Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/சிந்தனைக் களம்/சிந்தனைக்களம்: 'நான் துாங்கும் போது தொடையில் கயிறு திரித்தனர்' என சொல்லக்கூடாது!

சிந்தனைக்களம்: 'நான் துாங்கும் போது தொடையில் கயிறு திரித்தனர்' என சொல்லக்கூடாது!

சிந்தனைக்களம்: 'நான் துாங்கும் போது தொடையில் கயிறு திரித்தனர்' என சொல்லக்கூடாது!

சிந்தனைக்களம்: 'நான் துாங்கும் போது தொடையில் கயிறு திரித்தனர்' என சொல்லக்கூடாது!

PUBLISHED ON : ஜூன் 25, 2024 12:00 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கடந்த 1973ல், வேலுாரில் காவல் துறை உதவி ஆய்வாளராக தேர்வாகி, பயிற்சியில் இருந்தபோது, சட்டம் மற்றும் நிலைய நிர்வாகம் குறித்து எங்களுக்கு பயிற்சியளித்த அனுபவமிக்க மூத்த அதிகாரிகள் கொடுத்த அறிவுரை, 'நீங்கள் சர்வீஸ் முழுக்க கையூட்டு வாங்காமல் நேர்மையாக இருக்க வேண்டுமென்பதில்லை; பதவியேற்றதிலிருந்து ஐந்து ஆண்டுகள் நேர்மையாக இருங்கள்.

'அப்போது தான் உங்களுக்கு பொது மக்கள் மத்தியில் மட்டுமல்ல; உங்களின் கீழ் பணியாற்றும் காவலர் தலைமைக் காவலர்கள், உங்களுக்கு மேலுள்ள அதிகாரிகள் மத்தியிலும், உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் ஆதரவும் இருக்கும்.

நேர்மை கோட்பாடு


நீங்கள் வேலை கற்றுக்கொள்ள முடியும். காசுக்கு ஆசைப்பட்டால், உன் மரியாதை பறிபோய்விடும். அதிலும் நீ, சாராயத்தில் காசு பார்க்க நினைத்தால், சாராயம் போல் உங்கள் பெயரும் நாறிப் போய் விடும்; மறந்து விடாதீர்கள்' என்பதே!

அறிவுரை கூறிய எங்கள் ஆசானின் பெயர் சேஷாத்ரி. அந்த அறிவுரையின் பின்னணியில் இருந்த சூட்சுமத்தை, பின்னாளில் தான் நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

நேர்மையாக பணியாற்றும்போது மக்கள் நம் மீது காட்டும் மரியாதை, நாம் சாதாரணமாக கடமையை உணர்ந்து செய்யும் செயல்கூட வெகுவாக பாராட்டப்படுவதுடன், சில சமயங்களில் மிகைப்படுத்தி பேசப்படுவதையும், நம் மீது எழும் பொய் புகார்களில் உயர் அதிகாரிகள் நம்மை விட்டுக்கொடுக்காமல் காட்டும் ஆதரவு.

இவற்றை அனுபவித்து, மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பான சூழ்நிலையிலும் பணியாற்றும் அனுபவத்தை பெற்றவர்களுக்கு, அந்த சூழ்நிலையை எதற்காகவும் இழக்க மனம் வராது என்பது தான் அந்த சூட்சுமம்.

இதனால், எங்களுடைய நேர்மை கோட்பாடு ஐந்து ஆண்டுகள் என்ற எல்லையையும் தாண்டி தொடர்ந்தது. எனக்கு பல பாராட்டுகளும், முதல்வர் மற்றும் ஜனாதிபதி விருது வரை பெறும் வாய்ப்பும் கிடைத்தன.

என்னை போன்றும், என்னை விடவும் சிறப்பாக பணியாற்றியவர்களும், எங்களுக்கு முன்னும் பின்னும் பலர் இருந்தனர்; தற்போதும் இருக்கின்றனர்.

மதுவிலக்கை பொருத்தவரை, எந்த அரசும் முழுமையாக வெற்றி பெற இயலாத ஒரு முயற்சி தான். காரணம், மதுப்பழக்கம் மக்களிடம் அந்த அளவுக்கு புரையோடி போய்விட்டது. குடிப்பவர்களை கேவலமாக பார்த்த நிலை போய், குடிக்காதவர்களை வியப்பாக பார்க்கும் நிலைக்கு சமுதாயம் மாறிவிட்டது.

