Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/விருந்தினர் பகுதி/லோகேஷ் வந்தார்... எழுத்துலகில் புது நடையாக!

லோகேஷ் வந்தார்... எழுத்துலகில் புது நடையாக!

லோகேஷ் வந்தார்... எழுத்துலகில் புது நடையாக!

லோகேஷ் வந்தார்... எழுத்துலகில் புது நடையாக!

ADDED : ஜூன் 23, 2024 11:35 AM


Google News
Latest Tamil News
கடல் ஆர்ப்பரித்தது, கடல் கொந்தளித்தது என்று படித்திருக்கிறோம். அவ்வளவு ஏன், கடல் உள்வாங்கியது என்றும் வார்த்தைகள் கண்டுபிடித்திருக்கிறோம். 'கடல் கசந்தது'-கேட்டிருக்கிறீர்களா. ஆம்...இது ஒரு சிறுகதையின் தலைப்பு.

எதை சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்து விடுகின்ற கொடூர நோயோடு போராடும் பாவம் குழந்தையைப் பற்றிய கதை. எப்படியும் குழந்தை பிழைத்து குதுாகலமாய் வாழும் என்று நம்பிக்கொண்டிருக்கும் குடும்பம். சோகத்தை சகித்துக் கொண்டு குழந்தையை கவனிக்கும் அமைதியான தாய், துயரங்களை துாக்கி போட்டு எப்படியாவது குழந்தை பிழைத்து வாழும் என வாழும் தந்தை. அந்தக் குழந்தைக்கு கடல் பார்க்க விருப்பம். கடலை காட்ட கூட்டிப்போகிறார்கள். அங்கு ஆர்ப்பரித்த அலைகளை நுரைகளாக கரைக்கு தள்ளுகிறது கடல். இந்த காட்சியை பார்த்துவிட்டு அந்த குழந்தை கேட்கிறது... 'கடலும் என்னைப்போலவே வாமிட் செய்கிறதா?'

குழந்தையின் இந்த சோகமான ஆனால் எதார்த்தமான கேள்விக்கு சிரிப்பதா, அழுவதா... அந்த பெற்றோருக்கு தெரியவில்லை. குழந்தை கேட்பதாய் எழுதப்பட்டிருக்கும் வரிகளை படிக்கும் நமது மனம் துயரத்தில் துவண்டு விழும். கவலையாய் படிக்கும் நமக்கு அக்கணத்தில் கடல் கசக்கிறது. குழந்தையின் கேள்வி, நம்மையும் கடலை ரசிக்க முடியாமல் செய்து விடுகிறது.

குழந்தையின் நிற்காத வாந்தியும், கடல் அலை நுரைதள்ளுவதும் ஒன்றான கற்பனையாக, குழந்தையே கேட்பதாய் எழுதி நம்மை கண்ணீர் விட வைக்க முடியுமா? இப்படி ஓர் அவலச்சுவையை அதிநுட்பமான கற்பனையில் கலந்து எழுதிட முடியுமா.

முடியும் என்று தமிழ் எழுத்துலகிற்கு புது நடையோடு வந்திருக்கிறார்... 'விஷ்ணு வந்தார்' என்ற தனது முதல் சிறுகதை தொகுப்பு நுால் மூலம் சாகித்ய அகாடமியின் 'யுவ புரஸ்கார்'(இளைஞர் விருது) பெற்றுள்ள லோகேஷ் ரகுராமன்.

திருவாரூர் மாவட்டம் நாடாகுடியை பூர்வீகமாக கொண்ட இந்த 34 வயது இளைஞர், சென்னையில் பள்ளிப்படிப்பு, மதுரையில் பி.இ., முடித்து, தற்போது பெங்களூருவில் ஐ.டி., இன்ஜினியராக உள்ளார். இவரோடு ஒரு நேர்காணல்...

இந்த இளம் இன்ஜினியருக்கு இனிய தமிழ் எழுத்து வசமானது எப்படி?


