Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/கத்தார் தமிழர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கத்தார் தமிழர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கத்தார் தமிழர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கத்தார் தமிழர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

பிப் 21, 2025


Google News
Latest Tamil News
பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது, கத்தார் தமிழர் சங்கம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தலைவர் மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கானத் தேர்தல் கடந்த பிப்ரவரி 7 ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் இரவு 10 மணிவரை நடைபெற்றது. 'ரைட்டூஓட்' செயலி வாயிலாக உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இதில் தலைவர் பொறுப்புக்காக சோமசுந்தரம் முனியப்பன் மற்றும் சக்திவேல் மகாலிங்கம் போட்டியிட்டனர். மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பதவிகளை வகிக்க பாலசுப்ரமணி கந்தசாமி, சுப்பிரமணியன் பிரபாகர், வெங்கடேசன் நாராயணன், பரமசிவம் ரமேஷ், சையது இப்ராஹீம், ராதிகா காட்டுராஜன், முருகேசன் வெள்ளத்துரை, புருஷோத்தமன் அப்பாவு, பிரம்மகுமார் செல்லதுரை, நிர்மலா ரகுராமன் ஆகியோர் ஒருபுறம் களம் காண மறுபுறம் பிரதாப் ஸ்ரீதரன், நவீனப் ப்ரியா ராகவேந்திரன், வைரஞ்சனி பாண்டியராஜன், செந்தில் குமார் பாலகிருஷ்ணன், மகேஸ்வரன் தணிகைவேலன், வேல்முருகன் நடராஜன், விஜயகுமார் மருதமுத்து, கந்தன் பண்டரிநாதன், குமார் லக்ஷ்மணன் ஆகியோர் சக்திவேல் மகாலிங்கத்தின் அணியாக களத்தில் போட்டியிட்டனர்.

சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பிருந்தே இரு அணிகளும் தமது புதுமையான பிரச்சார யுக்திகளைக் கொண்டு சமூக ஊடகங்கள் வாயிலாக தேர்தல் வாக்குறுதிகளை விசாலமாக விஸ்தாரமாக செய்து வந்த விதம், அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. தமிழ் மக்களுக்கான கலைச்சேவை, சமூகநலச்சேவை, மருத்துவச்சேவை, கல்விச்சேவை, கலாச்சார மேம்பாடு, பாரம்பரிய விழாக்கள், மாணவ மாணவியரின் தனித்திறன் வளர்ச்சி என்று வகைவகையான திட்டங்களை முன்னிறுத்தியும் எடுத்துச் சொல்லியும் இருசாரருமே தமிழ் நெஞ்சங்களிடம் வாக்கு சேகரித்தனர்.



இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் போட்டியிட்ட இருதரப்பின் அனைத்து வேட்பாளர்களுமே ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சயப்பட்டவர்கள் என்பது மட்டுமின்றி கத்தார் மண்ணில் நெடுங்கால நண்பர்கள், பரஸ்பரம் அன்பு காட்டிவரும் தோழமைகள்.



தேர்தல் நாளன்று கத்தார் தமிழர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ரைட்டூஓட் செயலி மூலமாக தங்களது சமூகக் கடமையான வாக்கு செலுத்துவதை வெகு ஆர்வத்தோடு செய்து முடித்தனர். அதை உறுதி செய்யும் விதமாக கத்தார் தமிழர் சங்கத்தின் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக கிட்டத்தட்ட 97.3% மேல் வாக்கு சதவிகிதம் பதிவாகியிருந்ததாகக் கூறப்பட்டது. இதனை மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாகக் கருதுகிறோம் என்றது கத்தார் தமிழர் சங்கம்.



தேர்தல் முடிவுகள் இந்திய கலாச்சார மையத்தின் அலுவலகத்தில், தேர்தல் குழுவினரால் இரவு பத்து மணிக்கு அறிவிக்கப்பட்டது. சோமசுந்தரம் முனியப்பன் தலைவர் பதவியிலும், அவரது அணியில் மேலாண்மை குழுவின் உறுப்பினர்களுக்காக போட்டியிட்ட மற்ற பத்து வேட்பாளர்களும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்ததாகத் தேர்தல் கமிட்டியின் மேதகு பொறுப்பாளர்கள் அறிவித்ததும், வெற்றி பெற்ற அணியினர் மகிழ்ச்சியுடன் வாக்களித்த தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.



வெற்றிக்கும் தோல்விக்கும் அப்பாற்பட்ட இந்த கத்தார் தமிழர் சங்கத் தேர்தலில், வென்றவர்களை அகம்மலர வாய்ப்பை இழந்தவர்கள் வாழ்த்துவதும், அவர்களை முன்னவர்கள் முகம்குளிர பாராட்டுவதுமாகப் பண்பட்ட நற்கலாச்சாரக் காட்சிகள் அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்தன.



'வெள்ளம் போல் தமிழர் கூட்டம்; வீரம் கொள் கூட்டம்; அன்னார் உள்ளத்தால் ஒருவரே; மற்றுடலினால் பலராய்க் காண்பார்' என்ற புரட்சிக்கவிஞனின் சொற்களுக்கிணங்க தமிழர்களின் ஒற்றுமை என்றென்றும் தழைத்தோங்குதல் மகிழ்ச்சி என்று கத்தாரில் வாழும் தமிழ்ச்சமூகம் பெருமை பொங்கக் கொண்டாடியது.



இணையதள முகவரி:



https://qatartamizharsangam.org



மின்னஞ்சல் முகவரி :qtsqatar@gmail.com



புலனம் (வாட்ஸ்அப்) +974 33521857



- நமது செய்தியாளர் எஸ். சிவ சங்கர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us