Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/விருந்தினர் பகுதி/'எனக்கு நானே அடையாளம்...' தன்னம்பிக்கை பேச்சாளர் ஹேமமாலினி

'எனக்கு நானே அடையாளம்...' தன்னம்பிக்கை பேச்சாளர் ஹேமமாலினி

'எனக்கு நானே அடையாளம்...' தன்னம்பிக்கை பேச்சாளர் ஹேமமாலினி

'எனக்கு நானே அடையாளம்...' தன்னம்பிக்கை பேச்சாளர் ஹேமமாலினி

ADDED : மார் 11, 2025 08:16 AM


Google News
Latest Tamil News
தன்னம்பிக்கை பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், போட்டி தேர்வை சந்திப்போருக்கு வழிகாட்டி என பன்முக திறன் கொண்டவராக வலம் வருகிறார் சிவகங்கை அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளராக பணியாற்றும் ஆர்.ேஹமமாலினி.

பதிமூன்று வயதில் மேடையில் பேசத்துவங்கிய இவர் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை பேச்சாளராக வலம் வருகிறார். இதுவரை இரண்டாயிரம் மேடைகளை கண்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என தேர்வுகளை எழுதியவர், பின்னர் அந்த முயற்சியை கைவிட்டு, தனது பேச்சாற்றலை வளர்க்க, கல்லுாரிப் பணி தான் சிறந்தது என அந்த பணியை தொடர்கிறார்.

விவேகானந்தர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றிய புத்தகங்கள், இறையன்பு ஐ.ஏ.எஸ்., எழுதிய புத்தகங்களை படித்து தான் நான் பேச்சாற்றலை வளர்த்தேன் என்கிறார்.

அப்துல் கலாம் கையால் பெற்ற முதல் விருது உட்பட இதுவரை 500 விருதுகள் பெற்று வீட்டை விருதுகளால் அலங்கரித்துள்ளார். புத்தகம் வாசிப்பின் மூலமே பேச்சாளராக திகழ முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இவர், வீட்டில் 3000 புத்தகம் அடங்கிய நுாலகம் வைத்துள்ளார்.

ஹேமமாலினி கூறியதாவது: சென்னை புத்தக திருவிழாவில் 'நான் வீழ்வேன் என நினைத்தாயோ' தலைப்பில் பேசி புத்தக வாசிப்பாளர்கள், பேச்சாளர்களின் பாராட்டு பெற்றதை பெருமையாக கருதுகிறேன்.

டி.என்.பி.எஸ்.சி., -வங்கி போட்டி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகளுக்கு நேர்முக தேர்வினை சந்திக்கும் யுக்திகள் குறித்து பயிற்சி அளிக்கிறேன். இதற்காகவும், மேடையில் அறிவுபூர்வமாக பேசவும் தினமும் நிறைய நுால்கள் படிக்கிறேன்.

நிறைய கதைகள் எழுதியுள்ளேன். சிறுகதை எழுத துாண்டியதே என் அம்மா தான். அவருக்கு எழுத, படிக்க தெரியாது. இன்றைக்கு அவரை கையெழுத்திடும் அளவிற்கு பயிற்சி அளித்தேன். அதன் நினைவாக 'கைரேகை கையெழுத்தானது' என்ற தலைப்பில் சிறுகதை எழுதினேன். எனது சிறுகதைகளை தொகுத்து இதே பெயரில் நுாலாக வெளியிட உள்ளேன்.

எனக்கு நானே அடையாளமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். அவ்வாறே செயல்பட்டு வருகிறேன் என்றார்.

இவரை பாராட்ட 63690 16979.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us