'இச்' தானே இருந்துவிட்டுப் போகட்டும்
'இச்' தானே இருந்துவிட்டுப் போகட்டும்
'இச்' தானே இருந்துவிட்டுப் போகட்டும்
PUBLISHED ON : பிப் 06, 2024 12:00 AM
![]() |
கவிஞர் கண்ணதாசனின் புகழ் பாடும், காலங்களில் அவன் வசந்தம் என்ற தலைப்பில்,'இசைக்கவி ரமணன்' நுாறு நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளார்.
கண்ணதாசனை நேசிக்கும் பிரபலங்களை வரவழைத்து, அவர்களுடன் கண்ணதாசன் பற்றி பாட்டும் பேச்சுமாக இசைக்கவி நடத்திச் செல்லும் இந்த நிகழ்ச்சியை ஆறோடு நிறுத்திக் கொள்வோம் என்று நினைத்தார் ஆனால் சுவாரசியம் காரணமாக நிகழ்ச்சி நுாறைத் தொட்டுவிட்டது.
நுாறாவது நிகழ்வுக்கு அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பட்டிமன்ற புகழ் பேராசிரியர் ஞானசம்பந்தன் வந்திருந்தார், அவர் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர் என்பதை இந்தக் கூட்டத்திலும் நிரூபித்தார்.
![]() |
எனக்கு ஒருவர் திருமண பத்திரிகை வைத்தார் பத்திரிகையை வாங்கிக் கொண்டு அவரை அனுப்பியிருக்க வேண்டும், அதைவிட்டு பத்திரிகையை படித்துப் பார்த்துவிட்டு இதில் திருவளர்ச் செல்வன் என்று இருக்கிறது இலக்கணப்படி இதில் 'ச்' வரக்கூடாது என்றேன்.
உடனே பத்திரிகை வைத்தவர் என்னை பத்திரிகை அச்சடித்தவரிடம் கூட்டிக்கொண்டு போய்விட்டுவிட்டார்.அவரிடமும் இதையே சொன்னேன்.
அவரோ நான் நாற்பது வருடமாக பத்திரிகை அடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் 'ச்' போட்டுத்தான் அடிக்கிறேன் யாருமே தவறு என்று சொல்லவில்லை என்று சொல்லி நாற்பது வருடமாக அடித்த பத்திரிகை சாம்பிளை துாக்கி என் முன் போட்டார்.
இது என்னடா வம்பா போச்சு என்று நினைத்த நான், திருமண விஷயம்தானே 'ச்' இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டேன் என்று அந்த 'ச்' சிற்கு தனி அழுத்தம் கொடுத்துப் பேச அரங்கம் சிரிப்பலையில் மிதந்தது.
கண்ணதாசன் பாடல் எழுதி சம்பாதித்ததை விட அவர் பாடல்களைப் பற்றி பேசி சம்பாதித்த சொற்பொழிவாளர்கள் அதிகம், நியாயமாகப் பார்த்தால் கண்ணதாசன் குடும்பத்தாருக்கு அதில் பங்கு கொடுக்கவேண்டும்
ஒரு பள்ளித்தாளாளர் என்னை அவரது பள்ளியில் பேசுவதற்கு காரில் அழைத்துச் சென்றார் போகும் வழியில் மாணவர்களிடம் பகவத்கீதை,திருமூலர்,தாயுமானவர் பற்றியெல்லாம் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நானும் என் மனதிற்குள் நிறைய தயாரிப்புகளுடன் போனேன்
நான் பேச வேண்டிய அறைக்குள் நுழைந்து பார்த்தால் உள்ளே எல்கேஜி.,யூகேஜி.,படிக்கும் குழந்தைகளே இருந்தனர், இவர்களுக்கு திருமூலரும்,தாயுமானவரும் எப்படி புரியும், முயல்,ஆமை கதைகளைச் சொல்லி சமாளித்தேன்.
ஒரு கிராமத்தில் எண்ணி இருபது வீடுகளே இருந்தது வீட்டிற்கு இரண்டு பேர் என்று நாற்பது பேர் கூடியிருந்தனர், அதுவே அதிகம்தான் ஆனால் என்னை பேச அழைத்துச் சென்றவர் 'நாம கொஞ்சம் லேட்டா வந்துட்டோம் இப்பதான் ஆயிரம் பேர் எழுந்திருச்சு போனாங்களாம்' என்று கூசாமல் சொல்வார், நானும் பேசாமல் கேட்டுக் கொள்வேன்.
கடந்த காலத்தையும்,எதிர்காலத்தையும் முன்வைத்து பாடுவது என்பது எளிது, பெரும்பாலான பாடல்கள் அப்படித்தான் இருக்கின்றன, ஆனால் நிகழ்காலத்தை முன்னிலைப்படுத்தி எழுதுவது சிரமம் ஆனால் அதை சிரமமின்றி எழுதியவர் கண்ணதாசன் என்று கூறிவிட்டு, அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது என்ற பாடலைச் சொல்ல, அதை இசைக்கவி பாடிக்காட்டிட அரங்கம் மீண்டுமொருமுறை கைதட்டலால் அதிர்ந்தது.
ஒரு படத்தில் கடன்காரனுக்கு பயந்து முத்துராமன் ஓடி வருவார் ,அவரை நிறுத்தி எம்ஆர் ராதா விஷயத்தைக் கேட்பார், பின் 'கடனைத்திருப்பிக் கேட்கிற கடன்கார நாய்ட்ட எல்லாம் எதற்கு கடன் வாங்குறே..போ போ போய் ஒரு செக் கொண்டுவந்து கொடு அது செல்லாதுன்னு திரும்பி வர்ரதுக்குள்ளே நாம என்னன்னவோ செய்திடலாம்' என்பார்.
கண்ணதாசனுக்கு தத்துவம்,காதல் பாடல்கள் வரும் ஆனால் நகைச்சுவை பாடல்கள் வராது என்று யாரும் நினைத்துவிடாதீர்கள் என்று சொல்லி அவர் எழுதிய நகைச்சுவை படப்பாடல்களை எடுத்துக் காட்டினார்.
கண்ணதாசனை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு போய் அதிகம் சேர்க்கவேண்டும் அதற்கு இது போன்ற நிகழ்வினை இங்கு மட்டும் (சென்னை)நடத்திடாமல் ஊர்,ஊராக..கிராமம்,கிராமமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
-எல்.முருகராஜ்