Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது வழங்கும் விழா

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது வழங்கும் விழா

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது வழங்கும் விழா

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது வழங்கும் விழா

அக் 27, 2024


Google News
Latest Tamil News
உலகமெங்கும் புற்றீசல்போல் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்ச் சூழலில் விருதுகள் குறித்த சர்ச்சைகளும் வந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு விருது விழாவிலேயே ஒரு சர்ச்சைக் கருத்து பேசப்பட்டது. அதுதான் கனடாவில் நடைபெற்ற தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா.

இந்தியாவிற்கு வெளியே வழங்கப்படும் தமிழ் இலக்கியத்திற்கான விருதுகளில் புகழ் பெற்றது கனடாவில் வழங்கப்படும் 'தமிழ் இலக்கியத் தோட்டம் ' விருதாகும். தொடர்ச்சியாக 24 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.



இந்த 'கனடா இலக்கியத் தோட்டம்' மூலம் ஆண்டு தோறும் உலகத்தின் மேன்மையான தமிழ் இலக்கிய சேவையாளர் ஒருவருக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது வழங்கி கௌரவித்து வருகிறார்கள். இந்த விருதை இதுவரை எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் என்று பல்வேறு பட்டவர்களும் பெற்றுள்ளனர்.



2001-ல் சுந்தர ராமசாமி தொடங்கி மணிக்கொடி காலத்து கே. கணேஷ்,இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன், இ. பத்மநாப ஐயர், ஐராவதம் மகாதேவன், எஸ் பொன்னுத்துரை, எஸ் ராமகிருஷ்ணன் நாஞ்சில்நாடன், டொமினிக் ஜீவா, தியோடர் பாஸ்கரன், ஜெயமோகன் , இ.மயூரநாதன், சுகுமாரன், வண்ணதாசன், இமையம், ஆ.இரா.வெங்கடாசலபதி, பாவண்ணன், லெ. முருகபூபதி என நீள்கிறது இப்பட்டியல்.



இயல் விருது பாராட்டுக் கேடயத்துடன் 2500 டாலர்கள் பணப்பரிசும் கொண்டது. 2023-க்கான விருது ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். -க்கு அவரது வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்பட்டது.



அண்மையில் இவ்விருது விழா டொரொண்டோ நகரில் நடைபெற்றது. மாலையிலிருந்து இலக்கிய ஆர்வலர்கள், தமிழ் அன்பர்கள், புலம்பெயர்ந்த உறவுகள் என்று விழா அரங்கில் குவிய ஆரம்பித்தார்கள். விழாவைத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் புரவலர்களில் ஒருவரான ஏ.ஜே.வி சந்திரகாந்தன் தொடங்கி வைத்தார். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தலைவர் மேனுவல் ஜேசுதாசன் வரவேற்புரையாற்றினார். அதன் பிறகு விருதுகள் வழங்கப் பட்டன.



படைப்புக்கான புனைவு விருதை ஏ.எம். றஷ்மி சற்றே பெரிய கதைகளின் புத்தகம் படைப்புக்காகவும் அல்புனைவுக்கான விருதை பி.வி . விக்னேஸ்வரன் தனது நினைவு நல்லது படைப்புக்காகவும், கவிதைக்காக இளவாலை விஜயேந்திரன் தனது எந்த கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது? நூலுக்காகவும், மொழியாக்கத்துக்காக ஜெகதீஷ் குமார் கேசவன் தனது எ ஜர்னி த்ரோ வோர்ட்ஸ் (A Journey Through words ) நூலுக்காகவும், பார்வதி கந்தசாமி இலக்கியம் மற்றும் சமூகப் பணிக்காகவும் பெற்றனர்.



இவ்விழாவில் கனடாவில் வாழும் கவிஞரும் அறியப்படும் ஊடகவியலாளரும் பேராசிரியருமான டாக்டர் சேரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, ' தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகளுக்கு என்ன சிறப்பு இருக்கிறது? அதற்கு என்ன மாண்பு இருக்கிறது? அதன் பின்னணியைச் சற்று நான் விளக்க வேண்டும். எல்லோருக்கும் தெரியும் இப்போது விருதுகள் வழங்குவது, பட்டங்கள் வழங்குவது எல்லாம் ஒரு குடிசைத் தொழில் போல் மாறிவிட்டது. யார் வேண்டுமானாலும் வழங்கலாம்



' அத்தகைய எல்லா விருதுகளையும் கிணற்றுத் தவளை விருதுகள் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனென்றால் கிணற்றுத் தவளைகளுக்குத் தனது கிணற்றை விட வேறு உலகம் தெரியாது. அவர்கள் தங்கள் நாட்டை வைத்து, ஊரை வைத்து, கிராமத்தை வைத்து விருது கொடுக்கலாம். ஆனால், தமிழ் என்பது இப்போது ஒரு நாட்டினுடைய எல்லைப் பரப்பில் குறுக்கிவிடக் கூடிய ஒரு மொழி அல்ல. தமிழ் என்பது நிலம் கடந்த மொழி.அந்த மொழியால் அமைந்ததுதான் தமிழ்ப் பண்பாடும் வாழ்வும். இந்த விருது மட்டும்தான் உலகத் தமிழ் விருதாக இருக்கிறது. சரியான தீர்க்கமான தெளிவான பார்வையோடு வழங்கப்படுகிற இந்த விருதுதான் பெருமைக்குரியது' என்றார்.



