரசு. தாக்குதல் நடத்தியவர்கள் எந்த நாடாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க களமிறங்கியது. ஆனால் அவர்களிடம் தப்பிய செண்பகராமன் ஜெர்மனியை அடைந்தார்.

அவருடைய இந்தத் தீரச் செயலைப் பாராட்டும் வகையில் மன்னர் கெய்சர், அவருக்கு தன் நாட்டின் பிரதான விருதான 'வான்' பட்டம் வழங்கினார். தன்னை மன்னர் பயன்படுத்திக் கொண்டது ஜெர்மனியின் சுயநலத்துக்காகத்தான் என்பது செண்பகராமனுக்குப் புரிந்தாலும், அதனால் ஆங்கிலேயரை அலற வைத்ததில் அவருக்கு சந்தோஷம்தான்!

முதல் உலகப் போர் முடிவதற்குள் இங்கிலாந்துக்குக் கடுமையான நெருக்கடிகளை கொடுக்க திட்டமிட்டார். அவற்றில் ஒன்றாக இந்தியாவில், உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த மன்னர் மகேந்திர பிரதாபிடம் நட்பை வளர்த்துக் கொண்டார். ஆப்கானிஸ்தான் மன்னர் ஹபிபுல்லா, பிரதாபின் நண்பராக விளங்கினார். இந்த இருவரின் உதவியுடன், நாடு கடந்த சுதந்திர அரசு அமைப்பதில் ஈடுபட்டார் செண்பகராமன். அதாவது இந்தியாவுக்கு வெளியே இருந்தபடி நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கம்.

அதன்படி விடுதலை வேட்கை மிகுந்த தலைவர்கள், ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் 1915 டிச.1 அன்று கூடினர். அப்போது 'சுதந்திர இந்திய அரசாங்கம்' நிறுவப்பட்டது. இதற்கு மன்னர் மகேந்திர பிரதாப் ஜனாதிபதியாகவும், மவுலானா பரக்கத்துல்லா பிரதமராகவும், செண்பகராமன் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். இப்படி ஒரு 'நிழல் அரசு' அமைய முழு மூச்சுடன் பாடுபட்ட செண்பகராமனை, ரஷ்ய அதிபர் லெனின் வாழ்த்தினார். ஜப்பானிய மன்னரும் ஆதரவு அளிக்கவே உற்சாகம் கொண்டார் செண்பகராமன்.

-தொடரும்

பிரபு சங்கர்

72999 68695





      Our Apps Available On




      Dinamalar

      Follow us