/வாராவாரம்/விருந்தினர் பகுதி/அர்ச்சுனா நதியோரம்... கன்னிசேரி கிராமம்: அந்தக்கால மாட்டுச்சந்தையின் அதிசயங்கள்அர்ச்சுனா நதியோரம்... கன்னிசேரி கிராமம்: அந்தக்கால மாட்டுச்சந்தையின் அதிசயங்கள்
அர்ச்சுனா நதியோரம்... கன்னிசேரி கிராமம்: அந்தக்கால மாட்டுச்சந்தையின் அதிசயங்கள்
அர்ச்சுனா நதியோரம்... கன்னிசேரி கிராமம்: அந்தக்கால மாட்டுச்சந்தையின் அதிசயங்கள்
அர்ச்சுனா நதியோரம்... கன்னிசேரி கிராமம்: அந்தக்கால மாட்டுச்சந்தையின் அதிசயங்கள்
ADDED : ஜன 28, 2024 12:45 PM

விருதுநகர் அருகே அர்ச்சுனா நதிக்கரையோர கிராமம் கன்னிசேரி. வைகாசி மாத பவுர்ணமியில் பெருமாள்சுவாமி அர்ச்சுனா நதியில் இறங்கும் வைபவம் நடைபெறும். அதையொட்டி ஏப்ரல், மே மாதங்களில் கன்னிசேரியில் மாட்டுச் சந்தை களைகட்டிய காலத்தை பசுமையான நினைவுகளுடன் திரும்பி பார்ப்போமா. மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து கட்டை வண்டி பூட்டி மாடுகளை இச்சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருவர். மாடுகள் விற்பனையாகும் வரை தங்கி தாக்குப்பிடிக்க பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, வைக்கோல், தவிடு, மாடுகள் பருக தண்ணீர் தொட்டி (குலுதாடி), சமைத்துச் சாப்பிட அரிசி, பருப்பு, மசால் பொடி, மாற்றிக் கொள்ள ஆடைகளுடன் வருவர். அந்த பகுதியை சேர்ந்த சிலர் நினைவுகளை அசை போட்டனர்...
* சுப்பிரமணி, கன்னிசேரி: கன்னிசேரிக்கு 4 திசைகளிலிருந்தும் போக்குவரத்து வசதி உள்ளது. இதனால் பல மாவட்டங்களிலிருந்து மாடுகளை எளிதில் சந்தைக்கு கொண்டுவர முடிந்தது. அர்ச்சுனா நதியில் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் வரத்து இருக்கும். மாடுகள் தண்ணீர் பருக, விவசாயிகள் குளிக்க வசதியான இடம் அந்நதி.
சிறுவயதில் சந்தையில் இட்லி, அவித்த மொச்சைப் பயறு விற்பனை செய்துள்ளேன். கன்னிசேரி சேவு, ஓலைக் கொட்டானில் வழங்கப்படும் கருப்பட்டி மிட்டாயை சந்தையின்போது விவசாயிகள் வாங்கிச் செல்வர். அக்காலத்திலிருந்து இன்றுவரை அந்த இனிப்பு, காரத்திற்கு வரவேற்பு உள்ளது.
டிராக்டர்களின் வருகையால் மாடுகள் வளர்ப்பு குறைந்தது. இங்கு மாட்டுச்சந்தை கூடுவது 1993-94க்கு பின் படிப்படியாக நின்றுவிட்டது. இன்று அர்ச்சுனா நதியில் ஒருமாதம்கூட தண்ணீரை காண்பது அரிது.
* நடராஜன், மாட்டுத்தரகர், வி.சொக்கலிங்காபுரம்: கன்னிசேரி சந்தையில் கணக்கு வழக்கின்றி கண்ணுக்கு எட்டிய துாரம் காங்கேயம் காளை, மயிலக்காளை, செவலக்காளை, புலிப்போர், கரும்போர், காங்கேயம், லம்பாடி என வகை,வகையான மாடுகளாக காட்சியளிக்கும். பழக்கடை, மிட்டாய்க்கடை, மாடுகளுக்கான கயிறு விற்பனை செய்யும் கடைகள் என கூட்டத்தை பார்க்க ஜெகஜோதியாக இருக்கும். அக்காலத்தில் ஒருஜோடி (2) மாடுகள் விலை ரூ.200 முதல் ரூ.250. பின் ரூ.2000 என விற்பனையானது.
ரூ.5000 க்கு ஒரு ஜோடி மாடு வாங்கினால் அவர் பெரிய நிலக்கிழார்தான். அன்று ஒரு ஜோடி மாடு விற்பனை செய்தால் எங்களுக்கு தரகு கமிஷன் ரூ.50 தருவர்.
இன்று ஒருஜோடி மாடு ரூ.35 ஆயிரம், ரூ.60 ஆயிரம் என ரூ.1லட்சம் வரை விற்பனையாகிறது. கன்னிசேரி சந்தையில் அக்காலத்தில் மாடுகள் தண்ணீர் பருகும் மண் தொட்டி, ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கான மண் பானை போன்றவற்றை தயாரித்து எங்கள் குடும்பம் விற்பனை செய்து வருவாய் ஈட்டியது. செல்வம் கொழிக்கும் இடமாக இருந்தது சந்தை.
இவ்வாறு விவசாயிகள், வியாபாரிகள், உள்ளூர் மக்கள் பயனடைந்ததை நினைவலைகளுடன் பகிர்ந்து கொண்டனர் ஏக்கப்பெருமூச்சுடன்.
மாடுகளின் கால் குளம்பொலி ஓசை, அவற்றின் 'ஜல்ஜல்' மணியோசை, வந்துசென்ற விவசாயிகளின் காலடிச் சுவடுகள் நிறைந்த நினைவுகளை சுமந்தவாறு மவுன சாட்சியாக சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து படர்ந்த அந்த அர்ச்சுனா நதி சலசலப்புடன் ஓடுகிறது, ஆண்டில் எப்போதாவது சில நாட்கள்!