சில குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, மது அருந்துவது, தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. எனவே தான், கள்ளச்சாராய வியாபாரம் என்பது பணம் கொழிக்கும் வியாபாரமாகிவிட்டது.

மது அருந்துபவர்களால், பொது அமைதி கெடுகிறது; சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என்ற நிலையைத் தாண்டி, அரசின் மது விற்பனை தான், அதன் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கிறது என்ற நிலைக்கு வந்து விட்டோம்.

அரசு மது விற்பனை நிலையங்களில் மது விற்பனை அளவு, தொடர்ந்து அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு, குறைந்தால் உயர் அதிகாரிகளால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

சிகிச்சை


அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படலாம் என்று சந்தேகித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது, கள்ளக்குறிச்சி சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று விசாரணையில் உறுதிப்படுத்த வேண்டும்.

குடித்துவிட்டு, வீட்டில் மனைவி - குழந்தைகளுடனோ அல்லது பொது இடத்திலோ தகராறு செய்பவர்களை கைது செய்து, சிறையில் அடைத்து நீதிமன்றத்தில் அபராதம் விதித்தால், அவரது குடும்பம் தான் பாதிக்கப்படும். மாறாக மதுப் பழக்கத்தை போக்கும் சிகிச்சை அளிக்கும் பிரிவை, அரசு மருத்துவமனைகளில் நிறுவி, அங்கு சேர்த்து சிகிச்சை அளிக்கலாம்.

அரசு மதுக்கடை வருமானத்தைப் பற்றி பொருட்படுத்தாமல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இந்த நடவடிக்கைக்கு பயந்து பலர், குடிப் பழக்கத்தை விட வாய்ப்பு இருக்கிறது. சாராயச் சாவுக்கு வழங்கும் நிதி உதவிக்கு ஆகும் செலவைவிட இது குறைவு தான். ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது, நடிகர் மயில்சாமி சொன்ன நகைச்சுவை கதை ஒன்று என் நினைவுக்கு வருகிறது.

ஒரு தொழிற்சாலையில், யூனியன் மீட்டிங் நடந்தது; நாலைந்து தலைவர்கள் பேசினர். கூட்டம் முடிந்து தலைவர்கள் ஐவரும், எதிரே இருந்த டீக்கடைக்கு சென்று டீ ஆர்டர் செய்தனர். ஒருவர் தனக்கு டீ ஸ்ட்ராங்கா வேண்டுமென்றார்; அடுத்தவர் தனக்கு லைட்டா வேணும் என்றார்.

மூன்றாமவர் தனக்கு இனிப்பு குறைவாகவும்; நான்காவது ஆள் இனிப்பு அதிகமாகவும் வேண்டுமென்றார். ஐந்தாவது நபர், தனக்கு எல்லாம் நார்மலா இருக்கணும் என்கிறார்.

டீக்கடைக்காரர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, 'ஒரு சிங்கிள் டீயிலேயே உங்களுக்குள் ஒரு ஒற்றுமையில்லை; ஐந்து பேரும் ஐந்து விதமாக இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் தலைவர்களாக இருந்து, எந்த முடிவை ஒற்றுமையாக ஒருமித்து எடுக்கப் போகிறீர்கள்?' என்று, தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டார்.

அவர்களில் ஒருவர், 'என்ன கடைக்காரரே... என்ன யோசனை?' என்று கேட்டார். 'ஒன்றுமில்லை, நீங்கள் சொன்னதை நினைவுபடுத்திக் கொண்டேன்' என்றாராம்.

அரசு பண உதவி


கள்ளக்குறிச்சியில் பலியானோரின் குடும்பத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து அரசு பண உதவி வழங்கியதை, சிலர் வரவேற்கின்றனர்; பலர் எதிர்க்கின்றனர். சிலர் இன்னும் அதிகம் கொடுக்க வேண்டுமென்கின்றனர்; பலர் கொடுத்ததே அதிகம் என்கின்றனர்.

