Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/விருந்தினர் பகுதி/வானத்தை போல மனம் படைத்த மாயனே...: மண் சுமக்கும் தொழிலாளர்களை விண்ணில் பறக்க வைத்து மரியாதை

வானத்தை போல மனம் படைத்த மாயனே...: மண் சுமக்கும் தொழிலாளர்களை விண்ணில் பறக்க வைத்து மரியாதை

வானத்தை போல மனம் படைத்த மாயனே...: மண் சுமக்கும் தொழிலாளர்களை விண்ணில் பறக்க வைத்து மரியாதை

வானத்தை போல மனம் படைத்த மாயனே...: மண் சுமக்கும் தொழிலாளர்களை விண்ணில் பறக்க வைத்து மரியாதை

ADDED : பிப் 11, 2024 01:26 PM


Google News
Latest Tamil News
'ஆத்தா... மேல போகுதுல அந்த 'பிளைட்'ல ஆளுக இருப்பாகளா' என சின்ன வயசுல அம்மாகிட்ட கேட்ட காலம் முதல் 2021 வரை, மேலே பறக்குற 'பிளைட்'ட பாத்தா சந்தேகம் டக்குனு வரும்... அதுல ஒரு நாள் போய் பாத்தப்ப தான் நெசமாவே ஆளுக இருக்காங்கனு நம்புனேன். அடுத்த நிமிஷமே எங்கிட்ட வேலை செய்ற ஆளுகளையும் அதுல கூட்டிட்டு போக முடிவு பண்ணி 75 பேரை விமானத்துல சென்னைக்கு கூட்டிட்டு போய் சுத்திக்காட்டிட்டு கூட்டி வந்துருக்கேன். இது அவுங்களுக்கு நான் செய்யும் மரியாதை' என கிராமத்தனமான வார்த்தைகளை கொட்டி சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றார் மதுரை செக்கானுாரணி கட்டட காண்ட்ராக்டர் மாயன் 53. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக நம்மிடம் அவர்...

காசு என்னங்க காசு... இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்... மனுசனுக்கு மனசு தாங்க முக்கியம். நமக்காக விஸ்வாசமாக வேலை செய்யும் ஆளுகளுக்கு நாம எதாவது பண்றது தானே நியாயம். அடித்தள வேலையாட்களின் வலி எனக்கு நல்லா தெரியும். 13 வயசுல 8 ரூபாய் கூலிக்கு வேலைக்கு போனவன் நான். சித்தாள், நிமிந்தாள், கொத்தனார், காண்ட்ராக்டர் என படிப்படியாக மேல வந்தேன்.

இப்போ எங்கிட்ட புதுக்கோட்டை, செக்கானுாரணி, மூனாண்டிபட்டி உட்பட பல ஊர்களை சேர்ந்த 100 பேர் வேலை செய்றாங்க. அவுங்களுக்காக பழநி, திருச்செந்துார் என கோயில்களுக்கு பஸ் ஏற்பாடு செய்து அடிக்கடி அனுப்பி வப்பேன். பிள்ளைங்களுக்கு கல்யாணம்னா நகை எடுத்து போடுறது, தீபாவளி, பொங்கலுக்கு வீட்டுக்கு தேவையானதை செய்றது, கொரோனா காலத்தில் எங்க வீட்டுல அத்தனை பேரும் பாதித்த நிலையிலும் எங்கிட்ட வேலை செஞ்சவுங்களுக்கு அரிசி, பொருட்கள் கொடுத்தது மனசுக்கு நிம்மதி. இதுபோல பல உதவிகள் செஞ்சிருக்கேன்.

ஆனா அவுங்களை பிளைட்ல கூட்டிட்டு போனது தான் வெளியே தெரிஞ்சிருக்கு. நானே 2021ல் தான் முதலில் பிளைட்ல போனேன். அப்போ எங்கிட்ட வேலை செய்றவுங்களையும் கூட்டிட்டு போக முடிவு செஞ்சேன். மொத்தமா டிக்கெட் எடுப்பது சவாலாகவே இருந்துச்சு. குயின் மீரா பள்ளி அபிநாத் அதற்கு ஏற்பாடு செஞ்சு தந்தார். எவ்வளவு செலவானாலும் ஒரே பிளைட்ல தான் 75 பேரும் போகனும்னு கூட்டிட்டு போனேன்.

பிளைட்ல யாரும் சத்தம்போடக் கூடாது என சொன்னாங்க. ஆனால் எல்லோரும் முதல்முதலா பிளைட்ல ஏறுன சந்தோஷத்துல சத்தம் போட்டாங்க. அங்கிருந்த ஊழியர்கள், பயணிகள் ரசிச்சாங்க.

நான் விஜயகாந்த் ரசிகர். அதனால் அனைவரையும் விஜயகாந்த் சமாதிக்கு கூட்டிட்டு போனேன். பீச், மகாபலிபுரம் என சுத்திக்காட்டிட்டு, ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்து சென்று தங்க வச்சேன். நீச்சல்குளத்தில் குளிக்க 'ஸ்பெஷல் பெர்மிஷன்' வாங்கினேன். அங்க குளிக்கும் போது அவுங்கட்ட வெளிப்பட்ட சந்தோஷத்தை பார்த்தேன். அதாங்க நிம்மதி. அவுங்க நிம்மதி, சந்தோஷம் நம்ம வம்சத்தையே வாழ வைக்கும்.

சின்ன வயசுல வேலை செய்ற போது சனிக்கிழமை வாங்க வேண்டிய சம்பளத்தை ஞாயிற்றுக் கிழமை சாயந்தரம் வரை காத்திருந்து வாங்கிட்டு போகனும். அந்த நிலைமை எங்கிட்ட வேலை செய்றவுங்களுக்கு இருக்க கூடாதுனு சனிக்கிழமை சாயந்தரமே சம்பளம் போட்டுக்கிட்டு இருக்கேன். இவுங்களுக்கு செய்ய இன்னும் பல விஷயங்கள் யோசிச்சு வச்சிருக்கேன். கடவுள் துணையால் அதையெல்லாம் செய்வேங்க என்கிறார், மாயன்.விஜயகாந்த் ரசிகரான அவரை விஜயகாந்த் பாடல் வரிகளான 'அந்த வானத்தை போல மனம் படைத்த (மன்னவனே) மாயனே...' என வாழ்த்துவோம். தொடரட்டும் தொழிலாளிகளின் மீதான மாயனின் துாய 'அன்பு பயணம்', என்கிறார் இவரிடம் பணியாற்றும் பொறியாளர் நரேஷ்.

இவரை 99943 52066 ல் வாழ்த்தலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us