/வாராவாரம்/விருந்தினர் பகுதி/'புறக்கணித்த இடத்தில் யார் என நிரூபிக்கிறேன்': மாடலிங்கில் ஒய்யார நடை போடும் திருச்சி திருநங்கை'புறக்கணித்த இடத்தில் யார் என நிரூபிக்கிறேன்': மாடலிங்கில் ஒய்யார நடை போடும் திருச்சி திருநங்கை
'புறக்கணித்த இடத்தில் யார் என நிரூபிக்கிறேன்': மாடலிங்கில் ஒய்யார நடை போடும் திருச்சி திருநங்கை
'புறக்கணித்த இடத்தில் யார் என நிரூபிக்கிறேன்': மாடலிங்கில் ஒய்யார நடை போடும் திருச்சி திருநங்கை
'புறக்கணித்த இடத்தில் யார் என நிரூபிக்கிறேன்': மாடலிங்கில் ஒய்யார நடை போடும் திருச்சி திருநங்கை
ADDED : ஜன 07, 2024 11:29 AM

திறமை மட்டும் தான் வாழ்வின் உயரத்திற்கு நம்மை அழைத்து செல்லும் என்பதை சாதனை படைக்கும் அனைவரும் நிரூபித்து வருகின்றனர். ஒருசிலர் திறமை இருந்தும் தங்கள் சூழ்நிலையால் புறக்கணிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதுபோன்று திறமை இருந்தும் புறக்கணிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு சாதனை சிகரத்தை எட்டிப்பிடிப்பதற்காக போராடி வருபவர் தான் திருச்சியை சேர்ந்த 28 வயது எம்.எஸ்சி., படித்த பட்டதாரி
திருநங்கை ரியானா சூரி
அவர் கூறியது: பிளஸ் 2 படிக்கும் போது திருநங்கையாக என்னை உணர்ந்தேன். 2010ல் முழுமையாக திருநங்கையாக மாறினேன். சமூகம் என்னை பல இடங்களில் புறக்கணிக்க தொடங்கியது. நானும் உடைந்து போய் உட்கார்ந்திருந்தேன்.அப்போது என் நண்பர்களோடு சேர்ந்து 2020ல் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ரோட்டோர கடையை நடத்தினேன். 2021ல் கொரோனா காலம் வந்தது. அப்போது ரோட்டோரங்களில் உணவுக்காக ஏங்கும் மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆரம்பித்தேன். தொடர்ந்து அது எனக்கு உத்வேகத்தை அளித்தது.
அதன்பின் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருந்தபோது போட்டோ கிராபர் ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர் மூலமாக சிறியளவிலான போட்டோ ஷூட்களை எடுத்தோம். அதிலிருந்து அப்படியே யூடியூப்பில் குறும்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படியே எனக்கென சிறிய அடையாளம் கிடைத்தது. எனக்கான பாதை இனி மாடலிங் செய்வது தான் என தெரிந்து கொண்டேன்.
மாடலிங் செய்வதில் முழுமையாக கவனம் செலுத்தினேன். மிஸ் திருச்சி, மிஸ் கூவாகம்,மிஸ் டேலன்ட், சவுத் அம்பாசிட்டர், மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் இண்டியா 2023 போன்ற போட்டிகளில் பங்கேற்று 30க்கு மேலான விருதுகளை வாங்கினேன்.
மாடலிங் துறையில் சாதிப்பது மட்டும் எனது இலக்கல்ல என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இல்லாதவர்களுக்கு உதவி செய்வதற்காக சமூக ஆர்வலராகவும் மக்களுக்கு உதவிகள் செய்கிறேன். அதற்காக அரசு சார்பில் எனக்கு சான்றிதழ்கள் வழங்கினர். கல்லுாரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் தன்னம்பிக்கை பேச்சாளராகவும் பங்கேற்கிறேன். எத்தனையோ முயற்சி எடுத்தாலும் நமக்கு எதில் சாதிக்க விருப்பமோ அதை பிடித்தால் மட்டும் தான் வெளிச்சத்திற்கு செல்வோம் என்பதை தெரிந்து கொண்டேன். சமூகத்தில் எங்களுக்கென அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன். சினிமாவில் நடிக்க கேட்டனர். நானும் ஒப்புக்கொண்டிருக்கிறேன். எங்கே புறக்கணிக்க பட்டோமோ அங்கே நான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறேன் என்றார்.