முடிஞ்சுதடா சாமி அம்பானி வீட்டு கல்யாணம்.
முடிஞ்சுதடா சாமி அம்பானி வீட்டு கல்யாணம்.
முடிஞ்சுதடா சாமி அம்பானி வீட்டு கல்யாணம்.
PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM


முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் -ராதிகா திருமணம் நிச்சயமான நாள் முதலே இதே பேச்சாக இருந்த ஊடகத்தினர் கடந்த ஒரு மாதமாக இதன் உச்சத்திற்கே சென்றனர்.அதற்கேற்ப திருமண முன் நிகழ்வு, பின் நிகழ்வு, நிச்சயதார்த்தம், வரவேற்பு என்று தினம் ஒரு நிகழ்வை நடத்தி மும்பையை அதிரவைத்துவிட்டது அம்பானி குடும்பம்.அதிலும் அனன்யா என்ற நடிகை தனது ஜாக்கெட்டிலேயே திருமண வாசகத்தை பொருத்தியிருந்தார்.
நாட்டில் உள்ள திரை உலக பிரமுகர்கள்,விளையாட்டு வீரர்கள்,பிரபலங்கள் என பெரும்பாலானவர்கள் ஆஜராகிவிட்டனர்.வந்தவர்களுக்கு அப்படி ஒரு கவனிப்பு அன்பளிப்பாக கொடுத்த கைக்கெடிகாரம் ஒன்றின் விலையே ஒன்றரைக்கோடி ரூபாயாக்கும்.
அதிலும் நடிகைகள் திரையில் கூட இவ்வளவு குறைந்த உடைகளுடன் தோன்றியிருப்பார்களா? என்பது சந்தேகமே, அந்த அளவிற்கு ஆடைக்குறைப்புடன், மிகு கவர்ச்சியுடன் தோன்றி பார்வையாளர்களை அசரவைத்தனர்.முழுமையாக உடம்பை மூடிக்கொண்டு வந்தவர் யோகா குரு ராம்தேவ்தான்.
ரஜினிகாந்த் மீண்டும் ஒரு முறை குடும்பத்துடன் ஆஜராகிவிட்டார்,பெரும்பாலான நட்சத்திரங்கள் தத்தம் இணையருடன் வந்திருந்தனர்.திருமண மண்டபத்தின் வெளியே நடைமேடையில் நின்றபடி பொருத்தம் பார்த்து பூரித்துப் போனது ரசிகர் பட்டாளம்.
காசு இருக்கிறது என்பதற்காக எவ்வளவு ஆடம்பரமாக திருமணம் நடத்துகிறார் பாருங்கள் என்று யாராவது சொல்லிவிடப்போகிறார்கள் என்பதற்காக ஐம்பது ஏழை ஜோடிகளை தேர்வு செய்து தங்கள் காசில் திருமணம் நடத்தி புண்ணியம் தேடிக் கொண்டனர், ஆனால் இதற்காக ஆன மொத்த செலவும் மணமகள் அணிந்திருந்த ஒரு ஜோடி வைர தோட்டிற்கு இணையாகாது என்பது வேறு விஷயம்.
அசாம் வெள்ளம்,ஜம்முவில் நிலச்சரிவு,கத்துவில் பயங்கரவாதிகள் தாக்குதல்,இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி பெருவாரி வெற்றி என்று எல்லா செய்திகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு அம்பானி வீட்டு கல்யாணமே முன்னால் நின்றது, ஒரு வழியாக அது நிறைவுக்கு வந்துவிட்டது.





-எல்.முருகராஜ்.