நான் கல்லுாரியில் படிக்கும் போது கடைசி ஆண்டில் சிறிய அளவில் நாடகங்கள், கதைகள் எழுதி நண்பர்கள் நடித்தார்கள். பின்னர் சிறுகதைகள் எழுதி வலைப்பதிவாக வெளியிட்டேன். படிப்பு முடிந்து வேலை கிடைத்த பின்பு தான் எனது புத்தக வாசிப்பு தீவிரமானது. ஜெயமோகனின் 'வெண்கடல்' வாசித்தேன். அது எனக்குள் தாக்கம் ஏற்படுத்தியது. அப்போது தான் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் அவர்களின் இணையத்தில் எழுதத்துவங்கியிருந்தார்கள். அவற்றையெல்லாம் படித்தேன்.

நானாக வலைப்பதிவு செய்வதற்கு பதிலாக, எழுதியவற்றை 2018--- 19 வாக்கில் இணையதள இதழ்களில் வெளியிட்டேன். அவற்றை படித்த சால்ட் பதிப்பகம் நரேன், 'கதைகள் அருமையாக உள்ளன. இதனை நுாலாக வெளியிடலாம்' என்றார். அப்படி வெளியான பத்து சிறுகதைகளின் தொகுப்பான 'விஷ்ணு வந்தார்' நுால் சாகித்ய அகாடமி விருது பெற்று தந்துள்ளது. அறிமுகப்படுத்திய நரேனுக்கு என் நன்றி.

எனது ௨வது நுால் 'அரோமா' அண்மையில் வெளியானது. இப்போது சிறுகதைகள் தான் எழுதுகிறேன். நாவல் எல்லாம் எழுத இன்னும் நான் தயாராகவில்லை. மற்றபடி என் இலக்கிய வாசிப்பு, தமிழறிவு எல்லாம் பள்ளி, கல்லுாரி பாடப்புத்தகங்களில் பெற்றது தான். நான் தமிழ் மீடியத்தில் படித்தவன். தமிழ் மீது அலாதியான பற்று உண்டு. இன்ஜினியரிங் படித்து, ஐ.டி.,யில் வேலை பார்க்கிறேன் என்பதற்காக தமிழ் என்னை விட்டு போய்விடாது. தமிழ் தாய்மொழி; என் அகமொழி அது. என்ன சாப்பிட போகிறோம் என்று நினைப்பது முதல் நாம் சிந்திப்பது வரை எல்லாம் தமிழில் தானே.

இன்றைய இளைஞர்கள் கதை நுால்கள் படிக்கிறார்களா?


படிக்கவில்லை என்று முற்றிலுமாக கூறமுடியாது. சிறிய சதவீதம் இளைஞர்கள் இணையத்திலும், நுால்களிலும் கதைகளை படிக்கிறார்கள். அப்படி படிப்பவர்கள் அதிதீவிர வாசிப்பாளர்களாக உள்ளனர்.

முன்னோடி எழுத்தாளர்களின் நடையில், உங்களுடைய மொழி நடை இல்லை. உங்கள் எழுத்திற்கு துாண்டுதல் யார்?


புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் கதைகள், ஜெயமோகன் கதைகள் படித்திருக்கிறேன். என் வீட்டிற்குள் நடப்பது, என்னைச்சுற்றி நடப்பது, நான் பார்த்த இடங்கள், சந்தித்த மனிதர்களை என் கதைகளில் சேர்க்கிறேன். சில நேரங்களில் கற்பனையும் சேரும். சகமனிதர்களின் அனுபவங்கள் என்பதை விட சக உயிரிகளின் அனுபவங்களை சேர்க்கிறேன். கடல், காற்று, மண், மலை, பூச்சிகள், நத்தை என உயிரிகள் எல்லாவற்றையும் கதைகளில் கலந்து வைப்பேன்.

