Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/ஆடி மாத அம்பாள் துதி

ஆடி மாத அம்பாள் துதி

ஆடி மாத அம்பாள் துதி

ஆடி மாத அம்பாள் துதி

ADDED : ஜூலை 21, 2015 12:12 PM


Google News
Latest Tamil News
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம். இந்த மாதத்தில், அம்பாளை வணங்கும் போது, பாடுவதற்காக லலிதா நவரத்தின மாலையை தந்துள்ளோம். படித்து அம்பாளின் அருளைப் பெறுங்கள்.

லலிதா நவரத்தின மாலை

ஞான கணேசா சரணம் சரணம்

ஞான ஸ்கந்தா சரணம் சரணம்

ஞான ஸத்குரோ சரணம் சரணம்

ஞானா னந்தா சரணம் சரணம்

காப்பு

ஆக்கும் தொழில் ஐந்தரன் ஆற்றநலம்

பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்

சேர்க்கும் நவரத்தின மாலையினைக்

காக்கும் கணநாயக வாரணமே.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

1. வைரம்

கற்றும் தெளியார் காடே கதியாய்க்

கண்மூடி நெடுங்கன வான தவம்

பெற்றும் தெளியார் நிலையென்னில் அவள்

பெருகும் பிழையேன் பேசத் தகுமோ

பற்றும் வயிரப் படைவாள் வயிரப்

பகைவர்க்கு எமனாக எடுத்தவளே

வற்றாத அருள்சுனையே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

2. நீலம்

மூலக்கனலே சரணம் சரணம்

முடியா முதலே சரணம் சரணம்

கோலக்கிளியே சரணம் சரணம்

குன்றாத ஒளிக்குவையே சரணம்

நீலத் திருமேனியிலே நினைவாய்

நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்

வாலைக் குமரீ வருவாய் வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

3. முத்து

முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே

முன்னின் றருளும் முதல்வி சரணம்

வித்தே விளைவே சரணம் சரணம்

வேதாந்த நிவாசினியே சரணம்

தத்தேறிய நான் தனயன் தாய் நீ

சாகாத வரம் தரவே வருவாய்

மத்தேறு ததிக்கிணை வாழ்வடையேன்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

4. பவளம்

அந்தி மயங்கிய வானவி தானம்

அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை

சிந்தை நிறம் பவளம் பொழிபாரோ

தேன்பொழிலாமீது செய்தவள் யாரோ

எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்

எண்ணுபவர்க்குள் எண்ணமிகுந்தாள்

மந்திரவேத மயப் பொருளானாள்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

5. மாணிக்கம்

காணக் கிடையாக் கதியானவளே

கருதக் கிடையாக் கலையானவளே

பூணக் கிடையாப் பொலிவானவளே

புனையக் கிடையாப் புதுமைத்தவளே

நாணித் திருநாமமும் நின்துதியும்

நவிலாதவரை நாடாதவளே

மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

6. மரகதம்

மரகத வடிவே சரணம் சரணம்

மதுரிதபதமே சரணம் சரணம்

சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்

சுதிஜதி லயமே இசையே சரணம்

அர ஹர சிவ என்றடியவர் குழும

அவரருள் பெற அருளமுதே சரணம்

வர நவநிதியே சரணம் சரணம்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

7. கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள்

பொன்றாது பயன் குன்றா வரமும்

தீ மேல் இடினும் ஜெயசக்தி எனத்

திடமாய் அடியேன் மொழியும் திறமும்

கோமேதகமே குளிர்வான் நிலவே

குழல் வாய் மொழியே வருவாய் தருவாய்

மாமேருவிலே வளர் கோகிலமே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

8. புஷ்பராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும

ராக விகாஸ வியாபினி அம்பா

சஞ்சல ரோக நிவாரணி வாணீ

சாம்பவி சந்த்ர கலாதரி ராணி

அஞ்சல மேனி அலங்க்ருத பூரணி

அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி

மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

9. வைடூர்யம்

வலையொத்த வினை கலையொத்த மனம்

மருளப் பறையாறொலி ஒத்த விதால்

நிலையற்று எளியேன் முடியத் தகுமோ

நிகளம் துகளாக வரம் தருவாய்

அளவற்று அசைவற்று அநுபூதி பெறும்

அடியார் முடிவாழ் வைடூர்யமே

மலையத் துவசன் மகளே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

பயன்

எவர் எத்தினமும் இசையாய் லலிதா

நவரத்தின மாலை நவின்றிடுவார்

அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்

சிவரத்தினமாய் திகழ்வார் அவரே.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us