/வாராவாரம்/விருந்தினர் பகுதி/பாட்டும் நானே ஆடலும் நானே... - சகலகலா வாத்தியாரு!பாட்டும் நானே ஆடலும் நானே... - சகலகலா வாத்தியாரு!
பாட்டும் நானே ஆடலும் நானே... - சகலகலா வாத்தியாரு!
பாட்டும் நானே ஆடலும் நானே... - சகலகலா வாத்தியாரு!
பாட்டும் நானே ஆடலும் நானே... - சகலகலா வாத்தியாரு!
ADDED : பிப் 11, 2024 01:24 PM

தமிழர்களின் பாரம்பரிய கலைகள் கரகாட்டம், வில்லுப்பாட்டு, தப்பாட்டம் உள்ளிட்டவை நுாற்றாண்டுகளை கடந்து இன்றும் உலகெங்கும் புகழ்பெற்று விளங்குகிறது. அதற்கு அக்கலையை மக்களிடம் சேர்க்கும் கலைஞர்கள் காரணம்.
அந்த வரிசையில் ராமநாதபுரம் மாவட்ட பள்ளி ஆசிரியர் நமது பாரம்பரிய கலைகளில் வித்தகராக உள்ளார். பட்டிமன்ற பேச்சாளர், கபடி வீரர் என சகலகலா ஆசிரியராக வலம் வருகிறார்.
அவர்தாங்க.. பெயரிலே கலை உள்ள ரா.கலை முருகன். 44 வயதான இவர் கடலாடி கீழச்சாக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், முத்தமிழ் நாடக நடிகர் சங்க தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் கலைக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை செயலாளராக உள்ளார்.கொரோனா காலக்கட்டத்தில் தனது கலையை பயன்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மதுரை உலகத் தமிழ் சங்கம் 2022 சர்வதேச கிராமியக்கலை விருதுகள் விழாவில் இவருக்கு கிராமிய கலைச்செம்மல் விருது வழங்கியது.
இனி... கலைமுருகன் நம்மிடம் பேசியது: எம்.ஏ., (தமிழ்) பி.எட்., படித்துள்ளேன். மனைவி உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். கமுதி அருகே ஓ.கரிசல்குளம் எனது பூர்வீக கிராமம். 1999ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். 2006 முதல் தலைமையாசிரியராக பணிபுரிகிறேன். சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மதுரை ஆனையூரில் பயிற்சிப்பட்டறைக்கு சென்று அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவருக்கு கலைகளை பயிற்றுவித்து வருகிறேன். கபடி நன்றாக விளையாடுவேன். மாநில போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளேன். கவிதைகளும் எழுதியுள்ளேன்.
கரகம், பறையாட்டம், தப்பாட்டம், தவில்வாசிப்பு, ஒயிலாட்டம், மரக்கால், கொக்கழிக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், தேவராட்டம், குரும்பர் ஆட்டம், படுகர் ஆட்டம், சாட்டைக்குச்சியாட்டம் உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட தமிழர் கலைகளை கற்றும், பயிற்றுவித்தும் வருகிறேன். மலேசியாவிற்கு கலைப் பயணம் மேற்கொண்டு விருதுகள் பெற்றுள்ளேன். கோயில் விழாக்களில் நாட்டுப்புற இசைக்கச்சேரி, நகைச்சுவை பட்டிமன்றங்களில் பங்கெடுத்து வருகிறேன். நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு கருத்துக்களை ஏற்படுத்தி வருகிறோம்.
அழிந்துவரும் தமிழர் கிராமிய கலைகளை மீட்டு கலைஆர்வமுள்ள ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, ஒயிலாட்டம், கரகாட்டத்தில் ஆபாசமின்றி, தெய்வீக தன்மையுடன் நமது கலாச்சாரத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம். உலகளவில் தமிழர் கலைகளை பேச வைப்பதே எனது லட்சியம் என்று கூறியவாறே மரக்கால் ஆட்டத்தில் மெய்மறந்து ஆடத்தொடங்கினார் கலைமுருகன்.
இவரை பாராட்ட 97861 69861