ADDED : ஜூன் 30, 2024 11:59 AM

ஒவ்வொருவருக்குள்ளும் தனித்திறமை ஒளிந்திருக்கும். அதை கண்டறியும் காலத்திற்கு முன் நமக்கு பிரச்னைகள், வலிகள், அவமானங்கள், புறக்கணிப்புகள் எல்லாம் வாழ்வில் புதுப்பாடங்களை கற்றுத்தந்து விடுகின்றன. இதுபோன்ற இன்னல்களிலிருந்து மீள என்ன செய்யலாம் என யோசிக்கும் போது நம் திறமை ஞாபகத்திற்கு வந்து நமக்கே வாழ்வு கொடுக்கிறது. அப்படி நெருக்கடியில் சிக்கி தன் திறமையை உணர்ந்து உயரத்திற்கு வந்தவர் சென்னையை சேர்ந்த 21 வயதான பட்டதாரி சுரேந்தர் முத்தரசன்...
இவர் மனம் திறந்ததாவது...
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்ததிலிருந்து பேனா, பென்சிலோடு தான் சுற்றித்திரிவேன். கண்ணில் பார்ப்பதையெல்லாம் வரையும் எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். வீட்டு சுவர்களிலும் படங்களை வரைந்து வைத்திருப்பேன். அப்போது தெரியவில்லை; என் வாழ்க்கை ஓவியத்தில் தான் ஒளிரபோகிறது என்று.
கல்லுாரியில் சேர்ந்த போது செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த பணம் இல்லை. நான் வரையும் ஓவியம் தான் கை கொடுத்தது. ஓவியம் வரைந்து பணம் சம்பாதிக்கும் எண்ணம் வந்தது. நண்பர்கள் உதவியோடு சென்னையில் பூங்காக்கள், பொது இடங்கள், பிளாட்பாரங்களில் அமர்ந்து அவ்வழியில் செல்பவர்களை தத்ரூபமாக வரைந்தேன். அதனை அவர்களுக்கே விற்பனை செய்தேன். ஓவியத்திற்கு பணம் வாங்கிய போதும், அவர்கள் மகிழ்ச்சியில் பாராட்டினார்கள். அது எனக்கு ஊக்கம் கொடுத்தது. அடுத்த கட்டமாக 'கேலிசித்திரம்', மயில், கோழி, புறா போன்ற பறவை இறகுகளில் ஓவியம் வரைதல், கார்ட்டூன்கள் வரைதலில் கவனம் செலுத்தினேன். அது என் வாழ்வின் புது அத்தியாயத்தை துவக்கியது.
திருமணம், காதுகுத்து, வளைகாப்பு, புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகளிலும் ஓவியம் வரைய பலரும் அழைத்தனர். நிகழ்ச்சிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களை கேலிசித்திரமாக பார்க்க ஆர்வமாக என்னிடம் வரையச் சொல்வார்கள். அவர்கள் ஆசையை 2 நிமிடத்தில் நிறைவேற்றுவேன்.
மொழி தெரியாத மாநிலத்திலும் என் வரைபடங்கள் பேச வைத்தது. தற்போது ஓவியம் வரைவதற்கான கடையை சென்னை மேற்கு மாம்பலத்தில் திறந்துள்ளேன்.
இந்த திறமையால் சினிமாவில் 'ஸ்டோரி போர்டு' வேலை வாய்ப்பு வந்தது. 'விஷ்' எனும் வெப்பிலிமில் ஸ்டோரி போர்டு செய்தேன். அது வரவேற்பை பெற்று தந்தது. சூரி நடிக்கும் 'கொட்டுக்காளி' படத்திற்கு ஸ்டோரி போர்டு தயார் செய்துள்ளேன். வெளி வர இருக்கும் பலபடங்களில் இதுபோன்ற வேலை செய்துள்ளேன். சினிமாவில் நடிக்கவும் விருப்பம் உள்ளதால் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.
நம் திறமை எப்போது வெளிப்படும் என நமக்கே தெரியாது. முழுக்கவனம் செலுத்தினால் வாழ்வின் உயரத்திற்கு சென்று விடலாம் என்பதை புரிந்து கொண்டேன். உங்களுக்கான பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள். உழைத்து முன்னேறுங்கள் என்றார்.
இவரை வாழ்த்த 96770 36054