கத்தார் வாழ் தமிழ் சமூகத்தின் நலனுக்காக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சமூக செயல்பாடுகளை செவ்வனே செயல்படுத்தி வருகிறது கத்தார் தமிழர் சங்கம். ஒவ்வொரு ஆண்டும் கத்தார் நாட்டின் குளிர்காலமான அக்டோபர் தொடங்கி மார்ச் மாதம் வரை கத்தார் நாட்டில் விவசாயம் செய்ய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்த காலகட்டத்தில் தமிழ் மக்களை தங்களது வீட்டுத்தோட்டத்தில் தாவரங்களை பயிரிட்டு சிறிய அளவு விவசாயம் செய்ய கத்தார் தமிழர் சங்கம் ஆர்வத்தை உண்டாக்கி வருகிறது.
குறிப்பாக பாலைவன பூமியாக, விவசாயம் என்பது குதிரைக்கொம்பாக, பயிர் வைக்க உகந்த நிலவளம் இல்லாத கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு உழவுத் தொழிலின் மகத்துவத்தையும், உழவர்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்தி விவசாயப் பெருங்குடி மக்களின் பெருமையைப் போற்றவே விவசாயம் சார்ந்த விழாக்களை கத்தார் தமிழர் சங்கம் முன்னெடுத்து நடத்தி வருகிறது.
நடப்பாண்டு குளிர்காலத்தில் பலவகையான தாவர விதைகளை விதைத்தும், பயிரிட்டும், உரமிட்டு வளர்த்தும் காய்கறி, பழங்கள் மற்றும் மலர்வகைகளை அவரவர் வீட்டுத்தோட்டத்தில் போட்டிப்போட்டு அறுவடை செய்த இளம் வயது விவசாயிகளை கௌரவிக்கும் விதமாக, கத்தர் தமிழர் சங்கத்தின் இளம் விவசாயி வெற்றி மற்றும் நிறைவு விழா கடந்த மே மாதம் 30ம் தேதி மாலை 7 மணியளவில், ஒருங்கிணைந்த இந்திய சமூக மையத்தில் உள்ள 'காஞ்சனி' உள்ளரங்கத்தில் நடைபெற்றது.
இளம் விவசாயி போட்டியில் பங்கு பெற்ற குழந்தைகள் அவர்தம் பெற்றோருடன் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சங்கத்தின் துணைத்தலைவர், இயற்கை வேளாண்மை பற்றிய பல முக்கிய பயனுள்ள தகவல்களை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறினார். 'இளம் விவசாயி' என்ற குளிர்கால போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு இளம் குழந்தைகளின் விவசாய செயல்பாடுகளின் பயணம், முதல் நாள் தொடங்கி கடைசி நாளில் காய், கனி பறித்து, பூக்களை கொய்து பரவசம் அடைந்த தருணம் வரை பதிவுசெய்யப்பட்டு, ஒவ்வொரு இளம் விவசாயியும் கடந்து வந்த பாதை குறித்த காணொலி இந்த வெற்றி நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.
இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை பெரியவர்களிடம் கேட்டறிந்து கொண்டு ஆர்வத்துடன் அதற்கென நேரம் ஒதுக்கி 'இளம் விவசாயி' போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்ற இளம் விவசாயிகள் அனைவருக்கும் கத்தர் தமிழர் சங்கம், தனது நினைவுப் பரிசாக மாங்கனி வடிவத்தில், பசுமையான பச்சை வண்ணத்தில், கண்ணாடிக் கேடயம் வழங்கி சிறப்பித்தது.
இந்நிகழ்வின் போது காஞ்சனி அரங்கில், இளம் விவசாயிகள் தங்களின் வீட்டுத் தோட்டத்தில் விளைவித்த காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் பல்வேறு விதைகளும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்தது, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது மட்டுமின்றி, அவர்களின் பாராட்டுக்களையும் பெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கத்தர் தமிழர் சங்கத்தின் நிர்வாகக்குழுவினர்கள் கார்த்திகேயன் இளவரசன், பாண்டியன், நகுலன், முனியப்பன், சக்திவேல், லஷ்மி ராமசெல்வம், நவீப்ரியா ராகவேந்திரன் ஆகியோர் நன்றி பாராட்டி, மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அது போல 'இளம் விவசாயி' களின் வழிகாட்டிக் குழுவின் உறுப்பினர்களான ரமேஷ், மஞ்சு சுரேஷ், தமிழாசிரியை புனிதா முனியப்பன், பிரம்மகுமார் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது என அனைவரும் பாராட்டினர். நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்ததோடு காணொலிப் பதிவை செம்மை படுத்தி வெளியிட்டார் முத்து. இந்திய விளையாட்டு மையத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் புருஷோத்தமன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்'
“விவசாயி சேற்றில் கை வைக்காமல்
நாம் சோற்றில் கை வைக்க முடியாது”
போன்ற தமிழ்ப்பெரும் கூற்றுகளை சிந்திக்க வைத்து, இளம் தலைமுறையினரை 'கத்தார் தமிழர் சங்கம்' செயலாற்ற வைத்த விதம் பலதரப்பட்ட மக்களிடையே பேசுபொருளாக இருந்தது.
- நமது செய்தியாளர் சிவ சங்கர். எஸ்