மதுவிலக்குக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் எந்த அரசியல் கட்சித் தலைவராவது, 'குடிப் பழக்கம் உள்ளவர்கள் அல்லது குறைந்தபட்சம் குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், என் கட்சியில் இருக்கக் கூடாது' என்று அறிவிக்க முடியுமா?

இருளைப் போக்கும் விளக்குக்கு, தன் கீழ் இருக்கும் நிழலைப் போக்கும் சக்தி கிடையாது என்பது தானே உண்மை!

ஆனால், அந்த பழக்கம் உள்ள தம் கட்சிக்காரர்களையும், பொதுமக்களில் அப்படி மதுவுக்கு அடிமையானவர்களையும் சிகிச்சை மையங்கள் மூலமாக சிகிச்சையளித்து திருந்தி வாழச் செய்தால், நிச்சயமாக அந்த கட்சி மக்கள் மத்தியில் பிரபலமாகிவிடும்.

மதுக் கடைகளை மூட, போராட்டம் தேவையில்லை; எரிவதை அடக்கினால், கொதிப்பது தன்னால் நின்றுவிடும்.

'குடி குடியைக் கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல்நலத்தைக் கெடுக்கும்' என்று, எல்லாருக்கும் தெரிந்த உண்மையை, மது பாட்டில் மீது மட்டுமின்றி, சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை, மது அருந்துவது போன்ற காட்சிகளில் கூட எச்சரிக்கை விடுக்கின்றனர். அதற்குப் பிறகும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாவது, தற்கொலை முயற்சிக்கு சமம்.

இன்று தற்கொலை செய்துகொள்ளும் எல்லாருமே, யாரோ ஒரு தனிநபரால் அல்லது சமுதாய சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் தான். அவர்களின் மரணமும், அவர்களை சார்ந்திருந்தவர்களின் எதிர்காலத்தை பாதிக்கத்தான் செய்கிறது.

'கோப்ரா எபெக்ட்'


அவர்களுக்கெல்லாம் அரசு இழப்பீடு கொடுக்கத் துவங்கினால், 'கோப்ரா எபெக்ட்' என்ற தவறான விளைவை ஏற்படுத்திவிடும்.

பத்தொன்பதாம் நுாற்றாண்டின் ஆரம்பத்தில், டில்லி பகுதியில், நாகப்பாம்பின் தொல்லை அதிகமாக இருந்ததாம். அதனால் அப்போதைய அரசு, செத்த நாகப்பாம்புக்கு ஒரு விலை நிர்ணயித்து, பாம்பை அழிப்பவர்களுக்கு பணம் கொடுத்து, பாம்புகளின் உடலை வாங்கி அழித்தது.

உடனே மக்கள், காசுக்கு ஆசைப்பட்டு, வீட்டிலேயே பாம்பை வளர்த்து சாகடித்து, காசாக்க ஆரம்பித்துவிட்டனர். அரசின் கவனத்திற்கு இது தெரிய வந்ததும், உத்தரவை ரத்து செய்து பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டது.

வளர்த்தவர்கள் எல்லாரும் பாம்புகளை திறந்துவிட, திரும்பவும் பாம்புத் தொல்லை, முன்பை விட அதிகமாகிவிட்டதாம். இதுதான் கோப்ரா எபெக்ட்!

நல்ல நோக்கத்துக்காக கொண்டு வரும் விதிமுறைகள் ஏற்படுத்தும் தவறான விளைவுகளை இந்த பெயரில் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் தான், கள்ளச்சாராய சாவைத் தடுக்க, 'மலிவு விலை மது' என்று ஆரம்பித்து, இந்தியாவில் தயாரிக்கப்படும் அன்னிய நாட்டு மது வகைகளை புழக்கத்தில் விட, குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.

அவர்களை கவர்ந்திழுக்க போட்டி போடும் கள்ளச்சாராய வியாபாரிகள், விளைவைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், போதையை அதிகப்படுத்தும் ரசாயன பொருளை கலப்படம் செய்யத் துணிகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் மெத்தனாலில் தண்ணீரைக் கலந்து கள்ளச் சாராயமாக ஆக்கியிருக்கின்றனர்.

இது, ஒருவர் மீது மற்றொருவர் பழியைப் போட்டு தப்பிக்கும் விஷயமே அல்ல. தன் கணவனை, மகனை, தந்தையை குடிப்பழக்கத்துக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும், கடமையும் குடும்ப உறுப்பினர்களுக்கு உள்ளது.

