/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ எழுதாமல் துாக்கம் வராது! இளம் எழுத்தாளர் லாவண்யா எழுதாமல் துாக்கம் வராது! இளம் எழுத்தாளர் லாவண்யா
எழுதாமல் துாக்கம் வராது! இளம் எழுத்தாளர் லாவண்யா
எழுதாமல் துாக்கம் வராது! இளம் எழுத்தாளர் லாவண்யா
எழுதாமல் துாக்கம் வராது! இளம் எழுத்தாளர் லாவண்யா
ADDED : செப் 14, 2025 05:38 AM

எ ல்லா ஊர்களிலும் புத்தகத்திருவிழா களைகட்ட துவங்கியிருக்கிற காலம் இது. மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார், அவரது தந்தையின் புத்தக சேகரிப்பு குறித்து தெரிவித்த கருத்துக்கள் காலத்தால் அழிக்க முடியாதவை. ''புத்தகங்கள் வாங்குவதற்கு, என்னை விற்றால் புத்தகங்கள் கிடைக்கும் என்றால் என்னையே விற்று விடுவார் என் அப்பா,'' என நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.
என்ன தான் சமூக ஊடகங்கள், அலைபேசி என தகவல் தொழில் நுட்ப புரட்சி ஓங்கியிருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை புத்தகங்கள் வாசிப்பு இன்றளவும் தொடர்கிறது. அதிலும் பலர் வாசித்த புத்தகங்களின் அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்வதையும் காண முடிகிறது.
புத்தகங்களை வாசிப்பது மட்டுமின்றி தங்கள் வாழ்வின் அனுபவங்களை புத்தகங்களாக எழுதுவோரும் கணிசமாக உள்ளனர். கல்லுாரியில் படிக்கும் போது தன் நோட்டு புத்தகங்களில் எழுதி வைத்த கதையை, 'நினைவுகளின் நிழல்கள்' என்ற புத்தகமாக, தனது முதல் படைப்பாக தந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் லாவண்யா பெரியசாமி.
இவர் பிரபல ஐ.டி., நிறுவனம் ஒன்றில் ரூ.பல லட்சங்களை சம்பாதித்து வருபவர். தினமும் 9 மணி நேர ஐ.டி., நிறுவன பணியை முடித்து புத்தகங்கள் வாசிக்க, எழுத மீத நேரத்தை செலவிடுவதாக பெருமை கொள்கிறார் லாவண்யா. இவர் சிறந்த கதை சொல்லியும் கூட.
இவரிடம் பேசியதிலிருந்து...
பிறந்தது, படித்தது, வளர்ந்தது, வேலை செய்வது சென்னை.
9ம் வகுப்பு படித்த போது தமிழாசிரியர் ரமணன் கொடுத்த ஊக்கம், வழிகாட்டுதலால் கவிதை, கட்டுரை புனைய துவங்கினேன். கல்லுாரி காலத்தில் நண்பர்களுக்கு பிறந்த தின கவிதை, அவர்களின் பெற்றோருக்கு திருமண நாள் வாழ்த்து, நண்பர்களின் காதலுக்கு காதலர் தின கவிதை என எழுதினேன். இப்படி தான் என் எழுத்து பயணம் துவங்கியது.
நம்மில் பலர் வீடுகளில், முன்பெல்லாம் நாட்டு நாய் வளர்த்து வந்தனர். தற்போது வெளிநாட்டு நாய்கள் வளர்ப்பதை கவுரவமாக நினைக்கின்றனர். நாட்டு நாய்களை தெரு நாய்களாக விட்டு விட்டதன் பாதிப்பை 'மாயாவும் மணியும்' என்ற தலைப்பில் 2வது படைப்பாக வெளியிட்டேன். பெண்களை சுற்றி நடக்கிற, கேட்ட, பார்த்த கதைகளை தொகுத்து 'துணை' என 3வது புத்தகத்தை வெளியிட்டேன்.
ஒருவர் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அவர் மற்றொரு மனிதரின் வாழ்வியலை தெரிந்து கொள்கிறார்.
'துணை' புத்தகம் அதிகம் கொண்டாடப்பட்டது. காரணம் அந்த புத்தகத்தில் இந்த சமூகத்தில் பெண்கள் படும் அவல நிலைகளை ஆறு சிறுகதைகளாக தந்திருந்தேன். ஆண்கள் அதிகம் படித்தது அதை எழுதியதன் நோக்கத்தை நிறைவேற்றியது.
ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிவதால் அதிலிருந்து 'எஸ்கேபிஸம்' தேவைப்படுகிறது. அதனால் வாசிப்பு பழக்கம் என்னுடன் பயணிக்கிறது. எழுத்தும் அவ்வாறே. 9 மணி நேரம் பணி போக மீத நேரம் முழுவதையும் புத்தகங்களுக்கு செலவிடுகிறேன். ஒரு கதை எழுத தோன்றினால் அதை குறிப்பு எடுத்துகொண்டு வீட்டிற்கு சென்று முழுவதையும் எழுதி முடித்த பிறகு தான் துாங்குவேன்.
தஸ்தவெஸ்கி, செகாவ், எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் விக்கிரமாதித்தன், பால் சக்கரியா, பவா செல்லத்துரை போன்ற எழுத்தாளர்களை பிடிக்கும். வெண்ணிற இரவுகள், கிழவனும் கடலும், லஸ்ட் பார் லைப், தி சிக்ரட், தேன் மற்றும் நா.முத்துக்குமாரின் கவிதை தொகுப்புகளை அதிக முறை படித்திருக்கிறேன். நீங்களும் நிறைய நுால்களை படியுங்கள் என்றவாறு நம்மிடமிருந்து விடைபெற்றார்.