Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : ஏப் 14, 2015 11:38 AM


Google News
** சிவனுக்கு உகந்த கிழமை எது?

செ. உப்பிலி, புதுச்சேரி

சிவனுக்கு உகந்த நாள் திங்கள். சோமவாரம் என்று சொல்வர். ஸ+ உமா என்பதே 'ஸோம' என்றாகும். இதற்கு 'உமையவளோடு சேர்ந்த சிவன்' என்று பொருள்.

* பறவைகளைக் கூண்டில் வளர்க்கலாமா?

எம்.கோபிகா, மதுரை

பறவை என்றாலே சுதந்திரமாகப் பறப்பது தான். பறவையைக் கூண்டில் அடைப்பதற்காக, இறக்கையை வெட்டுவது பாவம் தானே! மாண்டவ்யர் என்னும் மகரிஷி, ஒரு பூச்சிக்கு செய்த இம்சையால் பல ஆண்டுகள் துன்பப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. எல்லா உயிர்களையும் சுதந்திரமாக வாழ விடுவது நம் கடமை.

* கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதன் பொருள் என்ன?

எஸ்.பட்டீஸ்வரன், போரூர்

கோபுரம் 'பாத யுகளம்' (கடவுளின் திருவடி) என்கிறது ஆகமம். கடவுளின் திருவடியை அடையும் வகையில், மனிதன் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அரிய தத்துவத்தை வலியுறுத்துகிறது. இதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்படியாக கோபுரத்தை உயரமாக அமைத்தார்கள்.

அரசமரத்தின் முக்கியத்துவம் என்ன?

எஸ்.ராமமூர்த்தி, வடலூர்

அரசமரத்தை காலையில் சுற்றுவது நல்லது. இதன் காற்று மலட்டுத்தன்மை, குஷ்டம் போன்ற நோய்களைத் தீர்க்கும் சக்தியுள்ளது. இந்த மரத்தின் கீழ் நிற்கட்டுமே என்பதற்காகத் தான், விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வைத்து, அவரை வணங்க வரும் சாக்கிலாவது நன்மை கிடைக்கட்டுமே என்று சொல்வார்கள். ஒரு சிலர் அரசமரத்தை 'அஸ்வத்த நாராயணர்' என்ற பெயரில் வழிபடுகின்றனர்.

சொக்கநாதருக்கு மீனாட்சி இருக்கும் போது, பிரியாவிடையுடன் பவனி வருகிறார். யார் இந்த பிரியாவிடை?

வி.எஸ்.மோகன், மதுரை

பிரியாவிடை என்பது பார்வதி தேவியே. இவள் சிவனை விட்டு பிரியவே மாட்டாள் என்பதால் இந்தப் பெயர். அவளது மானிடஅவதாரமே மீனாட்சி. எனவே, இருவரும் ஒருவர் தான். நிலை ஆற்றல், இயங்கு ஆற்றல் என இருசக்தி இருப்பதாக அறிவியல் கூறுகிறது. பார்வதிதேவி, சிவனோடு இருக்கும் போது நிலைசக்தியாகவும், தனித்து இருக்கும் போது இயங்கு சக்தியாகவும் (பக்தர்களுக்கு நேரில் வந்து அருளும் தொழில்) இருக்கிறாள்.

வழிவழியாக வெங்கடாஜலபதியை குலதெய்வமாக வழிபட்டு வருகிறோம். இப்போது என் மகன் அவரை விட்டு வேறு தெய்வங்களை வழிபடுகிறான் என்ன செய்வது?

கே.ஸ்ரீநிவாசன், சென்னை

பெரியவர்கள் வழிவழியாக கற்றுத்தந்த வழிபாட்டை பின்பற்றுவதே நல்லது. குலதெய்வமாக வெங்கடாஜலபதியை ஏற்கும்படி அறிவுரை கூறுங்கள். ஏழுமலையான் இருக்க கவலை வேண்டாம். பொறுப்பை அவரிடமே விட்டு விடுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us