Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/ஒரு பன்றியின் கதை

ஒரு பன்றியின் கதை

ஒரு பன்றியின் கதை

ஒரு பன்றியின் கதை

ADDED : பிப் 27, 2025 03:04 PM


Google News
Latest Tamil News
துறவி ஒருவர் ஊருக்கு வெளியே ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்தார். அவருக்கு சீடர்கள்

பலர் இருந்தனர். ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று குட்டிகளுடன் வசித்தது. சீடர்கள் அதை துரத்த முயற்சித்தும் அது அசையவில்லை.

'பரவாயில்லை, பன்றி இருந்து விட்டுப் போகட்டும். அதுவும் கடவுளின் படைப்புத் தானே'' என்றார் துறவி.

காலம் நகர்ந்தது. தினமும் சீடர்களுடன் துறவி ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார். அப்போது பன்றியை பார்த்துக் கொண்டே செல்வார். அவ்வப்போது பன்றிக்கு உணவளிக்கச் சொல்வார் துறவி. வயதான பின்னர் ஒருநாள் நோய்வாய்ப்பட்டார். மரணம் நேரப் போவதையும், அடுத்த பிறவியில் ஆஸ்ரமத்திற்கு அருகிலுள்ள பன்றிக் கூட்டத்தில் பிறக்கப் போவதையும் ஞான திருஷ்டியால் அறிந்தார்.

இறக்கும் நேரம் நெருங்கியது. அப்போது சீடனிடம் '' நான் இன்றிரவு இறப்பேன். அருகில் வசிக்கும் பெண் பன்றியின் கருவில் நுழைந்து குட்டியாகப் பிறப்பேன். நீ அதை கண்காணித்துக் கொள்.

பிறக்கப் போகும் குட்டியை மூன்றாம் நாளன்று கொன்று விடு. இந்த வாய்ப்பின் மூலம் பன்றியின் வாழ்க்கையை இரண்டு நாளாவது வாழ்ந்து பார்க்கிறேன்'' என்றார்.

துறவி இறந்ததும் பன்றியின் கருவில் புகுந்தார். சீடனும் காத்திருந்தான்.

பன்றி குட்டி போட்டது. துறவியின் மீதுள்ள கருணையால் பன்றிக்குட்டி ஒரு வாரம் இருக்கட்டும் என விட்டான் சீடன்.

பிறகு ஒரு நாள் குட்டியைக் கொல்ல வாளை ஓங்கிய போது பன்றியாக இருந்தாலும் யோக சக்தி நிறைந்த துறவி, ''பன்றி வாழ்க்கை எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா? இதை முழுமையாக வாழ விரும்புகிறேன்'' என்றார்.

''குருவே! நீங்கள் உயிரை விட்டால்தானே கடவுளின் திருவடியை அடைய முடியும்?''

''பன்றி வாழ்க்கையை போல் கடவுளின் திருவடி சுகமாக இருக்குமா? இனி எல்லா பிறவிகளிலும் பன்றியாக பிறக்க விரும்புகிறேன்''

குருநாதருக்காக சீடன் வருந்தினான்.

பன்றியாக பிறந்ததும் தன்னைக் கொல்ல வேண்டும் என துறவி சொல்லியிருக்க வேண்டும். இரண்டு நாள் பன்றியாக வாழ்ந்து பார்க்கலாம் எனச் சொன்னதால் அதில் பற்று வந்து விட்டது.ஆம்... துறவியின் கதையில் வாழ்வின் உண்மை ஒளிந்திருக்கிறது.

பலர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள்... அதில் அப்படி என்ன தான் சுகம் இருக்கிறது என பார்க்கும் ஆர்வத்தில் பழகி விட்டு சிக்கலில் மாட்டுகிறார்கள்.

திருட்டு, லஞ்சம், விபச்சாரம், திருமணத்திற்கு புறம்பான உறவுகள் என அனைத்தையும் ஒருமுறையாவது அனுபவிக்க பலர் விரும்புகிறார்கள்.

அது துறவி இரண்டு நாள் பன்றியாக வாழ்ந்த கதைதான்....

பன்றியாக இல்லாத வரைக்கும் தான் பன்றி மீது அருவருப்பு ஏற்படும். பன்றியாக மாறி விட்டால் அதுவே இன்பமாகி விடும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us