/வாராவாரம்/விருந்தினர் பகுதி/கிராமத்துக் கதைகளில் புரண்டோடி எழுதும் ஈடாடிகிராமத்துக் கதைகளில் புரண்டோடி எழுதும் ஈடாடி
கிராமத்துக் கதைகளில் புரண்டோடி எழுதும் ஈடாடி
கிராமத்துக் கதைகளில் புரண்டோடி எழுதும் ஈடாடி
கிராமத்துக் கதைகளில் புரண்டோடி எழுதும் ஈடாடி
ADDED : ஜூலை 28, 2024 05:22 PM

அய்யனார் ஈடாடி... பெயரிலேயே கிராமத்து மண் வாசனை வீசுகிறது. மதுரை மாடக்குளத்தில் உள்ள தானத்தவம் கிராமத்தில் பிறந்த இவருக்கு கிராமத்தை பற்றியும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, பேச்சு மொழி, தொழில், நட்பு, கலாசாரம் போன்றவற்றை பற்றி எழுதுவது கொள்ளை பிரியம். இவர் எழுதிய புத்தகங்கள், கவிதைகள், சிறுகதைகள் அதற்கு சான்றாக நிற்கிறது. தொடர்ந்து கிராமத்தை பற்றி எழுத ஆசையோடு உள்ள இவரிடம் பேச துவங்கினோம்.
இவர் கூறியதாவது:நான் விவசாய குடும்பத்தை சார்ந்தவன். கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் எனது படைப்புகள் கிராமத்தை சார்ந்தவையாக இருக்கிறது. தமிழ் மீடியத்தில் படித்தேன். கல்லுாரியில் பி.டெக்., வேதிப் பொறியியல் படித்தேன். பிறகு கோவையில் அரோமா தெரபி இன்டஸ்ட்ரி துறையில் வேலை பார்த்தேன்.பள்ளியில் படிக்கும்போதே தமிழ் மீதான ஆர்வம் அதிகம் இருந்தது. பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளில் பரிசுகள் வென்றேன். தமிழ் மீதான காதலும் வளர்ந்து கொண்டே வந்தது. தொழில்நுட்ப கல்லுாரியில் 'முத்தமிழ் மன்றம்' என்ற சங்கத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். கல்லுாரியில் 'இளம்பறவை' என்ற பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிடுவார்கள். அதில் எனது கவிதைகளும் கட்டுரைகளும் இடம்பெறும்.
பள்ளி முடித்தவுடன் கல்லுாரி சேரும் அந்த இடைப்பட்ட காலத்தில் முதன் முதலில் கவிதைகள் எழுத துவங்கினேன். என் தாத்தா இறந்த மாதம் பங்குனி. சித்திரை மாதத்தில் துவங்கி 12 மாதங்களை வைத்து பங்குனி வரை அவருக்கு ஒரு அர்ப்பணிப்பாக அக்கவிதைகளை எழுதினேன்.பின்னர் சிறுகதைகள் எழுத துவங்கினேன். கவிதைகள் அனைத்தையும் ஓர் தொகுப்பாக 'ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி' என்ற புத்தக வடிவில் வெளியிட்டேன். இதில் சங்க இலக்கியங்கள் பற்றின குறிப்புகளும், இயற்கையை பற்றியும் எழுதியுள்ளேன். அண்மையில் 'எனதுார் சரித்திரம்' என்ற சிறுகதை தொகுப்பு வெளியானது. 14 கதைகள் கொண்ட இந்நுாலில், தானத்தவத்தின் 50 ஆண்டு கால வரலாற்றை எழுதியிருப்பேன். இப்புத்தகம் வரவேற்பை தந்தது.
நான் பார்த்து வளர்ந்த கிராமம், அதில் வாழ்ந்த மக்கள், எப்படி அறத்துடன் வாழ்கின்றனர், அவர்களின் பழக்கவழக்கங்கள் பற்றி எழுதும்போது மனதில் மகிழ்ச்சி எட்டிப்பார்க்கும். 'மடியேந்தும் நிலங்கள்' எனும் ஹைக்கூ கவிதை நுாலை மதுரையில் நடந்த உலக தமிழ் ஹைக்கூ மாநாட்டில் வெளியிட்டேன். இதில் கிராமத்தில் பயன்படுத்தப்படும் வித்தியாசமான சொற்களை எழுதினேன்.தற்போது வெளியான 'மூதுார்க் காதை' புத்தகம் 14 கதைகளை கொண்டது. 'மூதுார்' என்றால் 'பழமையான ஊர்' என பொருள். தானத்தவத்திற்கும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் என்ன தொடர்பு, பல ஆண்டுகளுக்கு முன் விவசாயம் எப்படி நடந்தது என எழுதி உள்ளேன்.
உதாரணத்திற்கு மாடக்குளம் கண்மாய் மதுரையில் பெரிய கண்மாய். இதனை அக்காலத்து மக்கள் எப்படி பயன்படுத்தினர், இது வரை தெரியாத குறிப்புகள் இதில் இடம்பெறுகிறது. இப்புத்தகத்தில் 85 பக்கங்கள் மட்டும் இருந்தாலும் அதனை எழுத ஓராண்டு காலம் ஆனது.
எனது நோக்கம் நகரத்தில் இருப்பவர்களுக்கு கிராமத்தின் அழகை கதைகள், கவிதைகள் மூலம் கொண்டு செல்வது தான். இன்று இளம் தலைமுறையினர் கிராமத்தின் செய்திகள், அங்கு வாழும் மக்களின் கலாசாரம், தொழில் பற்றி அறிவது அரிதான ஒன்று. இதுவரை கேட்காத வார்த்தைகள், சம்பவங்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தாலே போதும். இதற்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நான் பார்த்த சம்பவங்கள் 70 சதவீதம் மீதமுள்ள 30 சதவீதம் எனது தாத்தா, பாட்டி, அப்பா சொன்ன குறிப்புகள் வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கதைகளாக எழுதியதால் வாசகர்கள் ஆர்வமாக வாசிக்கின்றனர்.எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணதாசன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அதற்கும் மேலாக நான் எழுதுவதற்கு வழிகாட்டியாக இருப்பவர் பெரியகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருக்கும் மகாராசன். விரைவில் சிறுகதை தொகுப்பு, நாவல் ஒன்றையும் வெளியிட திட்டமிட்டுள்ளேன் என்றார்.
இவரை வாழ்த்த 95970 56785ல் தொடர்பு கொள்ளலாம்.