குண்டர் தடுப்பு சட்டம்


தங்கள் பொறுப்பில் உள்ள பகுதியில், கள்ளச்சாராயம் தலைதுாக்காமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, காவல் துறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரிடம் முழுதுமாக ஒப்படைக்கப்பட்டு, உரிய அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அவர்களது பரிந்துரையின்படி, கள்ளச்சாராய வியாபாரியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவலில் வைக்கும் உத்தரவை தருவதற்கு கலெக்டர் காத்துக் கொண்டிருக்கிறார். அப்படியிருக்கும் போது, அமலாக்கப் பிரிவால் தன் கடமையை செய்ய இயலவில்லை என்றால், அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

முதல் காரணம், அவர்கள் தங்கள் அதிகாரத்தை அடகு வைத்து, வட்டி வசூல் செய்து கொண்டிருக்கின்றனரா அல்லது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையில் தீவிரமாக முழு கவனத்தையும் செலுத்த முடியாத அளவுக்கு, அவர்கள் மற்றைய பணிகளுக்கு உபயோகப்படுத்தப் படுகின்றனர்.

அதுவும் இல்லையெனில், கள்ளச்சாராய வியாபாரி செல்வாக்கு மிக்கவராக இருந்து, ஊர்க்காரர்கள், கிராம நிர்வாக அதிகாரியில் துவங்கி, ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியின் உள்ளூர் தலைவர் முதல், குரல் கொடுப்பதற்கென்றே காத்துக் கொண்டிருக்கும் எதிரணி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று தங்களுக்கு தாங்களே முத்திரை குத்திக் கொண்டிருக்கிற பொதுநலவாதிகள் என்று அத்தனை பேரையும் தன் பணத்தால், செல்வாக்கால், மிரட்டலால் கட்டிப் போட்டிருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல், யாராலும் இத்தகைய சமூக விரோத செயலில் ஈடுபட முடியாது.

இன்று ஒரு சாமானிய மனிதன் தன் சொந்த நிலத்தில், சிரமப்பட்டு கடன் வாங்கி வீடு கட்டவோ, புதுப்பிக்கவோ முயற்சித்தால், அவன் எத்தனை தலையீடுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.

தகவல் பரிமாற்றம்


அப்படியிருக்க, ஒரு அபாயகரமான சமூகவிரோத செயல் எங்களை மீறி நடந்துவிட்டது என்று சொன்னால், 'நான் துாங்கும்போது என் தொடையில் எனக்கு தெரியாமல் கயிறு திரித்து விட்டனர்' என்று, கிராமத்தில் பயன்படுத்தப்படும் சொலவடைக்கு நிகராக, இந்த சம்பவம் எந்த அளவுக்கு உண்மை என்று, கைது செய்யப்பட்ட ஒருவரின் வாக்குமூலமாக செய்தித்தாள்களில் வந்துள்ளதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இப்போதுள்ள சமூக ஊடகங்களின் தகவல் பரிமாற்றத்தில், யாரும் எந்த விஷயமும் தங்களுக்கு தெரியாது என்று சொல்வதற்கில்லை. நாம் தேடாமலே நமக்கு உதவக்கூடியது மட்டுமின்றி, உதவாக்கரையான விஷயங்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.

எனவே, செயலாற்ற வேண்டிய அதிகாரிகள் துாங்கினாலும் அல்லது துாங்குவது போல் நடித்தாலும், அவர்களை தட்டியெழுப்பி அல்லது அவர்கள் மீது தண்ணீர் கொட்டியெழுப்பி, அவர்களை செயல்பட வைத்திருக்க வேண்டிய பொறுப்பு, அவர்களுக்கு மேலுள்ள உயர் அதிகாரிகள் மட்டுமின்றி, இன்று குதிரை ஓடிய பிறகு லாயத்தை பூட்டுவதுபோல், 50 உயிர்கள் பலியான பிறகு கூட்டத்தைக் கூட்டி கோஷம் எழுப்பும் அரசியல்வாதிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் உள்ளது.

மா. கருணாநிதி, காவல்துறை கண்காணிப்பாளர், ஓய்வு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us