அடுத்து வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது ஆர். பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.. விருதாளர் ஆர். பாலகிருஷ்ணன் பேசும்போது, 'நிறைவால் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது என் நெஞ்சம் .நான் ஒரு தமிழ் மாணவன் அதுதான் எனது அடிப்படை அடையாளம். தமிழ் நெடுஞ்சாலையின் எண்ணற்ற பயணிகளில் நானும் ஒருவன். பிடித்ததை விட மாட்டேன் பிடிக்காததைத் தொட மாட்டேன் என்ற என் இயல்புதான் தமிழின்பால் என்னை ஆற்றுப்படுத்தியது.



' எனக்கு மிகவும் பிடித்த தமிழ் இலக்கியத்தைத்தான் நேசித்துப் படித்தேன். தமிழை மட்டுமே பற்றிக் கொண்டு என்னளவில் நான் பயமின்றி இருந்தேன். தமிழ் இலக்கியம் படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்று என்னைச் சுற்றி நின்று அச்சுறுத்தினார்கள். ஆனால் நான் எனது முதுகலைத் தேர்வு முடிவுகள் வருவதற்கு 30 நாட்கள் முன்னதாகவே மதுரை தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்.



' நான் எனது வாழ்க்கையில் எழுதிய ஒரே ஒரு தேர்வு இந்திய குடிமைப்பணி தேர்வு மட்டுமே. அதையும் முதன் முறையாக தமிழில் எழுதினேன். அதையும் முதல் முயற்சியிலேயே எழுதி வெற்றி கண்டது என்பது எனது வாழ்நாள் பெருமிதம். ஆனாலும் தமிழ்நாட்டில்தான் என்னைப் பணியமர்த்த வேண்டும் என்ற சலுகை கேட்காமல் 1984-ல் தமிழ்நாட்டை விட்டு ஒடிசா சென்றேன்.



' 34 ஆண்டுகள் ஒடிசா மாநில அரசிலும் தில்லியில் இந்திய துணைத்தேர்தல் ஆணையராகவும் பணியாற்றி 2018-ல் ஓய்வு பெற்றேன். ஒய்வுக்குப் பின்னரும் ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகராகப் பணியமர்த்தப்பட்டு இறுதியாகப் பணியில் இருந்து விடைபெற்று இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் புவனேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்தேன் . நேற்று போல் இருக்கிறது ஆனால் 40 ஆண்டுகள் ஓடிவிட்டன.



' நான் எழுதிவிட்ட நூல்கள் முகப்பு அட்டையில் என் பெயருக்கு எந்த முன்னொட்டும், குறிப்பாக ஐஏஎஸ் என்ற பின்னொட்டும் இல்லாதவாறு கவனமாகப் பார்த்துக் கொண்டேன். ஆனாலும் இந்திய ஆட்சிப் பணியை நான் நெஞ்சார விரும்புகிறேன். காலம் எனக்கு அளித்த வாய்ப்பு அது.உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள ஏராளமான நாடுகளுக்கும் இந்தியாவில் 97 விழுக்காடு மாவட்டங்களுக்கும் ஆட்சிப் பணியே என்னை அழைத்துச் சென்றது. தமிழ் நெடுஞ்சாலையில் எனது நெடிய ஆய்வுப் பணியையும் கவனக்குவிப்பையும் அதுவே சாத்தியப்படுத்தியது.



''ஐஏஎஸ் தேர்வு எழுதி கலெக்டர் ஆகி விடு'' என்று என்னை நெறிப்படுத்தி ஆற்றுப்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர். அப்போது எனக்கு வயது 15 கூட ஆகி இருக்கவில்லை. இப்போது நினைத்தாலும் என்னை நெகிழ வைக்கிறது பெருந்தலைவருடன் நான் சென்ற அந்த நள்ளிரவுக் கார்ப் பயணம். அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது' என்று பேசினார்.



நிறைவாக எழுத்தாளர் அ.முத்துலிங்கம் நன்றியுரையாற்றினார். இரவு விருந்துக்குப் பிறகு விழா இனிதே நிறைவுற்றது.



- தினமலர் வாசகர் அருளன்பன் பழனிவேலன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us