நான் மனித மைய கதைகளை, அதாவது மனித உறவுச்சிக்கல்களை அதிகமாக எழுதுவது இல்லை. இந்த உலகின் பிற உயிரிகளையும் இணைத்து என் கதைகளில் எழுதுகிறேன். அப்படி எழுதும் போது 'பெருங்கருணை' என்ற அம்சம் கதைகளில் சேர்கிறது.

யாருமற்றவனுக்கு தும்மல் வருகிறது; அவன் நினைக்கிறான், யாரோ தன்னை நினைக்கிறார்கள் என்று! அந்த தும்மல், தன்னிச்சையாக தான் வருகிறது. மனித அறிவிற்கு எல்லைகள் என்ன என்பதை எழுதுகிறேன். மனித அறிவின் எல்லையில் இந்த தன்னிச்சை நிறையவே இருக்கிறது.

விருது பெற்ற 'விஷ்ணு வந்தார்' நுாலில், ஒரு கதையில் அக்ரஹாரத்து பேச்சு மொழியும், இன்னொரு கதையில் மலைவாழ் மக்களின் பேச்சு மொழியும் இருக்கிறது. உங்கள் எழுத்துக்களை சில எழுத்தாளர்கள் போல, ஒரு வட்டார பேச்சு நடைக்குள் மட்டும் அடைத்து விட முடியவில்லை. இது எப்படி?


என்னிடம் இருப்பது பொதுவான பேச்சு மொழி. உங்களிடம் பேசும் போது நான் எந்த ஊர்க்காரன் என்று நீங்கள் அடையாளப்படுத்தி விட முடியாது. அதே நேரத்தில், கதைக்கு ஏற்றவாறு நான் சந்திக்கும் அந்த வட்டார மக்களின் பேச்சு மொழியை பயன்படுத்துகிறேன்.

முதல் நுாலில் சாகித்ய அகாடமி விருது பெற்றது குறித்து...


இணைய இதழ்களில் என் கதைகள் விரவிக்கிடந்தாலும் பலருக்கு என்னை தெரியாது. நான் அறியப்படாதவனாக தான் இருந்தேன். என் கதைகள் போலவே இதுவும் தன்னிச்சையாக நடந்தது போல தோன்றுகிறது. இந்த முறை தான் விண்ணப்பித்தேன். கிடைத்து விட்டது. எனக்கு என் மீது இருந்த நம்பிக்கையை விட, இந்த நுாலின் மீது நம்பிக்கை இருந்தது. இந்நுால் மறுக்க முடியாத பிரதி. போட்டிக்கு ஐந்நுாறு நுால்கள் வரும்; ஆனால் இந்த நுாலை ஒருமுறை படித்து விட்டால் துாக்கி போட்டு விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

எழுத்தாளராக வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?


'எனக்கான நான்'- என்பதை என் எழுத்தில் கண்டுபிடித்திருக்கிறேன். என் பயத்தை, மகிழ்ச்சியை எழுத்தாக மாற்றி அதில் இருந்து மீள்கிறேன். காதலன்-காதலி- -பிரிவது--சேர்வது என்பது போன்ற 'பொது உண்மை' கதைகளில் இருந்து வேறுப்பட்டு என் சிந்தனையில், கற்பனையில் 'ஒரு தனித்த உண்மையை' சொல்ல விரும்புகிறேன். நீங்கள் முதலில் குறிப்பிட்டவாறு, அந்த குழந்தை கடலை பார்த்து பேசுவதை போல வேறு யாரும் கற்பனை செய்யாதவற்றை நான் தனித்த கற்பனையில் எழுத விரும்புகிறேன். யாரையும் தழுவி எழுதக்கூடாது என்று நினைக்கிறேன். எந்த சாயலும் கூடாது என்றே நினைக்கிறேன்.

இவ்வாறு கூறினார்.

'விஷ்ணு வந்தார்' மூலம் தமிழ் எழுத்துலகிற்கு வந்தார்... வந்திருக்கிறார் லோகேஷ் ரகுராமன்!இவரை வாழ்த்த...





      Our Apps Available On




      Dinamalar

      Follow us